புதிய நிலக்கரி சுரங்கங்களால் வேளாண் மண்டலங்கள் பாதிக்கப்படும்: அன்புமணி ராமதாஸ்

தமிழகத்தில் புதிதாக நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கப்பட்டால் வேளாண் மண்டலங்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகும் என்று மாநிலங்களவை உறுப்பினரும், பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.
புதிய நிலக்கரி சுரங்கங்களால் வேளாண் மண்டலங்கள் பாதிக்கப்படும்: அன்புமணி ராமதாஸ்

திருநெல்வேலி: தமிழகத்தில் புதிதாக நிலக்கரி சுரங்கங்கள் அமைக்கப்பட்டால் வேளாண் மண்டலங்கள் மிகுந்த பாதிப்புக்கு உள்ளாகும் என்று மாநிலங்களவை உறுப்பினரும், பாமக தலைவருமான அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

நெய்வேலி என்எல்சி நிறுவனத்திற்கு எதிராக போராட்டம் நடத்திய பாமகவினர் 20 பேர் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். அவர்களை வெள்ளிக்கிழமை நேரில் சந்தித்த பின்பு செய்தியாளர்களிடம் அன்புமணி ராமதாஸ் கூறியது:

என்எல்சி பிரச்னை தொடர்பாக அமைதியான முறையில் போராட்டம் நடத்திய போது பல சமூக விரோதிகள் உள்ளே புகுந்து பிரச்னையை ஏற்படுத்தினர். இதில் பாமகவினர் 55 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். 20 பேர் பாளையங்கோட்டை மத்திய சிறைச்சாலையிலும், 18 பேர் மதுரை சிறைச்சாலையிலும், மீதம் உள்ளவர்கள்
கடலூர் சிறையிலும் உள்ளனர் .

ஏற்கனவே, என்எல்சி நிறுவனம் 64 ஆயிரத்து 750 ஏக்கர் நிலத்தை கையகப்படுத்தி, 40 ஆயிரம் ஏக்கர் நிலங்களில் நிலக்கரி எடுக்கப்பட்டு அந்த நிலங்கள் அழிக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 25,000 ஏக்கர் நிலங்கள் அழிப்பதற்கு திமுக அரசு உடந்தையாக இருக்கிறது. 

நானும் டெல்டா காரன் என தமிழக முதல்வர் தெரிவித்து வருகிறார். ஆனால், மூன்றாவது நிலக்கரி சுரங்கத்திற்கு தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளதாக மத்திய அமைச்சர் மக்களவையில் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக தமிழக முதல்வர் இன்னும் வாய் திறக்காமல் மௌனம் சாதிக்கிறார்.

புதிதாக மூன்றாவது நிலக்கரி சுரங்கம் அமைக்கப்பட்டால் காவிரி டெல்டா மற்றும் வேளாண் மண்டலங்கள் அனைத்தும் பாதிக்கப்படும். 

நாங்கள் ஒருபோதும் இந்த மண்ணையும், விவசாயத்தையும் விட்டுக் கொடுக்க மாட்டோம். தொடர்ந்து என்எல்சி பிரச்னைக்காக போராட்டம் நடத்துவோம்.

சுமார் 300 கிராமங்களின் கிராம சபை கூட்டத்திலும் என்எல்சி நெய்வேலிக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

மூன்றாவது நிலக்கரி சுரங்கத்தை ஏற்படுத்தி அதனை தனியார் மையம் ஆக்குவதற்காக செயல்பட்டு வருகிறது. அப்படி செயல்பட்டால் தமிழக அரசுக்கு ஒரு லாபமாகவும் இருக்கும் எனக் கூறப்படுகிறது. வேண்டுமானால் மூன்றாவது நிலக்கரி சுரங்கத்தை அமைப்பதை தடுத்து விட்டு வெளிநாடுகளில் இருந்து நிலக்கரி வாங்கி மின் உற்பத்தியை தொடங்கலாம்.

தமிழகத்திலிருந்து சுமார் 36,000 மெகா வாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இதில் 18,000 மெகாவாட் மின்சாரம் மட்டும்தான் தேவை. மற்றவை வெளி மாநிலத்திற்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தமிழகம் மின்மிகை மாநிலமாக இருப்பதாக முன்னாள் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்து இருந்தார். அப்படி இருக்கும்போது ஏன் மின்சார உற்பத்திக்கு தமிழக அரசு விளை நிலங்களை அழித்து மின்சாரம் தயாரிப்பது தேவையில்லை.

2026 இல் பாட்டாளி மக்கள் கட்சி தலைமையிலான கூட்டணி அமையும். 2024 மக்களவைத் தேர்தலிலும் பாட்டாளி மக்கள் கட்சிக்கு மிகப்பெரிய செல்வாக்கு உள்ளது.

தமிழகத்தில் பொது இடங்களில் புகைப்பிடிப்பதைத் தடுக்கும் வகையில் சட்டம் உள்ளது. ஆனால், சட்டத்தை நிறைவேற்ற தமிழக அரசு எதுவுமே செய்யவில்லை. குறிப்பாக சிகரெட் உள்ளிட்ட பொருள்களை கடையில் விற்பனை செய்வதை விட அந்த தொழிற்சாலைக்கு நேரடியாக சென்று, உற்பத்தி செய்யப்படாமல் தடுத்தால் போதும். கடந்த ஏழு ஆண்டுகளுக்கு முன்பு தமிழகத்தில் பூரண மதுவிலக்கை அமல்படுத்தப்பட வேண்டும் என தெரிவித்தவர், இப்போது முதல்வராக உள்ளார்.

ஆனால், தற்போது இது தொடர்பாக அவர் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. கடந்த ஆண்டு அரசு மதுபான கடைகள் மூலம் ஆண்டுக்கு ரூ.35 ஆயிரம் கோடிக்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த ஆண்டு ரூ.45 ஆயிரம் கோடிக்கும், அடுத்த ஆண்டு ரூ.55 ஆயிரம் கோடி நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

தொடர்ந்து தமிழகத்தில் பூரண மதுவிலக்கை கொண்டு வர வேண்டும் என நாங்கள் போராட்டம் நடத்தி வருகிறோம். அதற்கு மக்களவை உறுப்பினர் கனிமொழியும் ஆதரவு தெரிவித்து எங்களோடு சேர்ந்து பூரண மதுவிலக்கு அமல்படுத்த வலியுறுத்தி போராட்டம் நடத்த வர வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com