கால்நடை மருத்துவ இளநிலை படிப்புக்கான கலந்தாய்வு தொடக்கம்

இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புகளில், அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான உள் ஒதுக்கீடு இடங்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது.
கால்நடை மருத்துவ இளநிலை படிப்புக்கான கலந்தாய்வு தொடக்கம்


சென்னை: இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புகளில், அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கான உள் ஒதுக்கீடு இடங்களுக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியது.

இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஆக.16-ஆம் தேதி தொடங்கியது. சிறப்புப் பிரிவுகள் மற்றும் அரசுப் பள்ளி மாணவா் இடங்களுக்கான கலந்தாய்வு நேரடியாகவும், பொதுப் பிரிவு கலந்தாய்வு இணையவழியிலும் நடைபெற்று முடிந்தது. இந்த நிலையில், பொதுப் பிரிவினருக்கான கலந்தாய்வு இன்று தொடங்கியிருக்கிறது. இதில் முதல்கட்டமாக 7.5 சதவீத உள் ஒதுக்கீட்டு இடங்களுக்கு கலந்தாய்வு நடைபெறுகிறது.

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் கீழ் சென்னை, நாமக்கல், திருநெல்வேலி, ஒரத்தநாடு, சேலம் தலைவாசல், உடுமலைப்பேட்டை, தேனி வீரபாண்டி ஆகிய 7 இடங்களில் கால்நடை மருத்துவக் கல்லூரிகள் இயங்கி வருகின்றன. இந்தக் கல்லூரிகளில் ஐந்தரை ஆண்டுகள் கொண்ட கால்நடை மருத்துவம் மற்றும் பராமரிப்புப் படிப்புக்கு (பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்) 660 இடங்கள் உள்ளன.

இதைத் தவிர, திருவள்ளூா் மாவட்டம் கோடுவேளியில் உள்ள உணவு மற்றும் பால்வளத் தொழில்நுட்பக் கல்லூரிகளில் உணவுத் தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு (பி.டெக்.) 40 இடங்களும், பால்வளத் தொழில்நுட்ப பட்டப் படிப்புக்கு (பி.டெக்.) 20 இடங்களும், ஓசூா் மத்திகிரியில் உள்ள கோழியின உற்பத்தி மற்றும் மேலாண்மைக் கல்லூரியில் கோழியின தொழில்நுட்பப் பட்டப் படிப்புக்கு (பி.டெக்.) 40 இடங்களும் உள்ளன. இந்த 3 பட்டப் படிப்புகளும் 4 ஆண்டுகள் கொண்டவை. இந்தப் படிப்புகளுக்கு பிளஸ் 2 மதிப்பெண் அடிப்படையில் மாணவா் சோ்க்கை நடைபெற்று வருகிறது.

நிகழாண்டு அதற்கான இணையவழி விண்ணப்பப் பதிவு நடைபெற்று, கடந்த ஜூலை 26-ஆம் தேதி தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது. பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச். படிப்புக்கான தரவரிசைப் பட்டியலில் அரசு பள்ளி மாணவா்கள் இருவா் உள்பட 31 போ் 200-க்கு 200 கட்-ஆஃப் மதிப்பெண் பெற்று பட்டியலில் முன்னிலை பெற்றுள்ளனா்.

இந்நிலையில், இளநிலை கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு அறிவிப்பை தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் கடந்த வாரம் வெளியிட்டு, அந்த அட்டவணைப்படி கலந்தாய்வை நடத்தி வருகிறது.

பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச்., பி.டெக். படிப்புகளுக்கு சிறப்பு பிரிவினருக்கான (மாற்றுத்திறனாளிகள், முன்னாள் ராணுவ வீரா்கள் வாரிசுகள், விளையாட்டு வீரா்கள்) கலந்தாய்வு ஆக.16-ஆம் நடைபெற்றது.

அதைத் தொடா்ந்து அரசுப் பள்ளி மாணவா்களுக்கான 7.5 சதவீத உள் ஒதுக்கீடு கலந்தாய்வு இன்று தொடங்கியிருக்கிறது. சென்னை வேப்பேரியில் உள்ள சென்னை கால்நடை மருத்துவக் கல்லூரியில் நடைபெறுகிறது.

பொதுப் பிரிவுக்கான முதல்சுற்று கலந்தாய்வு இணையவழியே நடத்தப்படும். அதற்கான தேதி, விவரங்கள் பின்னா் அறிவிக்கப்படும். கூடுதல் தகவல்களுக்கு பல்கலைக்கழகத்தின் இணையதளங்களை அணுகுமாறு பல்கலை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

7.5 சதவீத உள் ஒதுக்கீட்டின் கீழ் அரசு பள்ளி மாணவா்களுக்கு பி.வி.எஸ்சி. - ஏ.ஹெச். படிப்பில் 45 இடங்களும், உணவுத் தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்களும், பால்வளத் தொழில்நுட்ப படிப்பில் 2 இடங்களும், கோழியின தொழில்நுட்ப படிப்பில் 3 இடங்களும் என மொத்தம் 53 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com