பனிமய மாதா தங்கத்தேர் திருவிழா: நாளை முதல் 10 இடங்களில் வாகன நிறுத்தும் வசதி: மாவட்ட எஸ்பி அறிவிப்பு

தூத்துக்குடி தூய பனிமய மாதா தங்கத்தேர் திருவிழாவை முன்னிட்டு வரும் 29 ஆம் தேதி முதல் 10 இடங்களில் வாகன நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன்
பனிமய மாதா தங்கத்தேர் திருவிழா: நாளை முதல் 10 இடங்களில் வாகன நிறுத்தும் வசதி: மாவட்ட எஸ்பி அறிவிப்பு

தூத்துக்குடி: தூத்துக்குடி தூய பனிமய மாதா தங்கத்தேர் திருவிழாவை முன்னிட்டு வரும் 29 ஆம் தேதி முதல் 10 இடங்களில் வாகன நிறுத்தும் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எல்.பாலாஜி சரவணன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
தூத்துக்குடி தூய பனிமய மாதா கோயில் 441 ஆவது ஆண்டுத்திருவழா, 16 ஆவது தங்கத்தேர் திருவிழா கடந்த 26 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி வரும் ஆகஸ்ட் 5 ஆம் தேதி வரை 11 நாட்கள் நடைபெறுகிறது. 

இந்த திருவிழாவை முன்னிட்டு திருவிழாவின் முக்கிய நிகழ்வுகள் நடைபெறும் நாட்களான வரும் 29, 30 மற்றும் ஆகஸ்ட் 3,4,5 ஆகிய நாள்களில் மக்கள் கூட்டம் அதிகமாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனவே அன்றைய தினத்தில் பொதுமக்கள் தங்கள் வாகனங்களை பாதுகாப்பாக நிறுத்தும் வகையில் மாவட்ட காவல் துறை சார்பில் 10 இடங்களில் வாகன நிறுத்தும் வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, வாகன நிறுத்தம் இடங்கள் விவரம்: 1. புனித பிரான்ஸிஸ் சேவியர் பள்ளி மைதானம், 2.சின்னக்கோயில் வளாகம், 3.லசால் பள்ளி மைதானம், 4.சால்ட் அலுவலக வளாகம், 5.தருவை மைதானம், 6.காரப்பேட்டை ஆண்கள் மேல்நிலைப்பள்ளி வளாகம், 7.முத்துநகர் கடற்கரை, 8.கால்டுவெல் பள்ளி மைதானம், 9.துறைமுக சமுதாய நலக்கூட வளாகம், 10.மீன்பிடி துறைமுக வளாகம் ஆகிய இடங்கள். 

இந்த இடங்களுக்கு எந்தெந்த பகுதி வழியாக வந்தால் வாகனங்களை நிறுத்தலாம் என்பது குறித்த விவரம்:

தூத்துக்குடி வ.உ.சி சாலை (டபிள்யூஜிசி சாலை) வழியாக மாதா கோவில் வரும் வாகனங்கள் பழைய முனிசிபல் அலுவலக சந்திப்பு, வடக்கு காட்டன் ரோடு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு வழியாக சென்று புனித பிரான்ஸிஸ் சேவியர் பள்ளி மைதானத்தில் இரண்டு சக்கர வாகனங்களையும், ரயில்வே ஸ்டேஷன் சாலை, பிரெஞ்சு சேப்பல் தெரு வழியாக சென்று சின்னக்கோயில் வளாகத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் நிறுத்தலாம்.

தூத்துக்குடி வ.உ.சி சாலை வழியாக பழைய முனிசிபல் அலுவலக சந்திப்பு, தீயணைப்புத்துறை சந்திப்பு, தெற்கு காட்டன் சாலை வழியாக சென்று தூய பீட்டர் கோயில் தெருவிலுள்ள லசால் பள்ளி மைதானத்தில் இரண்டு சக்கர வாகனங்களையும், தெற்கு காட்டன் சாலை, பிபிஎம்டி சந்திப்பு வழியாக சென்று ஜார்ஜ் சாலையில் உள்ள சால்ட் அலுவலக வளாகத்தில் இரண்டு சக்கர வாகனங்களையும், தருவை மைதானத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும், பிபிஎம்டி சந்திப்பு வழியாக சென்று லயன்ஸ் டவுனில் உள்ள காரப்பேட்டை ஆண்கள் பள்ளி மைதானத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் நிறுத்தலாம்.

தூத்துக்குடி வடக்கு கடற்கரை சாலை வழியாக மாதா கோவில் வரும் வாகனங்கள், வடக்கு கடற்கரை சாலையிலுள்ள கால்டுவெல் பள்ளி மைதானத்தில் இரண்டு சக்கர வாகனங்களையும், வடக்கு கடற்கரை சாலையிலுள்ள முத்துநகர் கடற்கரையில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும், வடக்கு கடற்கரை சாலையிலுள்ள துறைமுக சமுதாய நலக்கூடம் வளாகத்தில் இரண்டு சக்கர வாகனங்களையும், வடக்கு கடற்கரை சாலை, இந்திரா காந்தி சிலை சந்திப்பு, ரயில்வே ஸ்டேஷன் ரோடு, பிரெஞ்சு சேப்பல் தெரு வழியாக சென்று சின்னக்கோவில் வளாகத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் நிறுத்தலாம்.

தெற்கு கடற்கரை வழியாக மாதா கோவில் வரும் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை மீன்பிடி துறைமுக வளாகத்தில் நிறுத்தலாம். மீன்பிடி துறைமுகத்திற்கு வடக்கே வாகனங்கள் செல்ல அனுமதி இல்லை.

ஜார்ஜ் சாலை வழியாக மாதா கோவில் வரும் வாகனங்கள் ஜார்ஜ் சாலையிலுள்ள தருவை மைதானத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும், பிபிஎம்டி சந்திப்பு வழியாக சென்று ஜார்ஜ் சாலையிலுள்ள சால்ட் அலுவலக வளாகத்தில் இரண்டு சக்கர வாகனங்களையும், பிபிஎம்டி சந்திப்பு, தெற்கு காட்டன் ரோடு வழியாக சென்று தூய பீட்டர் கோவில் தெருவிலுள்ள லசால் பள்ளி மைதானத்தில் இரண்டு சக்கர வாகனங்களையும், பிபிஎம்டி சந்திப்பு வழியாகச் சென்று லயன்ஸ் டவுணிலுள்ள காரப்பேட்டை ஆண்கள் பள்ளி மைதானத்தில் இரண்டு சக்கர வாகனங்கள் மற்றும் நான்கு சக்கர வாகனங்களையும் நிறுத்தலாம்.

எனவே, திருவிழாவிற்கு வருகைதரும் பொதுமக்கள் தங்களது வாகனங்களை போக்குவரத்திற்கு இடையூறாக சாலையோரங்களில் நிறுத்தாமல், அதற்கென ஒதுக்கப்பட்டுள்ள வாகன நிறுத்தங்களில், தங்கள் வாகனங்களை நிறுத்தி காவல்துறைக்கு ஒத்துழைப்பு அளிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com