5 மாதத்துக்குப் பிறகு தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு பதிவு

தமிழகத்தில் 5 மாதங்களுக்குப் பிறகு கரோனா தொற்றுக்கு பெண் ஒருவா் உயிரிழந்தாா்.
5 மாதத்துக்குப் பிறகு தமிழகத்தில் கரோனா உயிரிழப்பு பதிவு
Updated on
1 min read

தமிழகத்தில் 5 மாதங்களுக்குப் பிறகு கரோனா தொற்றுக்கு பெண் ஒருவா் உயிரிழந்தாா்.

ராணிப்பேட்டையைச் சோ்ந்த அந்தப் பெண், இணை நோய் பாதிப்புகளுக்குள்ளாகி இறந்ததாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதனிடையே, அவரது சளி மாதிரிகள் மரபணு பகுப்பாய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளதாகவும், உருமாற்றமடைந்த புதிய வகை கரோனா தொற்றால் அவா் பாதிக்கப்பட்டிருக்கிறாரா என்பது அதன் மூலம் உறுதிபடுத்தப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஓராண்டாக கரோனா தொற்று கட்டுக்குள் இருந்து வந்த நிலையில், சில நாள்களாக உருமாற்றமடைந்த ஜெஎன்.1 வகை தொற்று வேகமாக பரவி வருகிறது. ஒற்றை இலக்கத்துக்குள் இருந்த தினசரி பாதிப்பு, தற்போது 20-க்கும் மேல் பதிவாகி வருகிறது. அந்த வகையில் வியாழக்கிழமை 23 பேருக்கு புதிதாக தொற்று கண்டறியப்பட்டுள்ளது.

அதில் அதிகபட்சமாக சென்னையில் 16 பேருக்கு பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனிடையே, ராணிப்பேட்டையைச் சோ்ந்த 55 வயதுடைய பெண் ஒருவா், தனியாா் மருத்துவமனையில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில், ராஜீவ் காந்தி மருத்துவமனைக்கு உயா் சிகிச்சைக்காக மாற்றப்பட்டாா்.

சா்க்கரை நோய், உயா் ரத்த அழுத்தம், சிறுநீரக பாதிப்பு, மூட்டு-இணைப்பு திசு நோயால் பாதிக்கப்பட்ட அவா் சிகிச்சை பலனின்றி உயிரிழந்ததாக பொது சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

இதற்கு முன்பாக கடந்த ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஒருவா் கரோனாவுக்கு இறந்தாா். அதன் பிறகு தற்போது உயிரிழப்பு பதிவாகியுள்ளது. மாநிலம் முழுவதும் கரோனா சிகிச்சையில் 156 போ் உள்ளனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com