புதுச்சேரியில் பல மாதங்களுக்குப் பின் கரோனாவுக்கு ஒருவர் பலி

புதுச்சேரியில் பல மாதங்களுக்கு பிறகு 55 வயது நபர் கரோனாவால் பலியானார்.
புதுச்சேரியில் பல மாதங்களுக்குப் பின் கரோனாவுக்கு ஒருவர் பலி

புதுச்சேரியில் பல மாதங்களுக்கு பிறகு 55 வயது நபர் கரோனாவால் பலியானார். கரோனா பாதிப்பை தெரிவிக்காததால் ஆட்சியரை, எம்எல்ஏ நேரு தலைமையில் உறவினர்கள் முற்றுகையிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

புதுச்சேரி, உருளையன்பேட்டை தொகுதி, நேரு நகரைச் சேர்ந்த கோவிந்து (55). இவர் கடந்த 10 நாட்களுக்கு முன் காசநோய் காரணமாக கதிர்காமம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். நேற்று அவருக்கு கரோனா பரிசோதனை எடுக்கப்பட்டது. அதனுடைய முடிவு இன்று காலை வந்தது. இதில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. முடிவுகள் வருவதற்கு முன்பே கோவிந்து இறந்துள்ளார். உடலை உறவினர்கள் வாங்கச் சென்றபோது அவரது உடலை உறவினரிடம் மருத்துவமனை ஒப்படைக்கவில்லை.

கரோனாவில் இறந்ததால் உடலை கொடுக்கமுடியாது என கூறப்பட்டதாக தெரிகிறது. இதனால் ஆத்திரமடைந்த உறவினர்கள் தொகுதி எம்.எல்.ஏ. நேருவிடம் தெரிவித்தனர். இதனையடுத்து எம்.எல்.ஏ. நேரு தலைமையில் உறவினர்கள் அருகில் உள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டார். இறந்தவரின் உடலை உறவினர்களிடம் வழங்க வேண்டும் அல்லது கரோனா வழிமுறையின்படி இறுதிச் சடங்கு செய்ய வேண்டும் எனக் கோரி மாவட்ட ஆட்சியர் வல்லவனை  காருடன் முற்றுகையிட்டு  போராட்டம் நடத்தினார்கள். 

இதனால் புதுச்சேரி-வழுதாவூர் சாலையில் அரை மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனிடையே சுகாதார துறை இயக்குனர் ஸ்ரீராமலுவை மாவட்ட ஆட்சியர் தொடர்பு கொண்டு கேட்டபோது, கோவிந்த் கரோனா பாதிப்பு காரணமாக  இறந்ததாக சுகாதாரத் துறை இயக்குனர் ஸ்ரீ ராமுலு உறுதிபடுத்தினார்.  கரோனா காரணமாக அவர் உயிரிழந்ததால் உறவினர்களிடம் ஒப்படைக்கப்படாது. நேரடியாக சுடுகாட்டிற்கு அனுப்பப்படும் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது. 

இதனிடையே கோவிந்துக்கு எந்த வகை கரோனா வந்தது என்பது குறித்து அறிய ரத்த மாதிரி பெங்களூருவுக்கு ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாக சுகாதார துறை  தெரிவித்துள்ளது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com