சத்தியமங்கலம் வனப்பகுதியில் 5 வயது ஆண் புலி உயிரிழப்பு: வனத்துறையினர் விசாரணை 

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஐந்து வயது மதிக்கத்தக்க ஆண் புலி உயிரிழந்து. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 
வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் புலியின் உடல் தீமூட்டி எரியூட்டப்பட்டது.
வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் புலியின் உடல் தீமூட்டி எரியூட்டப்பட்டது.

சத்தியமங்கலம்: சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் ஐந்து வயது மதிக்கத்தக்க ஆண் புலி உயிரிழந்து. இது குறித்து வனத்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். 

சத்தியமங்கலம் புலிகள் காப்பக வனப்பகுதியில் புலிகள் அதிக அளவில் காணப்படுகின்றன. புலிகளை பாதுகாப்பதற்காக வனத்துறை சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வரும் சூழ்நிலையில் அவ்வப்போது புலிகளின் உயிரிழப்பு சம்பவங்களும் நடைபெறுகிறது. 

இந்த நிலையில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம், பவானிசாகர் வனச்சரகம், கொத்தமங்கலம் வனப்பகுதியில் வனத்துறையினர் ரோந்து சென்றனர். அப்போது ஒரு வறண்ட நீரோடையில் துர்நாற்றம் வீசியது. இதை அறிந்த வனத்துறையினர் அப்பகுதியில் வனவிலங்குகள் ஏதாவது இறந்து கிடக்கிறதா என தேடி பார்த்தபோது உடல் அழுகிய நிலையில் புலி இறந்து கிடப்பதைக் கண்டு வனத்துறையினர் அதிர்ச்சி அடைந்தனர். 

இது குறித்து உடனடியாக உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் கள இயக்குநர் ராஜ்குமார் அறிவுரையின் பேரில் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் துணை இயக்குநர் (பொறுப்பு) வெங்கடேஷ் முன்னிலையில் வனத்துறை கால்நடை மருத்துவர் சதாசிவம் புலியின் உடலை உடல் கூறாய்வு மேற்கொண்டார். இதில் உயிரிழந்த புலி ஐந்து வயது மதிக்கத்தக்க ஆண் புலி என தெரிய வந்தது. உடல் அழுகிய நிலையில் உள்ளதால் இறப்புக்கான காரணத்தை அறிய புலியின் உடல் பாகங்கள் சேகரிக்கப்பட்டு பரிசோதனைக்காக ஹைதராபாத் உயிரியல் ஆய்வகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது. 

ஆய்வு முடிவுகளுக்கு பின்பு புலி இறப்பிற்கான காரணம் தெரிய வரும் என வனத்துறையினர் தெரிவித்தனர். இதைத் தொடர்ந்து புலியின் உடல் வனத்துறை அதிகாரிகள் முன்னிலையில் தீமூட்டி எரியூட்டப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com