ராஜபாளையம்: விநாயகர் சதுர்த்தி விழாவில் சப்பரம் மீது மின்சாரம் பாய்ந்து இருவர் பலி

ராஜபாளையம் அருகே விநாயகர் சதுர்த்தி ஊர்வலத்தில் சப்பரத்தில் மின்சாரம் பாய்ந்ததில் 2 பேர் இறந்தனர். 
மாரிமுத்து - முனீஸ்வரன்
மாரிமுத்து - முனீஸ்வரன்


விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே விநாயகர் சதுர்த்தி விழாவில் சப்பரம் மீது மின்சாரம் பாய்ந்து புதன்கிழமை இரவு  இருவர் உயிரிழந்தனர். 3 பேர் காயமடைந்ததாக போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

ராஜபாளையம் அருகே உள்ள சொக்கநாதன் புத்தூரில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு விநாயகர் சிலை ஊர்வலம்  இரவு நடைபெற்றது. விநாயகர் சப்பரம் ஊரின் முக்கியமான வீதிகள் வழியே சென்று விநாயகர் சிலையை இறக்கி வைத்து விட்டு சப்பரத்தை ஓரமாக நிறுத்தும் போது அருகிலுள்ள மின்மாற்றி மீது சப்பரம் உரசியலில் மின்சாரம் பாய்ந்து சம்பவ இடத்திலேயே யாதவர் வடக்குத் தெருவை சேர்ந்த மாரிமுத்து (35) முனீஸ்வரன்(25) ஆகிய இருவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

சேவுகப்பாண்டியன், செல்லப்பாண்டியன், முப்பிடாதி ஆகிய மூன்று பேர் காயமடைந்தனர். உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த சேத்தூர் காவல் நிலைய போலீஸார் ஐந்து பேரையும் மீட்டு தென்காசி மாவட்டம் சிவகிரி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். இந்நிலையில் வியாழக்கிழமை காலை தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை  அமைச்சர் கே.கே எஸ்.எஸ். ராமச்சந்திரன், தொழில்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு, விருதுநகர் மாவட்ட ஆட்சியர் ஜே.மேகநாத ரெட்டி ஆகியோர் உயிரிழந்தவர்களின் சடலத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

பின்னர் உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு ரூ. 50 ஆயிரமும், காயம் அடைந்தவர்களுக்கு தலா ரூ.10  ஆயிரம் நிதி உதவி வழங்கி ஆறுதல் தெரிவித்தனர். உயிரிழந்த மாரிமுத்துவிற்கு மனைவி மற்றும் ஒரு மகன், மகள் உள்ளனர். திருமணமாகாத முனீஸ்வரன் மருந்து கடையில் பணியாற்றி வந்துள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com