கோழிகுத்தி வானமுட்டி பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்

மயிலாடுதுறையை அடுத்த கோழிகுத்தி வானமுட்டி பெருமாள் கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது.
கோழிகுத்தி வானமுட்டி பெருமாள் கோயில் கும்பாபிஷேகம்: பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்
Published on
Updated on
2 min read

மயிலாடுதுறை: மயிலாடுதுறையை அடுத்த கோழிகுத்தி வானமுட்டி பெருமாள் கோயிலில் இன்று கும்பாபிஷேகம் நடைபெற்றது. 

மயிலாடுதுறை மாவட்டம் மயிலாடுதுறை அடுத்த கோழிகுத்தி கிராமத்தில் பழமை வாய்ந்த அருள்மிகு ஸ்ரீ தயாலெஷ்மி சமேத ஸ்ரீ சீனிவாச பெருமாள் என்கிற வானமுட்டி பெருமாள் கோயில் அமைந்துள்ளது.

14 அடி உயரமுள்ள ஒரே அத்தி மரத்தால் மூலவர் சிலை அமைந்துள்ள இந்த ஆலயம் பிப்பல மகரிஷிக்கு இறைவன் விஸ்வரூப தரிசனம் கொடுத்து காட்சி கொடுத்த இடமாகும்.

சனிக் கவசம் பாடப்பட்ட இந்த ஆலயத்தில் வழிபாடு செய்தால் பிரம்மஹத்தி தோஷம் உள்ளிட்ட கோடி ஹத்தி தோஷங்கள் நீங்கும். கோடி ஹத்தி பாவ விமோசன தலம் என்பதே மருவி தற்போது கோழிகுத்தி என்று அழைக்கப்படுகிறது.

புகழ்பெற்ற இந்த ஆலயத்தின் மகா சம்ப்ரோஷணம் எனப்படும் கும்பாபிஷேகம் இன்று காலை நடைபெற்றது. இதனை முன்னிட்டு கடந்த ஐந்தாம் தேதி முதல் கால யாகசாலை பூஜைகள் துவங்கின. 

தொடர்ந்து யாகசாலை பூஜைகள் நடைபெற்று இன்று எட்டாம் கால யாகசாலை பூஜைகள் நிறைவுற்று, யாக சாலையில் இருந்து புனிதநீர் அடங்கிய கடங்களுக்கு பூர்ணாகுதி செய்யப்பட்டு மகா தீபாராதனை நடைபெற்றது.

இதனை அடுத்து புனித நீர் அடங்கிய கடங்கள் சிறப்பு மல்லாரி மேளம் முழங்க மங்கள வாத்தியங்களுடன் யாகசாலையில் இருந்து கோயிலைச் சுற்றி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு கோபுர கலசங்களை அடைந்தது.

தொடர்ந்து பட்டாச்சாரியர்கள் திருமந்திரங்கள் ஓத கலசங்களில் புனித நீரை ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது.

இதனை முன்னிட்டு உற்சவர் சீனிவாச பெருமாள் பூதேவி ஸ்ரீதேவி சமேதராய் சர்வ அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். தொடர்ந்து ராஜகோபுரம் கருவறை கோபுரங்களுக்கு கும்பாபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பரிவார தெய்வங்களுக்கு மகா அபிஷேகம் செய்யப்பட்டது.

இதில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சேர்ந்த திரளான பக்தர்கள் பங்கேற்று கோவிந்தா கோவிந்தா என்ற கோஷத்துடன் சுவாமி தரிசனம் செய்தனர். கும்பாபிஷேக விழாவிற்காக டிஎஸ்பி வசந்தராஜ் தலைமையில் ஏராளமான காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.