தமிழ்நாட்டை ஊழலில் இருந்து விடுவிப்பதற்கான பயணம்தான் என் மண், என் மக்கள்: அமித் ஷா

தமிழ்நாட்டை ஊழலில் இருந்து விடுவிப்பதற்கான பயணம்தான் என் மண், என் மக்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டை ஊழலில் இருந்து விடுவிப்பதற்கான பயணம்தான் என் மண், என் மக்கள்: அமித் ஷா
Published on
Updated on
2 min read

தமிழ்நாட்டை ஊழலில் இருந்து விடுவிப்பதற்கான பயணம்தான் என் மண், என் மக்கள் என்று மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா 2 நாள் பயணமாக ராமேசுவரத்துக்கு வருகை தந்துள்ளார். வெள்ளிக்கிழமை பிற்பகல் தனி விமானம் மூலம் மதுரை வந்த அவா், அங்கிருந்து ஹெலிகாப்டா் மூலம் மண்டபம் கடற்படை முகாமிற்கு புறப்பட்டார். பிறகு, சாலை வழியாக ராமேசுவரம் சென்றடைந்தார். தொடர்ந்து ராமேசுவரம் பேருந்து நிலையம் அருகே நடைபெற்ற பாஜகவின் ‘என் மண், என் மக்கள்’ நடைபயணத் தொடக்க விழாவில் அவர் பேசியதாவது, தமிழில் பேச முடியவில்லை என்பதற்காக நான் மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். ராமேசுவரம் இந்தியாவில் இந்து மதத்தின் பாரம்பரிய சின்னமாக விளங்குகிறது. இந்த நடைப்பயணம் தமிழின் பெருமையை காஷ்மீர் முதல் குமரி வரை கொண்டு செல்லும். இந்த நடைப்பயணம் தமிழ்மொழியை உலகம் முழுவதும் கொண்டு செல்லும் பயணம். தமிழ்நாட்டின் சட்டம் ஒழுங்கை சீர்படுத்துவதற்கான நடைப்பயணம்தான் இது. 

தமிழ்நாட்டின் அனைத்து தொகுதிகளுக்கும் பிரதமர் மோடியின் செய்தியை கொண்டு செல்லவிருக்கிறார் அண்ணாமலை. 700 கி.மீ. தூரம் நடந்து சென்று 234 தொகுதிகளையும் சந்திக்க இருக்கிறார் அண்ணாமலை. எம்ஜிஆர், ஜெயலலிதா ஆகியோரின் நலத்திட்டங்களை மீண்டும் கொண்டு வரவே அண்ணாமலை நடைப்பயணம். என் மண், என் மக்கள் தமிழகத்தில் உள்ள குடும்ப ஆட்சியை ஒழிப்பதற்கான பயணம். பிரதமர் மோடி தமிழின் சிறப்பை உலகம் எங்கும் எடுத்துச் சென்றுள்ளார். ஜ.நா.அவையில் தமிழின் பெருமையை குறித்து பேசினார். காசி தமிழ்ச் சங்கமம், சௌராஷ்டிர சங்கமம் மூலம் தமிழின் பெருமையை பரப்பியவர் மோடி. நாடாளுமன்றத்தில் செங்கோலை நிறுவி தமிழின் பெருமையை நிலை நாட்டியுள்ளார் மோடி. 12,000 கோடி ரூபாய் அளவுக்கு ஊழல் செய்தது காங்கிரஸ், திமுக கூட்டணி ஆட்சி. இந்தியா கூட்டணியினர் வாக்கு கேட்டு சென்றால் ஊழல் பற்றி மக்களுக்கு நினைவுக்கு வரும். 

இஸ்ரோ நிறுவனத்தில் ஊழல் செய்தவர்கள் அவர்கள். நாட்டில் இருந்து தீவிரவாதத்தில் இருந்து விடுவிக்க வேண்டுமா, வேண்டாமா. காஷ்மீர் இந்தியாவுடையதா இல்லையா. துல்லியத் தாக்குதலை காங்கிரஸ் கூட்டணி எதிர்த்தது. யுபிஏ கூட்டணி அரசு தமிழ் மொழியின் பின்னடைவுக்குக் காரணம். சோனியாவுக்கு ராகுலை பிரதமராக்க ஆசை. லாலுவுக்கு தேஜஸ்வியை முதல்வராக்க விருப்பம். மம்தாவுக்கு தனது மருமகனை முதல்வராக்க ஆசை. ஸ்டாலினுக்கு உதயநிதியை முதல்வராக்க விருப்பம். மோடி மட்டுமே நாட்டுக்காக உழைக்கிறார். தமிழ்நாடு அரசு, நாட்டிலேயே ஊழல் மிகுந்த அரசு. கைது செய்யப்பட்டவரை அமைச்சரவையில் வைத்திருப்பது வெட்ககரமானது. அமைச்சர் தனது பதவியை ராஜிநாமா செய்தாலும் ஸ்டாலின் ஏற்கமாட்டார். செந்தில் பாலாஜியை ராஜிநாமா செய்யச் சொன்னால் ரகசியங்களை போட்டு உடைப்பார். 

தமிழக அமைச்சர்கள் செய்த ஊழல் அம்பலமாகியுள்ளது. மின்துறையிலும் ஊழல் செய்துள்ள அரசு, தமிழக அரசு. முதல்வர் ஸ்டாலின் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் என்னவாகின. வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு பதில் ஊழல் செய்கின்றனர். யுபிஏ ஆட்சியில் தமிழ்நாட்டிற்கு என்ன நன்மை கிடைத்தது. இலங்கையில் தமிழர்கள் ஒழிக்கப்பட்டதற்கு இதே கூட்டணிதான் காரணமாக இருந்தது. மத்திய அரசு தரும் நிதி மக்களுக்குச் சென்று சேரவில்லை. மெட்ரோ தவிர்த்து பிற திட்டங்களுக்கு பாஜக அரசு ரூ.34,000 கோடி தந்துள்ளது. தமிழ்நாட்டிற்கு 2 வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்படுகின்றன. 62 லட்சம் குடும்பங்களுக்கு கழிப்பறை திட்டத்தை பிரதமர் தந்துள்ளார். கடந்த 9 ஆண்டுகளில் சாதி, ஊழல், குடும்ப ஆட்சிக்கு எதிரான பணிகளை முடுக்கி உள்ளார் மோடி. 15 லட்சம் குடும்பங்களுக்கு பிரதமரின் திட்டத்தின் கீழ் வீடுகள். 2024 தேர்தலில் பாஜக கூட்டணிக்கு வாக்களித்து அதிக எம்பிக்களை தில்லிக்கு அனுப்ப வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

தொடர்ந்து என் மண் என் மக்கள் நடைப்பயணத்தை மத்திய அமைச்சர் அமித் ஷா தொடங்கி வைத்தார். முன்னதாக பேசிய பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை, இந்தியாவில் நடப்பது சாமானியனின் ஆட்சி. அனைத்து நாடுகளும் இந்தியாவின் வளர்ச்சியை பெருமிதத்துடன் பார்க்கின்றன. மோடி அளவிற்கு எந்த பிரதமரும் தமிழை உயர்த்திப் பிடித்ததில்லை. பிரதமர் மோடி இதயத்தால் தமிழர். தமிழ்நாட்டைச் சேர்ந்தவர்கள் திருக்குறளை பிரபலப்படுத்தவில்லை. திட்டங்கள் மூலம் அனைத்து வீடுகளிலும் மோடி உள்ளார். இந்தியா கூட்டணியில் நாளுக்கு ஒருவர் பிரதமர் இருப்பர். தமிழ்நாட்டை மாற்றும் சக்தி இந்த யாத்திரைக்கு உள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார். 
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com