
கோவில் புனரமைப்பதாக நிதி திரட்டி ரூ. 44 லட்சம் மோசடி செய்த யூடியூப்பர் கார்த்திக் கோபிநாத்
ஆவடி: ஆவடி அருகே கோவில்களைப் புனரமைப்பதாக பொதுமக்களிடம் இருந்து நிதி திரட்டி ரூ. 44லட்சம் மோசடி செய்த யூடியூப்பரை ஆவடி காவல் ஆணையரக குற்றப்பிரிவு போலீஸார் கைது செய்தனர்.
பெரம்பலூர் மாவட்டம், சிறுவாச்சூர் அருள்மிகு மதுரகாளி அம்மன் திருக்கோயிலில் செயல் அலுவலராக இருப்பவர் தா.அரவிந்தன். இவர் ஆவடி காவல் ஆணையரகத்தில் உள்ள மத்திய குற்றப்பிரிவில் அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது:
ஆவடி அடுத்த முத்தாபுதுப்பேட்டை, சபி நகர், 3 ஆவது தெரு சேர்ந்தவர் கார்த்திக் கோபிநாத் (33). இவர் இளைய பாரதம் என்ற பெயரில் யூடியூப் சமூக வலைத்தளம் நடத்தி வருகிறார். இவர் மிலாப் ஃபண்ட் ரைசேர் சைட் என்ற தளம் மூலமாக சிறுவாச்சூர் மதுரகாளியம்மன் கோவிலின் உப கோவில்களில் உள்ள பழுதடைந்த சிலைகளை புனரமைப்பதாக பொதுமக்களிடம் இருந்து ரூ. 44 லட்சம் நிதி திரட்டியுள்ளார். இதற்கு அவர் இந்து சமய அறநிலையத்துறையிடம் முறையான அனுமதி பெறவில்லை.
மேலும், கார்த்திக் கோபிநாத் அந்தப் பணத்தை தனது சுய லாபத்திற்காக பயன்படுத்திக் கொண்டுள்ளார். எனவே, அவர் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தார்.
இதனையடுத்து குற்றப்பிரிவு காவல் ஆய்வாளர் ஜெயச்சந்திரன் தலைமையில் போலீஸார் வழக்குப் பதிவு செய்து கார்த்தி கோபிநாத்தை தேடி வந்தனர். இந்நிலையில், தனிப்படை போலீஸார் கார்த்திக் கோபிநாத்தை திங்கள்கிழமை கைது செய்தனர்.
இதையும் படிக்க | காங்கிரஸ் கொள்கையை கண்டு அஞ்சுகிறார்கள்: ப.சிதம்பரம்