பயிரிடும் போதே என்எல்சி நிர்வாகம் தடுத்திருக்கலாம்: ஆளுநர் தமிழிசை 

கையக்கப்படுத்தப்பட்ட நிலத்தில் பயிரிடும் போதே நெய்வேலி நிர்வாகம் தடுத்திருக்கலாம் என்று புதுச்சேரி துணை ஆளுநர் (பொறுப்பு), தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி தரிசனம் செய்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.
சிதம்பரம் நடராஜர் கோயிலில் சாமி தரிசனம் செய்த புதுச்சேரி துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன்.

கையக்கப்படுத்தப்பட்ட நிலத்தில் பயிரிடும் போதே நெய்வேலி நிர்வாகம் தடுத்திருக்கலாம் என்று புதுச்சேரி துணை ஆளுநர் (பொறுப்பு), தெலங்கானா ஆளுநருமான தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார்.

சிதம்பரம் நடராஜர் கோயிலுக்கு ஞாயிற்றுக்கிழமை வருகை தந்த புதுச்சேரி துணை நிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி: காரைக்காலில் நிர்வாக ரீதியாக ஆட்சியருடம் ஆலோசனை நடத்த செல்கிறேன். காரைக்கால் மருத்துவமனையை மேம்படுத்துவதற்கும், காரைக்காலில் குடிநீர் பிரசனை குறித்து ஆய்வு மேற்கொண்டு பின்னர் திருவாரூர் செல்கிறேன். செல்லும் வழியில் நடராஜரை தரிசனம் செய்தேன். வாராணசியில் கோயில்களை எப்படி பராமரிக்கப்பது குறித்து மாநாட்டில் பங்கேற்றேன். அதிகளவில் கோயில்கள் பராமரிப்பு இல்லாமல் உள்ளது. ஒரு வேளை விளக்கு போடக்கூட முடியாத கோயில்கள் உள்ளன. இதுதான் மாநாட்டின் நோக்கமாக இருந்தது. அதனால் அனைத்து கோயில்களும் பாதுகாக்கப்பட வேண்டும். ஆன்மீகம் இல்லையென்றால், தமிழ் இல்லை. தமிழை வளர்த்ததே ஆன்மீகம்தான். 

ஆண்டாள் வளர்க்காத தமிழா? நாயன்மார்கள் வளர்க்காத தமிழா? தமிழகத்தில் ஒரே ஒரு பிரசனை என்றால் ஏதோ ஆன்மீகத்திற்கும், தமிழுக்கும் சம்மந்தம் இல்லை என்பது போலவும், தமிழை வளர்த்தவர்கள் ஆன்மீகவாதிகள் இல்லை என்பது போலவும் தோற்றத்தை உருவாக்கி வருகின்றனர். அத்தோற்றம் மறையப்பட வேண்டும். அனைத்து கோயில்களும் பாதுகாக்கப்பட வேண்டும். என்எல்சி நிர்வாகம் பயிரை அழித்ததில் எனக்கு ஒப்புதல் கிடையாது. பயிர் உயிருக்கு சமம். நிர்வாக ரீதியாக 10 ஆண்டுகளாக இடைவெளியை ஏன் அனுமதித்தார்கள். அதற்கு அனுமதிக்கப்பட்டு பயிர்கள் வளர்க்கப்பட்டு அறுவடை முடியும் வரை நிர்வாகம் காத்திருக்கலாம். நெய்வேலி நிர்வாகம் ஏற்கனவே நாங்கள் இந்த நிலங்களை கையக்கப்படுத்தி விட்டோம் என்று கூறுகிறது. 

அமைச்சர் பயிரிக்கூடாது என ஏற்கனவே வலியுறுத்தியுள்ளோம் என கூறுகிறார். இதில் எங்கே இடைவெளி ஏற்பட்டது என தெரியவில்லை. நிலத்தை கையக்கபடுத்தியதால் பயிர் செய்யக்கூடாது என கூறியிருக்க வேண்டும். பயிரிட்ட பிறகு வளர்ந்த பயிரை அழிக்கக்கூடாது என்பது ஒட்டு மொத்த இந்தியாவின் கருத்து அதுதான். நிர்வாக ரீதியாக அரசாங்கத்திற்கும், நிர்வாகத்திற்கும், விவசாயிகளுக்கும் இடையே ஏன் இந்த இடைவெளி இருந்தது. பயிர் வளர்ந்த பிறகு அழிப்பதை விட, பயிரிடும் போதே நிர்வாக ரீதியாக தடுத்திருக்கலாம் என தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்தார். முன்னதாக ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன், நடராஜர் கோயிலுக்கு சென்று கனகசபை மீது ஏறி சித்சபையில் வீற்றுள்ள சிவகாமசுந்தரி சமேத நடராஜப்பெருமானையும், அருகே உள்ள தில்லை கோவிந்தராஜன் பெருமாள் கோயில் சன்னதியிலும் சாமி தரிசனம் செய்தார். 

கோயில் பொது தீட்சிதர்களின் செயலாளர் டி.எஸ்.சிவராமதீட்சிதர் தலைமையில் பொதுதீட்சிதர்கள் ஆளுநரை வரவேற்று அழைத்துச் சென்று சிறப்பு ஆராதனை மற்றும் அர்ச்சனை செய்து பிரதாரத்தை வழங்கினர். பின்னர் சிதம்பரம் எல்லையில் வீற்றுள்ள தில்லைக்காளியம்மன் கோயிலில் சாமி தரிசனம் செய்தார். முன்னதாக சிதம்பரம் கீழசன்னதியில் பாரதிய ஜனதா கட்சி மாவட்ட தலைவர் கே.மருதை, மாவட்ட துணைத் தலைவர் கோபிநாத் கணேசன், திரைப்பட தணிக்கை குழு உறுப்பினர் வே.ராஜரத்தினம், விஸ்வ ஹிந்து பரிஷத் மாவட்ட செயலாளர் ஜோதி குருவாயூரப்பன், முன்னாள் ராணுவ வீரர் பிரிவு மாநில செயலாளர் ஜி.பாலசுப்பிரமணியன், ஆன்மீக பிரிவு மாவட்ட செயலாளர் ஜெயகோபி, நெடுமாறன் உள்ளிட்ட நிர்வாகிகள் ஆளுநருக்கு சால்வை அளித்து வரவேற்றனர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com