கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் ரூ100-க்கு விற்பனையாவது ஏன்? - கே.எஸ்.அழகிரி கேள்வி

உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும், பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்படுவது ஏன்? என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.
கச்சா எண்ணெய் விலை குறைந்தும் பெட்ரோல் ரூ100-க்கு விற்பனையாவது ஏன்? - கே.எஸ்.அழகிரி கேள்வி

சிதம்பரம்: உலக சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்தும், பெட்ரோல் விலை லிட்டர் ரூ.100-க்கும் விற்பனை செய்யப்படுவது ஏன்? என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி கேள்வி எழுப்பியுள்ளார்.

சிதம்பரத்தில் அவர் செய்தியாளர்களிடம் தெரிவித்தது: ராகுல்காந்தியின் இந்திய நடைபயணத்தில் வெளிபாடாக தமிழகம் முழுவதும் ஒரு சட்டப்பேரவை தொகுதியில் 100 காங்கிரஸ் கட்சி கொடிகள் ஏற்றுவது என்ற செயல் திட்டத்தின் கீழ் இன்றைக்கு சிதம்பரத்தில் 10 இடங்களில் கொடிகளை ஏற்றி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது. 

ராகுல்காந்தியின் நடைபயணத்தின் வெற்றி என்னவென்றால், மக்கள் பிரச்னைகளை இந்தியா முழுவதும் வெளிகொண்டு வருகிறார். பெரும் அரசியல் அதிகாரம் பெறுவதற்கான இந்த நடைபயணம் அல்ல. நாட்டின் பிரச்னைகளை தீர்க்கப்பட வேண்டும். மக்கள் சாதி, மதத்தின் பெயரால் பிரிந்து கிடக்கக்கூடாது. மொழி ஆதிக்கத்தில் சிக்கிண்டு விடக்கூடாது என்ற நோக்கத்தில் இந்த நடைபயணத்தை தொடங்கியுள்ளார். 130 கோடி மக்களுக்கும் வழிகாட்டியாக இந்த நடைபயணம் அமைந்திருக்கிறது. 

மன்மோகன்சிங் ஆட்சி காலத்தில் ரூ.70-க்கு பெட்ரோல் கிடைத்தது. அன்றைக்கு கச்சா எண்ணெய் விலை 108 அமெரிக்க டாலர். ஆனால், இன்று கச்சா எண்ணெய் விலை 70 அமெரிக்க டாலர் தான். பெட்ரோல் விலை ரூ.100. இதற்கு என்ன காரணம் என ராகுல் கேள்வி எழுப்பியுள்ளார். இதுவரை பிரதமர் நரேந்திரமோடி பதில் தெரிவிக்கவில்லை. 

மன்மோகன்சிங் சமையல் எரிவாயு உருளை ரூ.400 வழங்கினார். இன்று ரூ.1200 விலை. இதற்கான காரணத்தை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனால் சொல்ல முடியவில்லை. பண மதிப்பு இழப்பு நடவடிக்கை கொண்டு வந்தீர்கள். பழைய ரூபாய் நோட்டு செல்லாது. அதனால் என்ன லாபம் கிடைத்தது. அரசுக்கு என்ன பலன் கிடைத்தது.

காஷ்மீரில் மக்களின் உரிமைகளை நாங்கள் பாதுகாத்தோம். இன்றைக்கு நீங்கள் அந்த மாநிலத்தை மூன்றாக உடைத்து வீட்டீர்கள். ஒரு மாநிலங்களாக இருந்த அந்த பகுதி மூன்று மாநிலங்களாக உடைக்கப்பட்டுள்ளது. அதற்காக காஷ்மீருக்கு கிடைத்த லாபம் என்ன?. சீன எல்லையில் பிரச்னை உள்ளது. நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகிறார்கள். இதுகுறித்து விளக்கி பதில் சொல்வது பிரதமரின் கடமையாகும். ராணுவ அமைச்சரின் கடமையாகும். 

உலகநாடுகள் பத்திரிகை செய்திகளில் இந்திய எல்லையில் சீனர்கள் ஆக்கிரமிப்பு செய்து வருகிறார்கள் என கூறுகின்றனர். ஆனால், இந்திய ஊடகங்களில் வாய்மூடி இருக்கிறார்கள். நாடாளுமன்றத்தில் இதனை தெளிவு படுத்த வேண்டுவது கடமையாகும்.

காங்கிரஸ் கட்சிக்கு பாஜக தேசப்பற்றை குறித்து சொல்லிக் கொடுக்கிறது. 3 தலைவர்களை இழந்துள்ளோம். லட்சக்கணக்கான பேரை நாங்கள் சுதந்திர போராட்டத்தில் இழந்துள்ளோம். மகாத்காந்தி, இந்திராகாந்தி, ராஜீவ்காந்தி எதற்கு கொல்லப்பட்டார் என்பது சொந்த பிரச்னையா? நாட்டின் ஒற்றுமைக்காக பாடுபட்டதற்காக கொல்லப்பட்டார்கள். எனவே, மோடியின் ஆட்சி முழுமையாக தோல்வியை சந்தித்துள்ளது. நாட்டு மக்களை அதிலிருந்து மீட்க  வேண்டும் என்பதற்காக ராகுல்காந்தி இந்த நடைபயணத்தை மேற்கொண்டுள்ளார் என கே.எஸ்.அழகிரி தெரிவித்தார்.

முன்னதாக, சிதம்பரம் வண்டிகேட் பகுதி, தில்லையம்மன் கோயில், வடக்குவீதி உள்ளிட்ட 10 இடங்களில் நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் தில்லை ஆர்.மக்கீன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சிகளில் கே.எஸ்.அழகிரி காங்கிரஸ் கட்சி கொடியேற்றி வைத்தார். 

இந்நிகழ்ச்சியில் கடலூர்  தெற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் என்.வி.செந்தில்நாதன், மாநில செயலாளர் பி.பி.கே.சித்தார்த்தன், தவிர்த்தாம்பட்டு விஸ்வநாதன், சத்தியமூர்த்தி, நிர்வாகிகள் சுந்தரராஜன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com