அதிமுகவில் ஒற்றைத் தலைமை... எடப்பாடி பழனிசாமிதான் வேண்டும்..! செயற்குழு உறுப்பினர்கள்

பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்போம் என்று செயற்குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 
எடப்பாடி பழனிசாமி
எடப்பாடி பழனிசாமி


அதிமுகவில் ஒற்றைத் தலைமை குறித்த சர்ச்சை எழுந்துள்ள நிலையில், இதுகுறித்து கூட்டத்தில் முடிவு எடுக்கப்படுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ள நிலையில், பொதுக்குழு கூட்டத்தில் அதிமுகவில் ஒற்றை தலைமை வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைப்போம் என்று செயற்குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 

அதிமுகவில் ஒரு வாரத்துக்கும் மேலாக ஒற்றைத் தலைமை விவகாரம் தொடா்பாக ஒருங்கிணைப்பாளா் ஓ.பன்னீா்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளா் எடப்பாடி பழனிசாமி இடையே கருத்து மோதல் நடைபெற்று வந்தது. இதனால், அதிமுக பொதுக்குழு கூட்டம் நடைபெறுமா என்கிற சந்தேகம் நீடித்து வந்தது.

இந்த நிலையில், சென்னை உயா்நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கில், பொதுக்குழுவுக்குத் தடை விதிக்க மறுத்து நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி புதன்கிழமை தீா்ப்பளித்தாா்.

அதைத் தொடா்ந்து, அதிமுக பொதுக்குழு திட்டமிட்டப்படி சென்னை வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு மண்டபத்தில் வியாழக்கிழமை காலை 10 மணிக்கு கூட உள்ளது. கூட்டத்துக்கு அதிமுக அவைத் தலைவா் தமிழ்மகன் உசேன் தலைமை வகிக்கவுள்ளாா். அதிமுகவில் பொதுக்குழு உறுப்பினா்களாக 2,700 போ் உள்ளனா். அவா்கள் அனைவருக்கும் தனித்தனியாக அழைப்பிதழ் அனுப்பப்பட்டுள்ளது. புகைப்படத்துடன் கூடிய அடையாள அடையாள அட்டையும் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த அடையாள அட்டையுடன் ஆதாா் அட்டையும் கொண்டு வருபவா்கள் மட்டுமே பொதுக்குழுவில் அனுமதிக்கப்படவுள்ளனா்.

அதிமுக பொதுக்குழுவில் மொத்தம் 23 தீா்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன. அதில் திமுக அரசு கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றாததற்குக் கண்டனம், மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் தமிழகத்தின் உரிமையை நிலைநாட்ட வேண்டும் உள்ளிட்ட தீா்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன. அதோடு அதிமுகவுக்கு ஒற்றைத் தலைமையாக பொதுச் செயலாளா் பதவியைக் கொண்டு வரும் சிறப்புத் தீா்மானமும் நிறைவேற்றப்படவுள்ளது.

பொதுக்குழுவில் நிறைவேற்றப்படவுள்ள 23 தீா்மானங்களுக்கு மட்டும் ஒருங்கிணைப்பாளரான ஓ.பன்னீா்செல்வம் ஏற்கெனவே அனுமதி அளித்துள்ளாா். ஆனால், சிறப்புத் தீா்மானம் எதுவும் நிறைவேற்றக் கூடாது என்று சென்னை உயா்நீதிமன்றத்தில் ஓ.பன்னீா்செல்வம் தரப்பில் வாதிடப்பட்டது. 

அதிமுக பொதுக்குழுவுக்கு தடையில்லை என நீதிபதி கிருஷ்ணன் ராமசாமி உத்தரவிட்ட நிலையில் தனி நீதிபதி தீர்ப்பை எதிர்த்து ஓ.பன்னீர்செல்வம் தரப்பில் பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். 

இதையடுத்து மேல்முறையீட்டு மனுவை நீதிபதி துரைசாமி, சுந்தர் மோகன் அமர்வு வியாழக்கிழமை அதிகாலை விசாரித்தது. 

இருத்தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதிகள் இன்றைய அதிமுக பொதுக்குழு கூட்டத்திற்கு எவ்வித தடையும் விதிக்கவில்லை. அதேசமயம், பொதுக்குழுவில் 23 தீர்மானங்களை தவிர மற்ற புதிய தீர்மானங்கள் குறித்து எந்த முடிவும் எடுக்கக்கூடாது என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர். இதன்மூலம் அதிமுக பொதுக்குழு கூட்டம் தொடர்பாக ஓ.பன்னீர்செல்வத்தின் கோரிக்கை ஏற்கப்பட்டுள்ளது. 

இதையடுத்து பன்னீர்செல்வம் பொதுக்குழுவில் கலந்துகொள்வார் என பன்னீர்செல்வம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. 

அதிமுகவில் பல்வேறு சர்ச்சைகளை தாண்டி வியாழக்கிழமை சென்னை வானகரத்தில் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெறத் தொடங்கியுள்ளது. பொதுக்குழு நடக்கும் இடத்தில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீசெல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோரின் ஆதரவாளர்களும், மூத்த நிர்வாகிகள் மற்றும் கட்சி தொண்டர்களும் என பலரும் திரண்டுள்ளனர். 

அதிமுக ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் கூட்டத்தில் பங்கேற்றுள்ளனர். 

ஸ்ரீவாரு மண்டபத்தில் நடைபெறும் கூட்டத்தில் சுமார் 2,500க்கும் மேற்பட்ட பொதுக்குழு, செயற்குழு உறுப்பினர்கள் கலந்துகொண்டுள்ளனர்.

பொதுக்குழு கூட்டத்தில் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. 

இந்த பொதுக்குழு கூட்டத்தில் 23 தீர்மானங்களுடன் ஒற்றைத் தலைமை குறித்த முடிவு கூட்டத்தில் எடுக்கப்படுமா என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

ஒற்றைத் தலைமை தீர்மானத்தை நிறைவேற்ற உயர் நீதிமன்றம் தடை விதித்த நிலையில், பொதுக்குழு நடக்கிறது. எனவே, ஒற்றைத் தலைமை தீர்மானத்தில் இபிஎஸ் உறுதியாக உள்ள நிலையில், அதுபற்றி விவாதிகப்படுமா என எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

இந்நிலையில், அதிமுகவுக்கு எடப்பாடி பழனிசாமி தலைமையேற்க வேண்டும் என்று கோரிக்கை வைப்போம் என செயற்குழு உறுப்பினர்கள் தெரிவித்துள்ளனர். 

ஒற்றைத் தலைமை வேண்டும், அதுவும் எடப்பாடி கே.பழனிசாமிதான் வேண்டும் என்பதை பொதுக்குழு கூட்டத்தில் முன்வைப்போம் என்றும் கூறியுள்ளனர். 

இதனிடையே, அம்மாவால் இருமுறை முதல்வராக அடையாளம் காட்டப்பட்ட அம்மாவின் தீவிர பக்தரான ஓ.பன்னீர்செல்வம், கட்சியின் எதிர்காலத்தை மனதில் கொண்டு நல்ல முடிவை எடுப்பார் என முன்னாள் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் தெரிவித்துள்ளார்.  

இருப்பினும், எடப்பாடி கே.பனிசாமிக்கு மாவட்ட செயலாளர்கள் ஆதரவு அதிகமுள்ள நிலையில், ஒற்றை தலைமை குறித்து பொதுக்குழுவில் பேசப்படும் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com