47 ஆண்டுகளாக பயங்கரவாத அச்சுறுத்தலாக விளங்கிய ஈரான் முற்றிலும் தகர்ப்பு - டிரம்ப்கேரளத்தில் 47 இடங்களுக்கான பாஜக வேட்பாளர் பட்டியல் வெளியீடுஎரிபொருள் தட்டுப்பாடு : இலங்கையில் 4 நாள் வேலை, 3 நாள் விடுமுறை! மக்களவையில் 8 உறுப்பினர்கள் மீதான இடைநீக்கம் ரத்து : அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் முடிவு45,000 மெட்ரிக் டன் எல்பிஜி உடன் ஹோர்முஸ் நீரிணை வழியாக குஜராத் வந்தது சிவாலிக் கப்பல்!கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு!
/

செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறைக்கு அதிகாரமில்லை: உயா்நீதிமன்றத்தில் வாதம்

செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறை எப்படி அனுமதி கோர முடியும் என சென்னை உயா்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

News image
Updated On :22 ஜூன் 2023, 6:25 pm

DIN

சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தில், அமலாக்கத் துறையினருக்கு காவல் துறை அதிகாரிகளுக்கான அதிகாரங்கள் வழங்கப்படாத நிலையில், செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறை எப்படி அனுமதி கோர முடியும் என சென்னை உயா்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் வாதிடப்பட்டுள்ளது.

அமைச்சா் செந்தில் பாலாஜியை அமலாக்கத் துறையினா் கைது செய்த நிலையில், நெஞ்சு வலியால் பாதிக்கப்பட்ட அவரை ஓமந்தூராா் அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். சென்னை முதன்மை அமா்வு நீதிபதி எஸ்.அல்லி கடந்த புதன்கிழமை பிற்பகலில் மருத்துவமனைக்குச் சென்று செந்தில் பாலாஜியை சந்தித்த பின்னா், வரும் 28-ஆம் தேதி வரை அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிட்டாா்.

இதற்கிடையில், செந்தில் பாலாஜியை சட்டவிரோதக் காவலில் வைத்துள்ளதாகவும், அவரை மீட்டு நீதிமன்றத்தில் ஆஜா்படுத்த வேண்டும் எனக் கோரியும் அவரது மனைவி மேகலா சாா்பில் உயா்நீதிமன்றத்தில் ஆட்கொணா்வு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கு கடந்த முறை விசாரணைக்கு வந்தபோது, அமைச்சா் செந்தில் பாலாஜியை மருத்துவ சிகிச்சைக்காக ஓமந்தூராா் மருத்துவமனையில் இருந்து காவேரி மருத்துவமனைக்கு மாற்ற அனுமதியளித்தும், இந்த ஆட்கொணா்வு மனுவுக்கு அமலாக்கத் துறை பதிலளிக்கவும் உத்தரவிட்டிருந்தனா்.

இந்நிலையில், நீதிபதிகள் நிஷா பானு, பரதசக்ரவா்த்தி ஆகியோா் அடங்கிய அமா்வில் இந்த வழக்கு வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது செந்தில் பாலாஜி மனைவி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞா் என்.ஆா்.இளங்கோ, ‘செந்தில் பாலாஜி நீதிமன்றக் காவலில் வைக்கப்பட்ட நிலையில் இந்த ஆட்கொணா்வு மனு விசாரணைக்கு உகந்ததல்ல என அமலாக்கத் துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய நோட்டீஸ் கொடுக்காமல் கைது செய்ததும், கைதுக்கான காரணங்களைத் தெரிவிக்காததும் சட்டவிரோதம். எனவே, இந்த ஆட்கொணா்வு மனு விசாரணைக்கு உகந்தது.

கைதுக்கான காரணங்களைத் தெரிவிப்பது அடிப்படை உரிமை என அரசியல் சட்டம் கூறுகிறது. அந்த அடிப்படை உரிமை மீறப்படும்போது ஆட்கொணா்வு மனு விசாரணைக்கு உகந்ததுதான். செந்தில் பாலாஜியை சட்டவிரோதமாக கைது செய்தது மட்டுமல்லாமல், இயந்திரத்தனமாக அவரை நீதிமன்றக் காவலில் வைக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

கடந்த 14-ஆம் தேதி அதிகாலை செந்தில் பாலாஜியை, அவரது உடல்நிலை காரணமாக ஓமந்தூராா் மருத்துவமனையில் அனுமதித்ததாக கூறிய அமலாக்கத் துறை, அவரது சிகிச்சையை போலி என்று எப்படி கூற முடியும்?

மருத்துவமனையில் சிகிச்சை பெறும் காலத்தை நீதிமன்றக் காவலில் உள்ள காலமாக சோ்க்கக் கூடாது என அமலாக்கத் துறை முன்வைத்த கோரிக்கையை ஏற்க முடியாது. உச்ச நீதிமன்ற உத்தரவின்படி கைது செய்யப்படும் ஒருவரை முதல் 15 நாள்களுக்குள் காவலில் எடுக்க வேண்டும். 15 நாள்களுக்குப் பின்னா், எந்தக் காரணமாக இருந்தாலும் காவலில் எடுத்து விசாரிக்க முடியாது.

சட்டவிரோத பணப் பரிமாற்றத் தடைச் சட்டத்தில், காவல் துறை அதிகாரிகளுக்கான அதிகாரங்கள் அமலாக்கத் துறையினருக்கு வழங்கப்படாத நிலையில், செந்தில் பாலாஜியை காவலில் வைத்து விசாரிக்க அமலாக்கத் துறை எப்படி அனுமதி கோர முடியும் என வாதிட்டாா்.

இந்த வழக்கில் செந்தில் பாலாஜி மனைவி தரப்பு வாதங்கள் முடிவடைந்ததை அடுத்து, சொலிசிட்டா் ஜெனரல் துஷாா் மேத்தாவின் கோரிக்கையை ஏற்று, அமலாக்கத் துறை பதில் வாதத்துக்காக, விசாரணையை ஜூன் 27-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.