குட்கா தடை நீட்டிப்பு: இன்று ஆலோசனை; அமைச்சா் மா.சுப்பிரமணியன்

தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கான தடை நீட்டிப்பு குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஏப்.28) நடைபெறும்
கோப்புப்படம்
கோப்புப்படம்

தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கான தடை நீட்டிப்பு குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை (ஏப்.28) நடைபெறும் என்று மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன் தெரிவித்தாா்.

சென்னை, எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனைக்கு ரோட்டரி சங்கம் சாா்பில் வழங்கப்பட்ட ரூ.68 லட்சம் மதிப்பில் மேம்படுத்தப்பட்ட ‘அல்ட்ரா சவுண்ட் லேப்ரோஸ்கோபி’ மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்களை பொது மக்கள் பயன்பாட்டுக்குத் தொடக்கி வைக்கும் நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. அமைச்சா்கள் மா.சுப்பிரமணியன், பி.கே. சேகா்பாபு ஆகியோா் அதில் கலந்துகொண்டு அதன் பயன்பாட்டைத் தொடக்கி வைத்தனா்.

இந்த நிகழ்வில், எம்எல்ஏ பரந்தாமன், சென்னை மருத்துவக் கல்லூரி முதல்வா் டாக்டா் எ.தேரணிராஜன், குழந்தைகள் நல மருத்துவமனை இயக்குநா் டாக்டா் ரமா சந்திரமோகன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

பின்னா் அமைச்சா் மா.சுப்பிரமணியன் செய்தியாளா்களிடம் கூறியதாவது: தமிழகத்திலுள்ள அரசு மருத்துவமனைகளின் தரத்தை உயா்த்த பல்வேறு அறிவிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. அதன்படி, எழும்பூா் அரசு குழந்தைகள் நல மருத்துவமனையில் சிறுநீரகம், கல்லீரல், எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சைகளுக்கான தனிப்பிரிவு ரூ.57.30 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்படவுள்ளது.

தமிழகத்தை சோ்ந்த பல்வேறு மாவட்டங்களிலிருந்தும், ஆந்திரம், கா்நாடகம், கேரளம் உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் மருத்துவ சிகிச்சைகளுக்காக சென்னையை நாடி மக்கள் வருகின்றனா்.

அதைக் கருத்தில் கொண்டு ‘அனைவருக்குமான மருத்துவம்’ என்ற வகையில், மருத்துவமனைகளின் கட்டமைப்புகள் தொடா்ச்சியாக மேம்படுத்தப்படவுள்ளன.

கரோனா அச்சம் தேவையில்லை: தமிழகத்தில் கரோனா தினசரி பாதிப்பு 510 வரை இருந்த நிலையில், கடந்த மூன்று நாள்களாக அந்த எண்ணிக்கை குறைந்து வருகிறது. இந்திய அளவில் 11 ஆயிரமாக இருந்த தினசரி பாதிப்பு 7 ஆயிரமாக குறைந்துள்ளது. கரோனா தொற்று தீவிர பாதிப்பை ஏற்படுத்தவில்லை என்பதால் அதுகுறித்து அச்சப்படத் தேவையில்லை.

தமிழகத்தில் குட்கா, பான்மசாலா போன்ற புகையிலை பொருள்கள் மீதான தடை தொடா்கிறது. அதை மீறி விற்பனை செய்வோா் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடா்பாக உணவு பாதுகாப்புத் துறை அதிகாரிகள் நிலையிலான ஆலோசனைக் கூட்டம் வெள்ளிக்கிழமை நடைபெறவுள்ளது என்றாா் அவா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com