ரயில்வே துறையைக் கண்டித்து திமுக தலைமையில் ரயில் மறியல் போராட்டம்

திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் ரயில்வே துறையைக் கண்டித்து திமுக தலைமையில் ரயில் மறியல் போராட்டம் நடைபெற்றது.
ரயில்வே துறையைக் கண்டித்து திமுக தலைமையில் ரயில் மறியல் போராட்டம்

கூத்தாநல்லூர்:  திருவாரூர் மாவட்டம், கொரடாச்சேரியில் ரயில்வே துறையைக் கண்டித்து, திமுக, காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விடுதலைச் சிறுத்தைகள், மதிமுக உள்ளிட்ட கட்சிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கொரடாச்சேரி அடுத்த கிளரியம் பகுதி ரயில்வே தண்டவாளத்தில், மக்களவை உறுப்பினர் எம்.செல்வராசு, திருவாரூர் மாவட்ட திமுக செயலாளரும், சட்டப் பேரவை உறுப்பினருமான பூண்டி கே.கலைவாணன், மாவட்ட காங்கிரஸ் தலைவர் எஸ்.எம்.பி.துரை வேலன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் வை.செல்வராஜ், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மாவட்டச் செயலாளர் ஜி.சுந்தரமூர்த்தி, மதிமுக மாவட்டச் செயலாளர் பி.பாலச்சந்திரன், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்டச் செயலாளர் என். இடிமுரசு மற்றும் ஏராளமான கட்சியினர், எர்னாக்குளம் விரைவு வண்டியை மறைப்பதற்காக தண்டவாளத்தில் அமர்ந்து முழக்கங்களை எழுப்பினர். 

ஆனால், முதலில் மன்னார்குடி - திருச்செந்தூர் விரைவு வண்டி மயிலாடுதுறை செல்வதற்காக வந்தது. மேலும், அதில், ஒரு சில பயணிகள் மட்டுமே இருந்தனர். அதனால், அந்த ரயிலை மறைக்காமல் விட்டு விட்டார்கள்.

தொடர்ந்து, டி.ஐ.ஜி. கயல்விழி, போராட்டக்காரர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். மறியல் நடத்தப்படும் எனத் தெரிவித்து விட்டனர். கொட்டும் மழையிலும் தண்டவாளத்தில் அமர்ந்திருந்த கட்சியினரின் ஆவேசம் அதிகரித்தது. இந்நிலையில், மக்களவை உறுப்பினர் எம். செல்வராசு பத்திரிகையாளர்களிடம் கூறியது:

திருவாரூர், நாகை உள்ளிட்ட டெல்டா மாவட்ட ரயில் சேவையை தென்னக ரயில்வே மற்றும் ரயில்வே அமைச்சகமும் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது. இப்பகுதி மக்களின் கோரிக்கைகளை மக்களவையில் தொடர்ந்து வலியுறுத்தி பேசி வருகிறேன். மேலும், ரயில்வே அமைச்சர், ரயில்வ துறை அதிகாரிகள், தென்னக மேலாளர்கள், திருச்சி கோட்ட மேலாளர் உள்ளிட்டவர்களை நேரில் சந்தித்தும் முறையிட்டு வருகிறேன். 

32 கோரிக்கைகள் மிக முக்கியமான கோரிக்கைகள் ஆகும். வணிகர்கள் , இளைஞர்கள், அரசு அலுவலர்கள் மற்றும் மாணவர்கள் உள்ளிட்டவர்களின் நலன் சார்ந்த கோரிக்கைகள். தொலைதூர பயணம்  இப்பகுதி மக்கள் செல்ல முடியாத நிலையில் உள்ளனர்.

இக்கோரிக்கைகளை வலியுறுத்தி திமுக தலைமையில் அனைத்து கட்சியினருடனும் ஆலோசனை செய்து, இன்று ரயில் மறியல் போராட்டம் நடைபெற்று வருகிறது. தற்போது திருச்சி கோட்ட மேலாளர் சில இடங்களில் குறிப்பாக, பேரளம், கொரடாச்சேரி இந்த இடங்களில், இந்த வழித்தடத்தில் செல்லக் கூடிய ரயில்களை நிறுத்துவதாக அறிவித்துள்ளார்.

மேலும், முத்துப்பேட்டை, கீவளூர் ஆகிய இடங்களில் ஸ்டேஷன், பிளாட்பார்ம் உள்ளிட்டவைகளின் வசதிளுக்கு ஏற்ப அங்கும் நிறுத்துவது எனவும் அறிவித்துள்ளார். நாம் விடுத்துள்ள கோரிக்கைகளுக்கு மட்டும் தனியாக ஒரு குழு அமைத்து ஆலோசனைக் கூட்டம் நடத்தப்பட்டு, அதன் மூலம் முக்கியமான கோரிக்கைகளுக்கு தீர்வு காணப்படும் என உறுதியளித்துள்ளார். 

அனைத்து இடங்களிலும் ரயில்கள் இயக்கப்படாமல் நிறுத்தப்பட்டுள்ளது. பொது மக்களின் நலன் கருதி, அவர்களின் வசதிக்காகவும் ரயில் மறியல் போராட்டம் நிறுத்தப்படுகிறது.

செம்மொழி விரைவு ரயில், மன்னார்குடியில் இருந்துதான் இயக்கப்பட வேண்டும். இதில் எந்தவித மாற்றமும் கிடையாது. நீடாமங்கலத்தில் ரயில் என்ஜின் மாற்றப்படுவதால், போக்குவரத்து நெரிசலும், மருத்துவமனைக்குச் செல்லும் அவசர ஊர்திகளுக்கும் பெரும் இடையூறு ஏற்படுகிறது. இதனால் என்ஜினை திருவாரூரில் மாற்றலாம் என ரயில்வே துறை எடுத்த முடிவை மாற்றி, கொரடாச்சேரியில் மாற்றலாம் என கோரிக்கை வைத்துள்ளோம்.

மேலும், திருவாரூர் சென்று வருவதற்கு கால தாமதம் ஏற்படும் என்பதால், கொரடாச்சேரியில் என்ஜினை மாற்றுவதற்கான வசதி இருப்பதாக நினைக்கிறார்கள் என்றார். தொடர்ந்து, கூட்டத்தினர் கலைந்து சென்றனர். மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுரேஷ்குமார் பத்திரிகையாளர்களிடம் கூறியது:

ரயில் மறியல் பாதுக்காப்பு ஏற்பாடுகளை, கொரடாச்சேரி பகுதியில், ஒரு எஸ்.பி., 2 டி.எஸ்.பி, 300 காவலர்களும், மாவட்டம் முழுவதும் 3 எஸ்.பி.,க்கள், 4 ஏ.டி.எஸ்.பி.க்கள், 10 டி.எஸ்.பி.க்கள், 28 ஆய்வாளர்கள், 50 உதவி ஆய்வாளர்கள் மற்றும் 1100 காவலர்கள் பாதுகாப்பில் ஈடுபட்டுள்ளனர் என்றார். 

இதைத் தவிர, ரயில்வே துறை சார்பில் உதவி பாதுகாப்பு ஆணையர் ஆர்.சின்னதுரை தலைமையில் 200 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com