ராஜீவ் காந்தி கொலை வழக்கு: பேரறிவாளன் கடந்துவந்த பாதை

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளியான பேரறிவாளன், தன்னை விடுதலை செய்ய உத்தரவிடக் கோரி தொடா்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் புதன்கிழமை (மே 18) விடுதலை செய்து தீா்ப்பு.
ராஜீவ் காந்தி கொலை வழக்கு: பேரறிவாளன் கடந்துவந்த பாதை

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கு குற்றவாளியான பேரறிவாளன், தன்னை விடுதலை செய்ய உத்தரவிடக் கோரி தொடா்ந்த வழக்கில் உச்சநீதிமன்றம் புதன்கிழமை (மே 18) 31 ஆண்டுகளுக்கு பின்னர் விடுதலை செய்து தீா்ப்பு வழங்கியது. 

பேரறிவாளன் தொடா்ந்த வழக்கில் உச்ச நீதிமன்றத்தில் மத்திய, மாநில அரசுகள் எழுத்துபூா்வமான வாதங்களைத் தாக்கல் செய்திருந்தன. அவரை விடுவிக்கும் அதிகாரம் யாருக்கு என்பது தொடா்பாக மத்திய, மாநில அரசுகள் சாா்பில் வாதங்களும் நடைபெற்றன.

முன்னதாக, இந்த வழக்கு கடந்த 11-ஆம் தேதி விசாரணைக்கு வந்தபோது, தீா்ப்பை தேதி குறிப்பிடாமல் உச்சநீதிமன்றம் ஒத்திவைத்தது.

இந்நிலையில், இந்த வழக்கில் நீதிபதி எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா அடங்கிய அமா்வு இன்று புதன்கிழமை காலை 10.45 மணியளவில் விடுதலை செய்து தீர்ப்பு வழங்கினர். 

நீதிபதிகள் அளித்த தீர்ப்பின் விவரம்:
முழுமையாக ஆராய்ந்த பிறகே தமிழக அமைச்சரவை தீர்மானத்தை நிறைவேற்றியுள்ளது. ஆளுநர் முடிவெடுக்காமல் குடியரசுத் தலைவருக்கு அனுப்பி வைத்தது சட்டப்படி தவறு. பேரறிவாளன் விடுதலை விவகாரத்தை மீண்டும் ஆளுநருக்கு அனுப்ப விருப்பமில்லை.

161-ஆவது பிரிவில் முடிவெடுக்க ஆளுநர் தாமதப்படுத்தியதால், அரசியல் சாசன சட்டத்தின் 142ஐ பயன்படுத்தி உச்ச நீதிமன்றமே பேரறிவாளனை விடுதலை செய்வதாகக் கூறி தீர்ப்பு வழங்கினர்.

31 ஆண்டு காலம் சிறையிலிருந்த பேரறிவாளனை விடுதலை செய்து உச்ச நீதிமன்ற மூன்று நீதிபதிகள் கொண்ட அமர்வு வரலாற்று தீர்ப்பை வழங்கியது.

முன்னாள் பிரதமா் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன் கடந்து வந்த பாதை: 

1991 மே 21 : சென்னை ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரசாரத்திற்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டால் கொலை 

1991 ஜூன் 11: பேரறிவாளன் கைது 

1998 ஜன 28 :  ராஜீவ்காந்தி கொலை வழக்கில்  குற்றம் சாட்டப்பட்ட 26 பேருக்கும் தூக்குத்தண்டனை உறுதி செய்தது சிறப்பு நீதிமன்றம்

1999 மே 11 : சிறப்பு நீதிமன்றம் அளித்த தீர்ப்பிற்கு எதிராக செய்யப்பட்ட மேல்முறையீடு மனுவில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி ஆகிய நான்கு பேருக்கு மட்டும் உச்ச நீதிமன்றம் தூக்கு தண்டனையை உறுதி செய்தது. மீதமுள்ள 3 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியது. 

1999 அக்டோபர் 8: மரண தண்டனையை மறு ஆய்வு செய்யக்கோரிய மனுவை தள்ளுபடி செய்தது உச்சநீதிமன்றம்

1999 அக்டோபர் 17: தமிழக ஆளுநருக்கு பேரறிவாளன் கருணை மனு அனுப்பி வைத்தார்

1999 அக் 29 : தூக்கு தண்டனை உறுதி செய்யப்பட்ட நான்கு பேரின் கருணை மனுக்களை தள்ளுபடி செய்தார் தமிழக ஆளுநர் பாத்திமா பீவி.

2000 ஏப்ரல் 25 : பேரறிவாளனின் கருணை மனுவை நிராகரித்த ஆளுநர், நளினியின் மரண தண்டனையை ஆயுள் தண்டனையாக குறைத்தார்.

2000 ஏப்ரல் 26: குடியரசுத் தலைவருக்கு பேரறிவாளன் கருணை மனு அனுப்பி வைத்தார்

2011  ஆகஸ்ட் 26: பேரறிவாளனின் கருணை மனுவை குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி நிராகரித்தார்.

2016:  கருணை மனுவை குடியரசு தலைவர் தாமதமாக நிராகரித்ததாக உயர்நீதிமன்றம், உச்சநீதிமன்றத்தில் பேரறிவாளன் வழக்கு பதிவு செய்த நிலையில் தன்னை  விடுவிக்கக்கோரி 2016 ஆம் ஆண்டு மனுதாக்கல் செய்தார்.

2022 மே 18 : உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எல்.நாகேஸ்வர ராவ், பி.ஆர்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா அடங்கிய அமா்வு பேரறிவாளனை விடுவித்து உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு வழங்கியது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com