
திருச்சி: திருச்சி மாவட்டத்தில் வியாழக்கிழமை வெளியிடப்பட்ட இறுதி வாக்காளர் பட்டியலின்படி, மொத்தமுள்ள 9 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 23 லட்சத்து 10 ஆயிரத்து 413 வாக்காளர்கள் உள்ளனர்.
இந்தியத் தேர்தல் ஆணையத்தின் உத்தரவுப்படி, 1.1.2023 ஐ தகுதியேற்பு நாளாகக் கொண்டு திருச்சி மாவட்டத்தில் உள்ள 9 தொகுதிகளிலும் 2023 ஆம் ஆண்டுக்கான சிறப்பு சுருக்கமுறை திருத்தம் மேற்கொள்ளப்பட்டது. இந்த சிறப்பு சுருக்கமுறை திருத்தம் தொடர்பாக வியாழக்கிழமை (ஜன.5) இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.
இந்தப் பட்டியலில் 9 தொகுதிகளிலும் சேர்த்து 23,10,413 வாக்காளர்கள் இடம் பெற்றுள்ளனர். திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் முன்னிலையில் இந்த வாக்காளர் பட்டியலை ஆட்சியர் மா. பிரதீப்குமார் வெளியிட்டார்.
இதையும் படிக்க | இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு: தமிழகத்தில் 6.20 கோடி வாக்காளர்கள்!
இந்தப் பட்டியலானது மாவட்டம் முழுவதும் உள்ள வாக்காளர் பதிவு அலுவலர் அலுவலகங்கள் (கோட்டாட்சியர் அலுவலகம்), உதவி வாக்காளர் பதிவு அலுவலகங்கள் (வட்டாட்சியர் அலுவலகம்), வாக்குச் சாவடிகளில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.
இந்தப் பட்டியலை பொதுமக்கள் பார்வையிட்டு வாக்காளர்கள் தங்களது பெயர் விவரங்களை சரிபார்த்துக் கொள்ளலாம்.
திருச்சி மாநகராட்சிக்குள்பட்ட பகுதிகளில் வசிப்போர் திருச்சி மாநகராட்சி மைய அலுவலகத்திலும், கோட்ட அலுவலகங்களிலும் சரிபார்க்கலாம். பொதுமக்கள் புதிதாக பெயர் சேர்க்க, நீக்க, திருத்தம் செய்ய படிவங்களை வழங்கி பணிகளை மேற்கொள்ளலாம் என ஆட்சியர் தெரிவித்தார்.
தற்போது வெளியிடப்பட்டுள்ள இறுதி வாக்காளர் பட்டியலில் மணப்பாறை, ஸ்ரீரங்கம், திருச்சி மேற்கு, திருச்சி கிழக்கு, திருவெறும்பூர், லால்குடி, மண்ணச்சநல்லூர், முசிறி, துறையூர் ஆகிய 9 தொகுதிகளிலும் சேர்த்து ஆண்கள்- 11,20,158 பெண்கள்- 11,89,933 மூன்றாம் பாலினம்- 322 என மொத்தம் 23 லட்சத்து 10 ஆயிரத்து 413 வாக்காளர்கள் இடம்பெற்றுள்ளனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.