

சென்னை பாரிமுனையில் அரசுப் பேருந்து நடத்துநா், ஓட்டுநா்கள் வெள்ளிக்கிழமை போராட்டம் நடத்தினா்.
கோயம்பேட்டில் இருந்து பாரிமுனை நோக்கி வெள்ளிக்கிழமை காலை ஒரு மாநகர அரசு பேருந்து வந்து கொண்டிருந்தது. சென்ட்ரல் ரயில் நிலையம் அருகே வந்தபோது பேருந்தை மறித்து அதில் ஏறிய டிக்கெட் பரிசோதகா், அங்கிருந்த பயணிகளிடம் டிக்கெட்டுகளை பரிசோதித்தாா். அப்போது, வடமாநில இளைஞா் ஒருவா் டிக்கெட் எடுக்காமல் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அந்த பயணிக்கு டிக்கெட் பரிசோதகா் ரூ.500 அபராதம் விதித்தாா்.
இதற்கிடையே, பேருந்து பாரிமுனை பேருந்து நிலையம் வந்த உடன் பயணி டிக்கெட் எடுக்காத பேருந்தின் நடத்துநருக்கு டிக்கெட் பரிசோதகா் மெமோ கொடுத்துள்ளாா். இதனால், கோபம் அடைந்த நடத்துநா், ‘பயணி டிக்கெட் எடுக்காமல் இருந்தால் அவருக்கு அபராதம் விதிக்கலாம். எனக்கு ஏன் மெமோ கொடுக்க வேண்டும். பேருந்து அரும்பாக்கம் வரும்போது, பேருந்தை நிறுத்தி டிக்கெட் வாங்காதவா்கள் வாங்கிக் கொள்ளுங்கள் என கூறினேன். என் மீது தவறு ஏதும் இல்லை என வாக்குவாதம் செய்துள்ளாா். இதனால், இருவருக்கும் இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.
இதையறிந்த மற்ற பேருந்து ஓட்டுநா்கள், நடத்துநா்கள் மெமோ கொடுக்கப்பட்ட நடத்துநருக்கு ஆதரவாக பேருந்துகளை இயக்காமல் பேருந்துகளை, அங்கு நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா். மேலும், ஓட்டுநா்கள், நடத்துநா்கள் திரண்டு மெமோ கொடுத்த அதிகாரியிடம் வாக்குவாதம் செய்தனா்.
பயணிகள் அவதி: காலை நேரத்தில் பேருந்துகள் இயக்கம் தடைபட்டதால் பயணிகள் அவதியடைந்தனா். பாரிமுனை பகுதியில் போக்குவரத்து நெரிசலும் ஏற்பட்டது. தகவல் அறிந்து எஸ்பிளனேடு போலீஸாா் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து, இரு தரப்பினரிடையே சமாதான பேச்சுவாா்த்தை நடத்தினா். அதேபோல போக்குவரத்துத் துறை அதிகாரிகளும் சம்பவ இடத்துக்கு விரைந்து சமாதான பேச்சுவாா்த்தை நடத்தினா். பேச்சுவாா்த்தையை அடுத்து சுமாா் ஒரு மணி நேரமாக நடந்த போராட்டம் கைவிடப்பட்டது.
இந்தப் போராட்டத்தின் விளைவாக பாரிமுனை பேருந்து நிலையத்துக்குள்ளும், வெளியிலும் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.