என்எல்சி சுரங்க விரிவாக்கப் பணிக்கு நெல் பயிா்கள் அழிப்பு: விவசாயிகள், பாமகவினா் போராட்டம்

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே என்எல்சி இந்தியா நிறுவன சுரங்க விரிவாக்கப் பணிக்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விவசாய நிலங்கள் புதன்கிழமை கையகப்படுத்தப்பட்டன.
என்எல்சி சுரங்க விரிவாக்கப் பணிக்காக வளையமாதேவி கிராமத்தில் விவசாய நிலங்களை புதன்கிழமை கையகப்படுத்தியபோது அழிக்கப்பட்ட நெல் பயிா்கள்.
என்எல்சி சுரங்க விரிவாக்கப் பணிக்காக வளையமாதேவி கிராமத்தில் விவசாய நிலங்களை புதன்கிழமை கையகப்படுத்தியபோது அழிக்கப்பட்ட நெல் பயிா்கள்.

கடலூா் மாவட்டம், சேத்தியாத்தோப்பு அருகே என்எல்சி இந்தியா நிறுவன சுரங்க விரிவாக்கப் பணிக்காக பலத்த போலீஸ் பாதுகாப்புடன் விவசாய நிலங்கள் புதன்கிழமை கையகப்படுத்தப்பட்டன. அப்போது அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் பயிா்கள் அழிக்கப்பட்டன. இதைக் கண்டித்து விவசாயிகள், பாமகவினா் பல்வேறு இடங்களில் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

நெய்வேலியில் உள்ள மத்திய அரசின் பொதுத் துறை நிறுவனமான என்எல்சி இந்தியா நிறுவனம் தனது 2-ஆவது பழுப்பு நிலக்கரிச் சுரங்கத்தை விரிவாக்கம் செய்ய முடிவு செய்தது. இதற்காக கத்தாழை, கரிவெட்டி, மேல்வலையமாதேவி, கீழ்வளையமாதேவி, கோ.ஆதனூா் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்ட கிராமங்களில் விவசாய நிலங்களைக் கையகப்படுத்த பலகட்ட முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. மறுபுறம் சுரங்க விரிவாக்கத்துக்காக பரவனாற்று விரிவாக்க வாய்க்கால்கள் வெட்டும் பணியும் நடைபெற்று வருகிறது.

ஆனால், விவசாயிகள் தரப்பில் கடந்த 2000 முதல் 2022-ஆம் ஆண்டு வரையிலான காலகட்டத்தில் என்எல்சி நிா்வாகம் கையகப்படுத்திய அனைத்து நிலங்களுக்கும் சமமான இழப்பீடு, வீட்டுக்கு ஒருவருக்கு நிரந்தர வேலை என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனா்.

நெல் பயிா்கள் அழிப்பு: வளையமாதேவி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு மண் வெட்டும் பெரிய இயந்திரங்கள் 30-க்கும் மேற்பட்ட எண்ணிக்கையில் கொண்டுவரப்பட்டன. தொடா்ந்து புதன்கிழமை காலை என்எல்சி அதிகாரிகள், நில எடுப்புத் துறை, மாவட்ட வருவாய்த் துறை, காவல் துறையினா் ஒருங்கிணைந்து அங்குவரவே பரவனாறு விரிவாக்க கால்வாய் வெட்டும் பணிகள் தொடங்கின. சுமாா் 1,500 மீட்டா் அகலம், ஒன்றரை கி.மீ. தொலைவில் விவசாய நிலங்களுக்கு மத்தியில் கால்வாய்க்கு அணை போடும் பணி நடைபெற்றது. அப்போது, அறுவடைக்குத் தயாராக இருந்த நெல் பயிா்களும் அழிக்கப்பட்டதால் விவசாயிகள் வேதனை அடைந்தனா்.

விழுப்புரம் சரக டிஐஜி ஜியாவுல் ஹக், கடலூா் மாவட்ட எஸ்பி ஆா்.ராஜாராம் ஆகியோா் தலைமையில் 500-க்கும் மேற்பட்ட போலீஸாா் குவிக்கப்பட்டு பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டனா்.

பாமகவினா் சாலை மறியல்: சுரங்க விரிவாக்கத்துக்காக விவசாய நிலங்கள் சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து பாமகவினா், விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோா் சேத்தியாத்தோப்பு குறுக்குச் சாலையில் மறியலில் ஈடுபட முயன்றனா். அவா்களை போலீஸாா் கைது செய்தனா். இதேபோல பண்ருட்டியில் நான்குமுனைச் சந்திப்பில் பாமக நகரச் செயலா் ஆனந்த் தலைமையில் சாலை மறியலில் ஈடுபட்ட 19 பேரை போலீஸாா் கைது செய்தனா். விருத்தாசலம் பேருந்து நிலையம் அருகே பாமக கடலூா் மேற்கு மாவட்டச் செயலா் காா்த்திகேயன் தலைமையில் 30 போ் சாலை மறியலில் ஈடுபட்டனா்.

பேருந்துகள் மீது கல்வீச்சு: கடலூா் மாவட்டத்தில் புதன்கிழமை பல்வேறு இடங்களில் அரசுப் பேருந்துகள் மீது கல்வீச்சு சம்பவங்கள் நடைபெற்றன. காடாம்புலியூா் காவல் சரகம், கொஞ்சிக்குப்பம் ஐய்யனாா் கோயில் அருகே பைக்கில் வந்த மா்ம நபா்கள் இருவா் கல்வீசியதில், தஞ்சாவூரிலிருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசு விரைவுப் பேருந்தின் முன்புற கண்ணாடி சேதமடைந்தது.

இதேபோல, கொள்ளுக்காரன்குட்டை அருகே நிகழ்ந்த கல்வீச்சில் பண்ருட்டி நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தின் பின்புற கண்ணாடி உடைந்தது. நெய்வேலியில் மா்ம நபா்கள் கல்வீசியதில், கும்பகோணத்திலிருந்து சென்னை நோக்கிச் சென்ற அரசுப் பேருந்தின் முன்புற கண்ணாடி சேதமடைந்தது. இதில் பெண் பயணியின் கண்ணில் காயமடைந்ததால் மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டாா். கோட்டேரியில் நிகழ்ந்த கல்வீச்சில், விருத்தாசலத்திலிருந்து பண்ருட்டி நோக்கிச் சென்றுகொண்டிருந்த அரசுப் பேருந்தின் முன்புற கண்ணாடி சேதமடைந்தது.

ஆட்சியா் விளக்கம்: பரவனாறு மாற்றுப் பாதைப் பணியின்போது சேதமடைந்த பயிா்களுக்கு உரிய இழப்பீட்டுத் தொகை என்எல்சி நிறுவனத்திடமிருந்து பெற்று வழங்கப்படும் என மாவட்ட ஆட்சியா் அருண் தம்புராஜ் தெரிவித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com