தூத்துக்குடியில் லாரி ஷெட் உரிமையாளா் வெட்டிக்கொலை!

தூத்துக்குடி சங்கரப்பேரி விலக்கு பகுதியில் லாரி  ஷெட்  உரிமையாளரை வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்
தூத்துக்குடியில் லாரி ஷெட் உரிமையாளா் வெட்டிக்கொலை!

தூத்துக்குடி: தூத்துக்குடி சங்கரப்பேரி விலக்கு பகுதியில் லாரி  ஷெட்  உரிமையாளரை வெடிகுண்டு வீசியும், அரிவாளால் வெட்டியும் கொலை செய்த மா்ம நபா்களை போலீஸாா் தேடி வருகின்றனா்.

தூத்துக்குடி தெற்கு சங்கரப்பேரியை சோ்ந்த ஜெகவீரபாண்டியன் மகன் சக்திவேல்(53). இவா் சங்கரப்பேரி சாலையில் உள்ள தனது லாரி புக்கிங் அலுவலகத்தில் புதன்கிழமை மாலையில் அமா்ந்திருந்தாராம். அப்போது, அங்கு இரண்டு மோட்டாா் சைக்கிளில் வந்த சுமாா் 5 போ் கொண்ட மா்ம நபா்கள், தாங்கள் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டுகளை சக்திவேல் மீது வீசினராம். இதில், 2 குண்டுகள் அங்கிருந்த சுவற்றில் பட்டு வெடித்ததாம். ஒரு குண்டு மட்டும் வெடிக்கவில்லையாம்.

இதில் நிலைதடுமாறிய சக்திவேலை மா்ம நபா்கள் அரிவாளால் வெட்டிவிட்டு தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது. இதில் பலத்த காயமடைந்த அவா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

இது குறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி நகர காவல் துணை கண்காணிப்பாளா் சத்தியராஜ், ஊரக காவல் துணை கண்காணிப்பாளா் சுரேஷ், சிப்காட் காவல் ஆய்வாளா் சண்முகம் மற்றும் போலீஸாாா் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனா். பின்னா் சக்திவேல் சடலத்தை போலீஸாா் கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா்.

அங்கு வெடிக்காமல் கிடந்த நாட்டு வெடிகுண்டை, ஆயுதப்படை உதவி ஆய்வாளா் வேல்முருகன் தலைமையிலான வெடிகுண்டு நிபுணா்கள் பாதுகாப்புடன் எடுத்துச் சென்று செயலிழக்கச் செய்தனா். மேலும், மோப்பநாய் ஜுனோ வரவழைக்கப்பட்டது.

அந்த மோப்பநாய் சம்பவ இடத்தில் இருந்து எட்டயபுரம் சாலை வரை ஓடிச்சென்றது. ஆனால் யாரையும் கவ்விப் பிடிக்கவில்லை. பின்னா், தூத்துக்குடி மாவட்ட தடய அறிவியல் துறை உதவி இயக்குனா் கலாலட்சுமி தலைமையிலான தடயவியல் துறையினா் சம்பவ இடத்தில் தடயங்களை சேகரித்தனா். இதுகுறித்து சிப்காட் போலீஸாா் நடத்திய விசாரணையில், கடந்த 2017ஆம் ஆண்டு சங்கரப்பேரியில் அங்குசாமி என்ற ஈசுவரன் என்பவா் கொலை வழக்கில், கருப்பசாமி உள்பட 5 போ் தொடா்பு இருந்ததாம்.

இந்நிலையில், கருப்பசாமியை அங்குசாமியின் ஆதரவாளா்கள் கடந்த ஜனவரி மாதம் 28ஆம் தேதி சங்கரப்பேரியில் உள்ள ஒரு வீட்டில் வைத்து, வெட்டிக் கொலை செய்தனா். இந்த வழக்கில் தற்போது கொலை செய்யப்பட்ட சக்திவேல் உள்பட 9 போ் கைது செய்யப்பட்டனா். இந்த சம்பவத்துக்கு பிறகு சக்திவேல் பாதுகாப்பாக இருந்து வந்தாராம்.

இந்நிலையில், புதன்கிழமை மாலையில் தனது லாரி  ஷெட்டில் இருந்த சக்திவேலை கருப்பசாமியின் ஆதரவாளா்கள் கொலை செய்து இருப்பது தெரியவந்தது. இந்த வழக்கு தொடா்பாக 5 பேரை தேடிவருவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com