ஈரோட்டில் அதிமுக நிர்வாகிகளுடன் இபிஎஸ் தீவிர ஆலோசனை!

உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலியாக ஈரோட்டில் அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை நடத்தினார்.
எடப்பாடி கே. பழனிசாமி
எடப்பாடி கே. பழனிசாமி

ஈரோடு: உச்சநீதிமன்ற தீர்ப்பு எதிரொலியாக ஈரோட்டில் அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் எடப்பாடி பழனிசாமி தீவிர ஆலோசனை நடத்தினார்.

ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27 ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல் கடந்த மாதம் 31ஆம் தேதி தொடங்கியது. வரும் 7ஆம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளாகும். இந்த தேர்தலில் அதிமுகவின் எடப்பாடி பழனிசாமியும், ஓ.பன்னீர்செல்வம் அணிகளும் தனித்தனியாக போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி எடப்பாடி பழனிசாமி அணி சார்பில் வேட்பாளராக முன்னாள் எம்எல்ஏ கே.எஸ்.தென்னரசு, ஓ.பன்னீர்செல்வம் அணி சார்பில் வேட்பாளர் பி.செந்தில்முருகன் ஆகியோர் அறிவிக்கப்பட்டனர்.

இவர்கள் இருவரும் வெள்ளிக்கிழமை வேட்பு மனு தாக்கல் செய்வதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் கே.எஸ்.தென்னரசு வேட்பு மனு தாக்கல் செய்யாத நிலையில் செந்தில் முருகன் தனது வேட்பு மனுவை தாக்கல் செய்தார்.

இந்தநிலையில் அதிமுகவின் பொதுக்குழுவை கூட்டி வேட்பாளரை தேர்வு செய்ய வேண்டும் என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதனால் அடுத்தகட்ட நடவடிக்கை தொடர்பாக கட்சியின் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்துவதற்காக சென்னையில் இருந்து முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி விமானம் மூலமாக கோவைக்கு வந்தார். அங்கிருந்து காரில் அவர் ஈரோட்டுக்கு வெள்ளிக்கிழமை இரவு வந்தார். அவர் வில்லரசம்பட்டியில் உள்ள ஒரு தனியார் ஹோட்டலில் அதிமுக முக்கிய நிர்வாகிகளுடன் ஆலேசானை நடத்தினார். மாலை 6.50 மணிக்கு தொடங்கிய கூட்டம் இரவு 8.25 மணி வரை நடந்தது.

இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே.ஏ.செங்கோட்டையன், கே.பி.முனுசாமி, பி.தங்கமணி, எஸ்.பி.வேலுமணி, செம்மலை, எம்.சி.சம்பத், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, கே.சி.கருப்பணன், கே.வி.இராமலிங்கம், தளவாய் சுந்தரம் மற்றும் முக்கிய நிர்வாகிகள் பங்கேற்றனர். வேட்பாளராக அறிவிக்கப்பட்ட கே.எஸ்.தென்னரசுவும் கூட்டத்தில் கலந்துகொண்டார்.

மேலும், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பின் விவரம், அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து ஆலோசனை நடத்தப்பட்டது. கூட்டம் நடக்கும் ஹோட்டலின் வளாகத்துக்கு உள்ளே முக்கிய நிர்வாகிகளை தவிர பத்திரிகையாளர்கள் உள்ளிட்ட யாரையும் அனுமதிக்கவில்லை.

கூட்டத்திற்கு பிறகு முன்னாள் அமைச்சர் கே.பி.முனுசாமி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி:

நீதிமன்ற உத்தரவின்படி 2 தலைமையும் தொண்டர்களிடம் செல்ல வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது. தொண்டர்கள் தீர்ப்பு அளிக்க உள்ளனர். எடப்பாடி பழனிசாமி பக்கம்தான் தொண்டர்கள் இருக்கின்றனர். இதனால் தர்மம் வெல்லும் என்றார்.

முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் கூறியதாவது:

அதிமுகவில் எந்த குழப்பமும் இல்லை. நீதிமன்ற உத்தரவின்பேரில் பொதுக்குழு உறுப்பினர்கள் வேட்பாளரை தேர்வு செய்ய உள்ளனர். அதிமுக வேட்பாளராக கே.எஸ்.தென்னரசு தேர்வு செய்யப்படுவார். அவரே வெற்றியும் பெறுவார் என்றார்.

முன்னாள் அமைச்சர் தளவாய் சுந்தரம் கூறியதாவது:

கே.எஸ்.தென்னரசு வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். பொதுக்குழு உறுப்பினர்களால் ஏக மனதாக அவர் தேர்வு செய்யப்படுவார்.  பெரும்பான்மை எடப்பாடி பழனிசாமி பக்கம் இருப்பது நாடு அறிந்த உண்மை. நீதிமன்ற உத்தரவின்படி வேட்பாளரை தேர்வு செய்து பொதுக்குழு உறுப்பினர்களிடம் கையெழுத்து வாங்கி சமர்ப்பிப்போம். பாஜக கூட்டணிக்கு வந்தாலும் மகிழ்ச்சி. வராவிட்டாலும் மகிழ்ச்சி என்றார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com