என்.எல்.சி.: நெய்வேலியில் பாமக நாளை(ஜூலை 28) முற்றுகைப் போராட்டம்

என்.எல்.சி. விவகாரம் தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நாளை(வெள்ளிக்கிழமை) நெய்வேலியில் முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது.
கோப்புப்படம்
கோப்புப்படம்

என்.எல்.சி. விவகாரம் தொடர்பாக பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நாளை(வெள்ளிக்கிழமை) நெய்வேலியில் முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது.

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே என்.எல்.சி. இந்தியா நிறுவன சுரங்க விரிவாக்கப் பணிக்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விவசாய நிலங்கள் புதன்கிழமை கையகப்படுத்தப்பட்டன.

அப்போது அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் பயிா்கள் அழிக்கப்பட்டன. இதைக் கண்டித்து விவசாயிகள், பாமகவினா் பல்வேறு இடங்களில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர். 

இதன் தொடர்ச்சியாக என்.எல்.சி. விவகாரம் தொடர்பாக நாளை(வெள்ளிக்கிழமை) பாமக சார்பில் முற்றுகைப் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதைக் கண்டித்தும், என்.எல்.சி. வெளியேற வலியுறுத்தியும் பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் தலைமையில் நாளை நெய்வேலியில் முற்றுகைப் போராட்டம் நடைபெற உள்ளது. 

இதுகுறித்து பாமக வெளியிட்டுள்ள அறிக்கையில், 'என்.எல்.சி. என்ற தமிழ்நாட்டுக்கு எந்த வகையிலும் பயன்படாத ஒரு நிறுவனத்திற்காக அப்பாவி மக்கள் அரும்பாடுபட்டு விவசாயம் செய்த நிலங்களில் உள்ள பயிர்கள் அழிக்கப்படுவதற்கு எதிரான முதல் கண்டனக் குரல் தமிழ்நாட்டின் முதலமைச்சரிடமிருந்துதான் வந்திருக்க வேண்டும். ஆனால், அவரோ, இதைப்பற்றிய எந்த புரிதலும் இல்லாமல் தமிழ்நாட்டு மக்களுக்கு குறை சொல்ல முடியாத ஆட்சியை வழங்கி வருவதாக கூறிக் கொண்டிருக்கிறார். கடலூர் மாவட்ட உழவர்கள் கண்ணீரில் மிதக்கும் நிலையில், திருச்சியில் உழவர்கள் சங்கமம் என்ற பெயரில் கொண்டாட்டத்தில் இருக்கிறார்.

அதிகார போதையில் மேற்கு வங்கத்தில் நந்திகிராம் மற்றும் சிங்கூர் பகுதிகளில் ஏழை உழவர்களின் நிலங்களை அடக்குமுறை கொண்டு கைப்பற்றியவர்களின் எதிர்காலம் என்ன ஆனது? என்பதை வரலாறு பதிவு செய்திருக்கிறது. அந்த வரலாறு இப்போதும் நம் கண்முன் காட்சிகளாக விரிந்திருக்கிறது. என்.எல்.சி.க்கு நிலம் கைப்பற்றித் தருவதற்காக மக்களின் உணர்வுகளை மதிக்காமல் செயல்படும் அனைவரும் இந்த வரலாற்றின் பகுதியாக மாறப்போவது உறுதி என்பதை இந்தத் தருணத்தில் சுட்டிக்காட்ட விரும்புகிறேன்.

பயிர்களை அழித்து, வேளாண் விளைநிலங்களை கைப்பற்றுவதற்கு கடுமையான எதிர்ப்பு எழுந்த நிலையில், அத்திட்டத்தை கைவிடுவதுதான் மக்கள் நலன் சார்ந்த அரசின் செயலாக இருக்க முடியும். ஆனால், எதிர்ப்பு தெரிவிப்பவர்களை கைது செய்தும், கூடுதல் அடக்குமுறையை கட்டவிழ்ப்பதற்காக வெளி மாவட்டங்களில் இருந்து இன்று கூடுதலாக 1000 காவலர்களை வரவழைத்தும், நிலக் கொள்ளையில் கடலூர் மாவட்ட நிர்வாகம் ஈடுபடுகிறது என்றால், அவர்கள் தான் உழவர்களின் முதல் எதிரிகள் ஆவர்.

எத்தகைய அடக்குமுறைகள் கட்டவிழ்த்துவிடப்பட்டாலும், வேளாண் விளை நிலங்கள் கையகப்படுத்தப் படுவதை பாட்டாளி மக்கள் கட்சி அனுமதிக்காது. என்.எல்.சி. இந்தியா நிறுவனம் தமிழ்நாட்டில் இருந்து வெளியேற்றப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருந்து ஒரு போதும் பின்வாங்காது. ஆதரவற்ற நிலையில் உள்ள கடலூர் மாவட்ட மக்களின் பாதுகாவலனாக பாட்டாளி மக்கள் கட்சி தொடர்ந்து களமிறங்கிப் போராடும். அதன் ஒரு கட்டமாக, என்.எல்.சி.க்காக விளைநிலங்கள் கையகப்படுத்தப்படுவதை உடனடியாக தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும்; என்.எல்.சி. நிறுவனம் வெளியேற வேண்டும் ஆகிய கோரிக்கைகளை வலியுறுத்தி, நாளை (28.07.2023) வெள்ளிக்கிழமை காலை 11 மணிக்கு நெய்வேலி ஆர்ச்கேட் பகுதியில் பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பில் என்.எல்.சி. நிறுவனத்தை முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்' என்று குறிப்பிடப்பட்டுள்ளது. 
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com