வருகிறது ஸ்ரீரங்கம் பேருந்து நிலையம்: கே.என். நேரு அடிக்கல்

திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது. புதிய பேருந்து நிலையத்திற்கான பணிகளை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.
ஸ்ரீரங்கம் அரங்கநாதா் சுவாமி கோயிலின் தேரோடும் வீதி. (கோப்பிலிருந்து..)
ஸ்ரீரங்கம் அரங்கநாதா் சுவாமி கோயிலின் தேரோடும் வீதி. (கோப்பிலிருந்து..)

திருச்சி மாவட்டத்தில் ஸ்ரீரங்கம் மக்களின் நீண்ட நாள் கோரிக்கை நிறைவேறியது. புதிய பேருந்து நிலையத்திற்கான பணிகளை அமைச்சர் கே.என்.நேரு தொடங்கி வைத்தார்.

108 வைணவ தலங்களில் முதன்மையானதும் பூலோக வைகுண்டம் என போற்றப்படுவதுமான திருச்சி ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு தமிழகம் மட்டுமல்லாது பிற நாடுகள், மாநிலங்கள், மாவட்டங்களில் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து வழிபாடு செய்து செல்கின்றனர். 

உலக பிரசித்தி பெற்ற ஶ்ரீரங்கம் திருக்கோயிலுக்கு வரும் பக்தர்கள் இறங்கிச் செல்ல ஏதுவாக இன்றைய தினம் வரை பேருந்து நிலையம் எதுவும் ஸ்ரீரங்கத்தில் இல்லாததால் பொதுமக்கள், பக்தர்கள் கடும் சிரமத்திற்கு உள்ளாகி வந்தனர். 

இந்தப் பகுதியில் மட்டும் சுமார் 1 லட்சத்து 2000க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.

ஆனால் ஸ்ரீரங்கத்தில் இதுவரை உள்ளூர் மற்றும் வெளியூர்களில் இருந்து வரும் பேருந்துகள், சுற்றுலா பேருந்துகளுக்கு என தனியாக பேருந்து நிலையம் இல்லை. 

ஶ்ரீரங்கத்திற்கு வரும்  வாகனங்கள் அனைத்தும் சாலையோரங்களில் நிறுத்தப்படுவதால் நாளுக்கு நாள் போக்குவரத்து நெரிசல் அதிகமாகி வருகிறது.

 இதனால் ஸ்ரீரங்கத்தில் உள்ளூர் பேருந்து நிலையம் கட்டப்பட வேண்டும் என அந்தப் பகுதி மக்கள் நீண்ட நாள்களாக கோரிக்கை வைத்து வந்திருந்தனர்.

இதனைத் தொடர்ந்து நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு உத்தரவின் பெயரில் ஸ்ரீரங்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனை எதிரில்  உள்ள மாநகராட்சிக்கு சொந்தமான ஒரு ஏக்கர்  நிலம் தேர்வு செய்யப்பட்டது.

இதனை தொடர்ந்து ஶ்ரீரங்கத்தில் ரூபாய் 11.10 கோடி செலவில் புதிய பேருந்து நிலையம் கட்டுவதற்கு தமிழக அரசு அனுமதி வழங்கியது.

இதனைத் தொடர்ந்து இன்று திருச்சி மாநகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை சார்பில் மூலதன மானிய நிதி 2023-24 ன் கீழ் ரூபாய் 11.10 கோடி திட்ட மதிப்பீட்டில் ஸ்ரீரங்கத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்கும் பணி துவக்க விழாவில் நகராட்சி நிர்வாக துறை அமைச்சர் கே.என்.நேரு அடிக்கல் நாட்டி பணிகளை தொடங்கி வைத்தார்.

தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அமைச்சர் கே.என்.நேரு, சென்னையில் நசரத்பேட்டை தவிர மற்ற எங்கும் தண்ணீர் இல்லை, ஆவடி பகுதியில் முற்றிலுமாக சரி செய்து விட்டோம். செய்தியாளர் ஒருவரின் கேள்விக்கு, சும்மா ஏதாச்சு கிளப்பி விடாதீங்கய்யா என  நகைச்சுவையாக பதில் அளித்தார்.

தொடர்ந்து நாடாளுமன்றத்தில் எம்.பி.க்கள் நீக்கப்பட்டது குறித்து கேட்ட பொழுது, ஸ்ரீரங்கத்தில் நாங்கள் இருக்கிறோம் எங்கள் கிட்ட போய் நாடாளுமன்ற பற்றி கேட்கிறீர்களே என்று நகைச்சுவையாக பதில் அளித்து கடந்து சென்றார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com