கர்நாடகம் மற்றும் கேரள மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் தென்மேற்கு பருவமழை பெய்து வருகிறது. கர்நாடகத்தில் உள்ள கபினி மற்றும் கிருஷ்ணராஜ சாகர் அணைகளுக்கு உபரி நீர் வரத்து வரத் தொடங்கியுள்ளதால், அண்மையில் காவிரி ஆற்றில் விநாடிக்கு 20,000 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வந்தது. இதன் காரணமாக ஒகேனக்கல் காவிரி ஆற்றில் நீர்வரத்து அதிகரித்தது. நீர்வரத்து அதிகரிப்பின் காரணமாக சுற்றுலாப் பயணிகளின் நலன் கருதி கடந்த வெள்ளிக்கிழமை முதல் ஒகேனக்கல் அருவிகளில் சுற்றுலாப் பயணிகள் குளிப்பதற்கு மாவட்ட ஆட்சியர் கி.சாந்தி தடை விதித்து இருந்தார். இதனால் பிரதான அருவி செல்லும் நடைப்பாதை பூட்டப்பட்டு ஒகேனக்கல் போலீஸார் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.