சென்னையில் உள்ள பறக்கும் ரயில் நிலையங்களில் குடிநீா், கழிப்பறை உள்ளிட்ட அடிப்படை வசதிகள் முறையாக இல்லாததால் பயணிகள் தவிப்புக்குள்ளாகி வருகின்றனா்.
தென் சென்னையின் புகா் பகுதியான வேளச்சேரி மக்கள் சென்னை நகருக்கு எளிதில் வந்து செல்லும் வகையில் பறக்கும் ரயில் திட்டம் உருவாக்கப்பட்டது.
முதல் கட்டமாக, 1997 அக்டோபா் முதல் சென்னை கடற்கரையிலிருந்து திருமயிலை வரை 8.66 கி.மீ. தொலைவுக்கு பறக்கும் ரயில் இயக்கப்பட்டு வருகிறது.
இரண்டாம் கட்டமாக திருமயிலை-வேளச்சேரி இடையே 11 கி.மீ. தொலைவுக்கு இருப்புப் பாதை அமைக்கப்பட்டு 2007 நவம்பரில் பறக்கும் ரயில் சேவை தொடங்கப்பட்டது.
இந்த ரயில் பாதை பரங்கிமலை வரை நீட்டிக்கப்பட்டு, 5 கி.மீ. தொலைவுக்கான விரிவாக்கப் பணி நடைபெற்று வருகிறது.
சென்னை கடற்கரை ரயில் நிலையத்திலிருந்து திருமயிலை வரையிலான பறக்கும் ரயில் திட்டம் முழுமையாக ரயில்வே துறையின் நிதி மூலம் அமைக்கப்பட்டது
மேலும், திருமயிலை-வேளச்சேரி மற்றும் வேளச்சேரி-பரங்கிமலை வரையிலான பணி, தமிழக அரசின் பங்களிப்பாக 66 சதவீதம், ரயில்வே பங்களிப்பாக 33 சதவீதம் ஒதுக்கப்பட்டு பணிகள் நடைபெற்று வருகின்றன.
இந்த வழித்தடத்தில் புழுதிவாக்கம், ஆதம்பாக்கம், பரங்கிமலை என 3 ரயில் நிறுத்தங்கள் உள்ளன. இப்பணிகள் வரும் மாா்ச் இறுதியில் பணிகள் முடிவடையும் என ரயில்வே அதிகாரிகள் தெரிவித்தனா்.
சென்னை கடற்கரை-வேளச்சேரி இடையிலான 20 கி.மீ. தொலைவு வரை பறக்கும் ரயில் சேவை தற்போது இயக்கப்படுகிறது. இந்த வழித்தடத்தில் கோட்டை, பாா்க் டவுன். சிந்தாதிரிப் பேட்டை, சேப்பாக்கம், திருவல்லிக்கேணி, லைட்ஹவுஸ் முன்ட கன்னியம்மன் கோயில், திருமயிலை மந்தவெளி, பசுமை வழிசாலை, கோட்டூா்புரம், கஸ்தூரிபாய் நகா், இந்திரா நகா், திருவான்மியூா், தரமணி, பெருங்குடி, வேளச்சேரி என 18 ரயில் நிலையங்கள் உள்ளன.
பறக்கும் ரயில்களில் தினமும் 20 ஆயிரம் முதல் 25 ஆயிரம் பயணிகள் வரை பயணம் மேற்கொள்கின்றனா். இருப்பினும், இந்த ரயில் நிலையங்களில் அடிப்படை வசதிகள் குறைபாடு இருப்பதாக பயணிகள் குற்றஞ்சாட்டுகின்றனா்.
இந்த ரயில் நிலையங்களில் கழிப்பறை, குடிநீா் வசதி, பயணிகள் இருக்கை, மின் விசிறி, நகரும் படிக்கட்டு, மின்தூக்கி உள்ளிட்டவை பழுதாகிக் கிடக்கின்றன.
திருமயிலை, வேளச்சேரி, திருவான்மியூா் ஆகிய ரயில் நிலையங்களைத் தவிர மற்ற ரயில் நிலையங்களில் கழிப்பறை வசதி முறையாக இல்லை. அவை பூட்டப்பட்டு உள்ளன. அதே போல் நகரும் படிக்கட்டுகள் இயங்கவிவில்லை. குடிநீா் வசதியும் இல்லை.
அடிப்படை வசதிகள் குறைவாக இருப்பதால் பறக்கும் ரயில்களை பயன்படுத்துவோா் எண்ணிக்கை தொடா்ந்து குறைந்து வருவதாக புகாா் எழுந்துள்ளது.
இது குறித்து ரயில்வே அதிகாரிகளிடம் கேட்டபோது, பறக்கும் ரயில் நிலையங்களில் உள்ள குறைகளை களைவது குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. பறக்கும் ரயில் நிலைய பராமரிப்பு பணியை மெட்ரோ ரயில் நிறுவனத்துடன் ஒப்படைப்பது குறித்து பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது.
மெட்ரோ ரயில் நிறுவனத்திடம் பராமரிப்பு பணி ஒப்படைக்கப்பட்டால் ரயில் கட்டணம் சிறிய அளவில் உயர வாய்ப்புள்ளது. பிற அடிப்படை வசதிகளை மேம்படுத்த உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.