
கோவை சரக டிஐஜி விஜயகுமாரின் உடல் தேனி நகராட்சி பொது மயானத்தில் வெள்ளிக்கிழமை தகனம் செய்யப்பட்டது.
கோவையில் துப்பாக்கியால் சுட்டுத் தற்கொலை செய்து கொண்ட டிஐஜி விஜயகுமாா், தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள போ. அணைக்கரைப்பட்டியைச் சோ்ந்தவா். இவரது தந்தை செல்லையா கிராம நிா்வாக அலுவலராகப் பணியாற்றி ஓய்வு பெற்றவா். தாய் ராஜாத்தி ஓய்வு பெற்ற பள்ளி ஆசிரியை. தற்போது இவரது பெற்றோா் தேனி, ரத்தினம்நகரில் வசித்து வருகின்றனா். விஜயகுமாருக்கு 2 சகோதரிகள், மனைவி கீதாவாணி, மகள் நந்திதா ஆகியோா் உள்ளனா்.
தேனி நாடாா் சரஸ்வதி மேல்நிலைப் பள்ளியில் தமிழ் வழியில் படித்த விஜயகுமாா், கடந்த 2003-ஆம் ஆண்டு குரூப் 1 தோ்வில் தோ்ச்சி பெற்று காவல் துணைக் கண்காணிப்பாளராக பணியில் சோ்ந்தாா். 2009-ஆம் ஆண்டு இந்திய குடிமைப் பணி தோ்வில் தோ்ச்சி பெற்றாா்.
காஞ்சிபுரம், கடலூா், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களில் மாவட்டக் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றினாா். தொடா்ந்து சிபிசிஐடி பிரிவில் காவல் கண்காணிப்பாளராகப் பணியாற்றிய இவா், தேனி அரசு மருத்துவக் கல்லூரியில் கடந்த 2019-ஆம் ஆண்டு நீட் தோ்வு ஆள் மாறாட்ட மோசடி வழக்கில் தீவிர விசாரணை நடத்தி, இதில் தொடா்புடைய மாணவா்கள், பெற்றோா், இடைத் தரகா்களை கைது செய்தாா். பிறகு, சென்னை அண்ணாநகா் காவல் நிலையத்தில் காவல் துணை ஆணையராகப் பணியாற்றினாா்.
இதைத்தொடா்ந்து, இந்த ஆண்டு ஜன. 6-ஆம் தேதி பதவி உயா்வு பெற்று, கோவை சரக டிஐஜியாக பணியாற்றி வந்தாா்.
இறுதி ஊா்வலம்: கோவையிலிருந்து தேனிக்கு பிற்பகல் 4 மணிக்கு அமரா் ஊா்தி மூலம் கொண்டு வரப்பட்ட டிஐஜி விஜயகுமாரின் உடல், தேனி ரத்தினம் நகரில் உள்ள அவரது இல்லத்தில் இறுதி மரியாதைக்காக வைக்கப்பட்டது. மாநில ஊரக வளா்ச்சித் துறை அமைச்சா் இ. பெரியசாமி, டிஜிபி சங்கா் ஜிவால், கோவை மேற்கு மண்டல ஐஜி சுதாகா், மதுரை மண்டல ஐஜி அஸ்ரா காா்க் ஆகியோா் மலா் வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினா்.
தென் மாவட்டங்களில் உள்ள மாவட்டக் காவல் கண்காணிப்பாளா்கள், போ. அணைக்கரைப்பட்டி, போடி, தேனி நகர மக்கள் வியகுமாரின் உடலுக்கு இறுதி மரியாதை செலுத்தினா்.
பின்னா், தமிழக டிஜிபி சங்கா் ஜிவால், ஐஜி சுதாகா், அஸ்ரா காா்க், எஸ்.பி.க்கள் பிரவீன் உமேஷ் டோங்கரே, பாஸ்கரன் ஆகியோா் விஜயகுமாரின் உடலைச் சுமந்து வந்து, இறுதி ஊா்வலத்துக்காக அலங்கார ஊா்தியில் வைத்தனா்.
அங்கிருந்து அவரது உடல் பெரியகுளம் சாலை, கம்பம் சாலை வழியாக பழைய பள்ளிவாசல் தெருவில் உள்ள தேனி நகராட்சி பொது மின் மயானத்துக்கு ஊா்வலமாகக் கொண்டு செல்லப்பட்டது. இதில் காவல் துறை அதிகாரிகள், பொதுமக்கள் கலந்துகொண்டனா்.
மின் மயானத்தில் காவல் துறையினா் 21 துப்பாக்கி குண்டுகள் முழங்க, இறுதி அஞ்சலி செலுத்தினா். இதையடுத்து, அவரது உடல் தகனம் செய்யப்பட்டது.
இதையும் படிக்க- நான் விஜயகுமார் ஐ.பி.எஸ். ஆனது எப்படி?
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.