எதிர்காலத்தில் பழனிசாமி பெயரையே மறந்துவிடுவார்களோ? - இபிஎஸ் உருக்கமான பேச்சு!

அதிமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணி செய்வதில் முதன்மையான கட்சி என்று நிரூபிக்கப்பட்டு வருகிறது.
எதிர்காலத்தில் பழனிசாமி பெயரையே மறந்துவிடுவார்களோ? - இபிஎஸ் உருக்கமான பேச்சு!

சேலம்: தமிழகத்தில் எங்கு பார்த்தாலும் தன்னை எடப்பாடியார் என்று தான் அழைக்கிறார்கள்; இன்னும் சிறிது காலத்தில் பழனிசாமி பெயரையே மறந்துவிடுவார்கள் என்ற பயம் வந்துவிட்டது. அந்த அளவிற்கு உங்கள் வீட்டில் ஒருவனாக இருந்து மக்களுக்கு பணி செய்யும் வாய்ப்பை கடவுள் கொடுத்துள்ளார் என எடப்பாடி பழனிசாமி உருக்கமான பேசினார்.

சேலம் எடப்பாடி சட்டப்பேரவைத் தொகுதிக்கு உட்பட்ட கொங்கணாபுரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கொடியேற்று விழா நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் முன்னாள் முதல்வரும் அதிமுக பொதுச் செயலாளருமான எடப்பாடி பழனிசாமி பங்கேற்று அதிமுக கொடியை ஏற்றி வைத்து சிறப்புரையாற்றினார். 

அப்போது, அதிமுக ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும் மக்கள் பணி செய்வதில் முதன்மையான கட்சி என்று நிரூபிக்கப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே தார்சாலை அதிகம் உள்ள மாநிலம் தமிழகம் என்ற பெருமையை அதிமுக ஆட்சியில் பெற்றுக் கொடுக்கப்பட்டது.

தமிழகத்தில் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றி தமிழகம் ஏற்றம் பெற அதிமுக நடவடிக்கை எடுத்தது. தற்போது எங்கு பார்த்தாலும் தன்னை எடப்பாடியார் என்று தான் அழைக்கிறார்கள். இன்னும் சிறிது காலத்தில் பழனிசாமி என்ற பெயரை மறந்துவிடுவார்களோ என்ற பயம் வந்துவிட்டது. அந்த அளவிற்கு உங்கள் வீட்டில் ஒருவனாக இருந்து மக்களுக்கு பணி செய்யும் வாய்ப்பை கடவுள் கொடுத்துள்ளார்.

முதியோர் உதவித்தொகை:
அதிமுக ஆட்சியில் ஏழை, எளிய குடும்பத்தில் இருக்கும் முதியோர்களுக்கு கொடுக்கப்பட்டு வந்த உதவித்தொகை  அனைத்தும் நிறுத்தப்பட்டுவிட்டது என்று முதியவர்கள் குற்றம்சாட்டுகின்றனர். வாழ்வதற்கே போராடும் முதியோர்களுக்கு மீண்டும் முதியோர் உதவிதொகையை திமுக அரசு வழங்க வேண்டும், அவ்வாறு வழங்காவிட்டால் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் மீண்டும் வழங்குவோம். 

அதிமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்கள் பல கிடப்பில் போடப்பட்டுவிட்டது. பல கைவிடப்பட்டுவிட்டது.

கிராமப்புற மக்களை தந்திரமாக ஏமாற்றி, வாக்குகளை பெற்று, ஆட்சிக்கு வந்தவுடன் வாக்குறுதிகளை காற்றில் பறக்கவிட்டவர் முதல்வர் ஸ்டாலின்.

விண்ணை மூட்டும் விலைவாசி உயர்வு: 
தமிழகத்தில் விலைவாசி  விண்ணை மூட்டும் அளவிற்கு உயர்ந்துவிட்டது. இன்றைக்கு ரூ.12 ஆயிரம் இருந்தால்தான் குடும்பத்தை நடத்தும் சூழல் ஏற்பட்டுவிட்டது. இரண்டு ஆண்டு காலத்தில் விலைவாசி உயர்ந்துவிட்டது. அதற்கு காரணம் நிர்வாக திறமையற்ற அரசு நடைபெற்று வருகிறது. காய்கறி விலை அதிகரித்துவிட்டது. 

கோரணம்பட்டி பகுதியில் அதிமுக கொடியை ஏற்றி வைத்த பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி .

விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த திமுக அரசு எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை, அத்தியாவசிய பொருட்களின் விலை எந்த மாநிலத்தில் உயராமல் உள்ளதோ? அங்கிருந்து வாங்கி வந்து கூட்டுறவு சங்கம் மூலமாக அரசாங்கம் விற்பனை செய்ய வேண்டும். ஆனால் இன்றைய அரசாங்கம் அதைப்பற்றி கவலைப்படவில்லை, முதல்வருக்கு தனது குடும்பத்திற்கு எவ்வாறு வருமானம் வரும் என்று தான் செயல்பட்டு வருகிறார். நாட்டு மக்களை பற்றி திமுக அரசாங்கத்திற்கு எந்த கவலையும் இல்லை என்று விமர்சனம் செய்தார்.

தமிழகத்தில் பல்வேறு துறைகளில் கொள்ளையடிப்பது தான் திமுகவின் நோக்கமாக இருந்து வருகிறது. திமுக அமைச்சரவையில் இருந்த பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் ஆடியோவில் கருத்து தெரிவிக்கிறார். ரூ.30 ஆயிரம் கோடியை வைத்துக்கொண்டு சபரீசன், உதயநிதி ஸ்டாலின் என்ன செய்வது என்று தெரியாமல் விழித்துக் கொண்டு உள்ளனர் என்று கூறியிருந்தார். 

இரண்டு ஆண்டு ஆட்சிகாலங்களில் கொள்ளையடிப்பதை மட்டும் குறியாக வைத்திருந்தனர். எந்தெந்த துறையில் எவ்வாறு கொள்ளையடிப்பது என்று யோசித்துக் கொண்டு உள்ளனர். இன்றைக்கு நிறைய அமைச்சர்கள் சிறைக்கு சென்று கொண்டிருக்கும் காட்சியை பார்த்து வருகிறோம்.

திமுக தலைவர் ஸ்டாலின் தனக்குப் பிறகு தனது மகன் ஆட்சிக்கு வரவேண்டும் என்று திட்டமிட்டு செயல்பட்டு வருகிறார். அதற்காகத்தான் மகனிடம் விளையாட்டுத் துறை அமைச்சர் பொறுப்பை கொடுத்துள்ளார்.

உழைப்பவர்களுக்கு வாய்ப்பு இல்லை:
பல ஆண்டுகளாக திமுகவிற்காக உழைப்பவர்கள் யாருக்கும் வாய்ப்பு இல்லை. திமுக அமைச்சர் துரைமுருகன் உள்ளிட்டோர் பல ஆண்டுகளாக உழைத்தார்கள், அவர்களுக்கு எல்லாம் முன்னுரிமை கொடுக்கவில்லை. இவ்வாறு வாரிசு அரசு நடத்தி வரும் திமுக அரசாங்கம் குடும்பத்தை மட்டும் தான் பார்க்கிறார்கள். குடும்பம் செல்வசெழிப்புடன் இருக்க வேண்டும், மக்களைப் பற்றி கவலையில்லை எனவும் பேசினார்.

காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி கட்சிகள் கூட்டத்தில் பங்கேற்க ஸ்டாலின் பெங்களூருக்கு சென்றிருந்தார். தமிழகத்தில் உள்ள டெல்டா பாசன விவசாயிகளுக்கு தண்ணீர் திறக்கப்பட்ட நிலையில் தற்பொழுது மேட்டூர் அணையில் தண்ணீர் குறைந்து கொண்டே வருகிறது. கர்நாடகாவிடம் இருந்து தமிழகத்திற்கு திறந்துவிட வேண்டிய பங்குநீர் இதுவரை திறக்கப்படவில்லை. அதுகுறித்து எல்லாம் முதல்வர் எதுவும் கேட்கவில்லை.

மக்களைப்பற்றி சிந்திக்கின்ற முதல்வராக இருந்தால் பெங்களூருக்கு சென்ற முதல்வர், நீர்பாசனத் துறை அமைச்சரை சந்தித்து, உச்ச நீதிமன்ற தீர்ப்பின்படி இரண்டு மாதத்திற்கான காவிரி பங்குநீரை கர்நாடகாவில் இருந்து திறந்துவிட வேண்டும் என்று கேட்டிருப்பார். ஆனால் கர்நாடகாவிற்கு சென்ற முதல்வருக்கு கர்நாடக அரசு மலர்கொத்து கொடுத்து வரவேற்கிறது. அப்போது தமிழகத்திற்கு தேவையான தண்ணீரை பேசி பெற்றுக் கொடுத்தாரா? அதைப்பற்றி எல்லாம் கேட்கவில்லை. தமிழக மக்கள் மற்றும் விவசாயிகளை ஏமாற்றி வருகிறார் என்பதை அனைவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும் என்றும் பேசினார்.

முதல்வர் திறந்துவிட்ட தண்ணீரை நம்பி டெல்டா பாசன விவசாயிகள் குறுவை சாகுபடி செய்துவிட்டனர். இன்னும் 15 நாட்களுக்கு மட்டுமே தண்ணீர்வரும், பிறகு தண்ணீர் கிடைக்காமல் பயிர்கள் கருகி வீணாகிவிடும். மேலும் காவிரி நதி நீரை நம்பிக்கொண்டிருக்கும் 20 மாவட்ட மக்களுக்கு குடிநீர் பிரச்னை ஏற்பட்டுவிடும், இதைப் பற்றி எல்லாம் சிந்திக்காமல் அதிகாரம் மட்டும்தான் வேண்டும் என்று  தமிழக முதல்வர் நினைக்கிறார்.

உண்மையிலே மக்கள் மீது அக்கறை இல்லாத முதல்வர் திமுக தலைவர் ஸ்டாலின் தான். இதற்கெல்லாம் நாடாளுமன்ற தேர்தலில் மக்கள் தகுந்த பாடத்தை புகட்ட வேண்டும். அதிமுக கூட்டணி சார்பாக நிறுத்தப்படும் வேட்பாளரை வெற்றி பெறச் செய்ய வேண்டும் என வேண்டுகோள் விடுத்தார்.

அதிமுக எந்த கட்சிக்கும் அடிமை இல்லை.. முதல்வர் ஸ்டாலின் போன்று கொள்ளை அடித்த பணத்தை காப்பாற்றுவதற்காக அடிமையாக இருக்கலாம். அதிமுக நிர்வாகிகள், தொண்டர்கள் எந்த கட்சிக்கும் அடிமை இல்லை என கூறினார்.

நாடாளுமன்றத்தில் மக்களுக்காக எந்தவொரு உறுப்பினராவது குரல் கொடுத்தார்களா? மத்தியில் தட்டிக் கேட்கும் தைரியம், திராணி தமிழக முதல்வருக்கு இல்லை. அதிமுக தான் எந்த காலகட்டத்திலும் எந்த சூழலிலும் மக்களுக்காக பாடுபடுகின்ற காட்சி என்பதை மீண்டும் மீண்டும் தெரிவித்துக் கொள்கிறேன் என பழனிசாமி கூறினார்
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com