சூடானில் சிக்கிய தமிழர்களை மீட்க சென்னையில் கட்டுப்பாட்டு அறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு

சூடானில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 
சூடானில் சிக்கிய தமிழர்களை மீட்க சென்னையில் கட்டுப்பாட்டு அறை: தமிழ்நாடு அரசு அறிவிப்பு


சென்னை: சூடானில் சிக்கியுள்ள தமிழர்களை மீட்பதற்காக தமிழ்நாடு அரசின் சார்பில் சென்னையில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு மீட்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. 

இதுகுறித்து தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், சூடான் நாட்டில் அதிகாரத்தை கைப்பற்றுவது தொடர்பாக  அந்நாட்டின் ராணுவத்தினருக்கும், அவர்களின் எதிர்த்தரப்பினருக்கும் இடையே நடைபெற்று வரும் கடுமையான உள்நாட்டுப் போரில் 200-க்கும் மேற்பட்ட தமிழர்கள் உள்ளிட்ட 3000-க்கும் மேற்பட்ட  இந்தியர்கள் சிக்கிக் கொண்டுள்ளனர். அவர்களின் உயிருக்கும், பாதுகாப்புக்கும் பெரும் அச்சுறுத்தல் ஏற்பட்டிருக்கிறது.

அவர்களை மீட்கக் கோரி அங்குள்ள தமிழர்கள் மற்றும் தமிழ்நாட்டில் அவர்களது குடும்பத்தினர் அரசுக்கு தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர். 

அதனடிப்படையில், முதல்வர் முக.ஸ்டாலின் உத்தரவுப்படி, உடனடியாக அங்குள்ள தமிழர்களின் விவரங்களை பகிருமாறும், அவர்களை பாதுகாப்பாக தமிழ்நாடு அரசின் சார்பாக கடிதம் மூலம் சூடான் மற்றும் இந்திய தூதரகத்திடம் கோராட்டப்பட்டுள்ளது. 

மேலும், சூடானில் உள்ள தமிழர்களுடன் வாட்ஸ் ஆப் குழுக்கள் மூலமாக தொடர்புகள் உருவாக்கப்பட்டு அவர்களிடம் இருந்து பெறப்படும் தகவல்கள் சூடானில் உள்ள இந்திய தூதரகத்திற்கு உடனுக்குடன் தெரியப்படுத்தப்படுகிறது. 
 
இந்நிலையில், மத்திய அரசின் "ஆபரேசன் காவிரி" திட்டத்தின் மூலம் சூடானில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்டு, சூடானின் துறைமுகத்துக்கு அழைத்துவரப்பட்டு அங்கிருந்து இந்தியாவின் ஐஎன்எஸ் கப்பல் உதவியுடன், சவூதி அரேபியாவின் ஜெட்டா நகருக்கு அழைத்து வரப்பட்டு அங்கிருந்து விமானம் மூலம் தில்லி மற்றும் மும்பைக்கு அழைத்து வரக்கூடிய பணிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன. 

இந்நிலையில், ஜெட்டா விமான நிலையத்தில் இருந்து 360 இந்தியர்களை ஏற்றிக்கொண்டு வந்த  ஐஏஎப் சி-130ஜெ தனி விமானம், இன்று காலை தலைநகர் தில்லி வந்தடைந்தது.

இதனிடையே, முதல்வரின் உத்தரவின் பேரில் தில்லி தமிழ்நாடு இல்லத்திலும், சென்னையில் உள்ள அயலகத் தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகத்தில் தமிழ்நாடு அரசு சார்பில் கட்டுப்பாட்டு அறைகள் அமைக்கப்பட்டு, மீட்புப் பணிகள் நடைபெற்று வருகிறது. 

 உதவி தேவைப்படுவோர் 011-2419 3100, 9289516711 என்ற தில்லி தமிழ்நாடு இல்லத்தின் கட்டுப்பாட்டு அறையின் தொலைபேசி மற்றும் செல்போன் எண்ணுக்கும், tnhouse@nic.in என்ற இணையதளத்தின் மூலமாக தொடர்பு கொள்ளலாம்.

மேலும் 96000 23645, nrtchennao@gmail.com என்ற இணையதளம் மூலம் சென்னையில் உள்ள அயலக தமிழர் நலன் மற்றும் மறுவாழ்வுத் துறை ஆணையரகத்தை தொடர்பு கொள்ளலாம் என்று கூறப்பட்டுள்ளது. 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com