புயலும் இல்லை, காற்றழுத்தமும் இல்லை.. வெறும் சுழற்சிக்கே இந்த மழை

புயலும் இல்லாமல், காற்றழுத்தமும் இல்லாமல் வெறும் மேலடுக்கு சுழற்சிக்கே இந்த மழை பதிவாகியிருக்கிறது.
புயலும் இல்லை, காற்றழுத்தமும் இல்லை.. வெறும் சுழற்சிக்கே இந்த மழை

சென்னை: தமிழகத்தின் தென் மாவட்டங்களாக நெல்லை, தூத்துக்குடி, குமரி, தென்காசி மாவட்டங்களில் ஞாயிறன்று அதிகனமழை பதிவாகியிருக்கிறது. புயலும் இல்லாமல், காற்றழுத்தமும் இல்லாமல் வெறும் மேலடுக்கு சுழற்சிக்கே இந்த மழை பதிவாகியிருக்கிறது.

திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி மற்றும் தென்காசி மாவட்டங்களில் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் அதிகனமழை பெய்து வருகின்றது. இதன்காரணமாக 4 மாவட்டங்களும் கிட்டத்தட்ட வெள்ளத்தில் மூழ்கிவிட்டன.

தூத்துக்குடி மாவட்டத்தில் மட்டும் 14 இடங்களில் அதிகனமழை பதிவாகியுள்ளது. அதிகபட்சமாக காயல்பட்டினத்தில் 932 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. திருசெந்தூரில் 679 மி.மீ., ஸ்ரீவைகுண்டத்தில் 618 மி.மீ. மழை பதிவாகியுள்ளது.

காயல்பட்டினத்தில் ஓராண்டில் பெய்ய வேண்டிய மழை, ஒரே நாளில் பெய்துள்ளது. தமிழக வரலாற்றில் சமவெளிப் பகுதிகளில் பெய்த அதிகபட்ச கனமழை இதுவாகும்.

தூத்துக்குடி காயல்பட்டினத்தில் கடந்த 24 மணி நேரத்தில் 932 மி.மீ. (இது அப்பகுதியில் ஓராண்டு முழுவதும் பெய்யும் மழை விட அதிகம், அதாவது ஓராண்டில் பெய்ய வேண்டியதை விட அதிக மழை ஒரு நாளில் பெய்துள்ளது. இது தூத்துக்குடிக்கு 1000 ஆண்டுகளில் 1 நிகழ்வாகக்கூட இருக்கலாம். ஒரு புயல் கூட இல்லை, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி கூட இல்லை. ஒரு மேலடுக்கு சுழற்சியில் இருந்து இந்த அளவுக்கு மழை பெய்துள்ளளது.

24 மணி நேரத்தில் தமிழகத்தில் சமவெளிப் பகுதிகளில் பதிவான அதிகபட்ச மழையும், 1992ல் பதிவான காக்காச்சி (மாஞ்சோலை) 965 மி.மீ.க்குப் பிறகு 2வது அதிக மழையும் இதுவாகும் என்று மழை தென் மாவட்டங்களைப் புரட்டிப்போட்டிருப்பது குறித்து பதிவிட்டுள்ளார் தமிழ்நாடு வெதர்மேன்.

மேலும், தூத்துக்குடி மாவட்டம் இதுவரை தனது வரலாற்றில் சந்தித்தே இராத ஒரு வெள்ளத்தை தற்போது கண்டுள்ளது. 600 மி.மீ., 500 மி.மீ. மழை என்பதெல்லாம் மிகப்பெரிய எண்கள். இந்த மழை மேலும் நீடிக்கும் என்றே நிலவரங்கள் தெரிவிக்கின்றன. 

தூத்துக்குடி மற்றும் நெல்லை மாவட்ட மக்கள் தங்கள் வாழ்நாளில் சந்தித்திராத ஒரு மழையாக இது உள்ளது. மேலும் மழை தொடரும், மழை எப்போது முடியும் என்பதற்கான அறிகுறியே இல்லை என்று சற்று கலக்கத்தையும் தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com