
புதுச்சேரி: புதுச்சேரியில் தொடர் நகை பறிப்பில் ஈடுபட்ட வடமாநிலத்தை சேர்ந்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
புதுச்சேரி மேரி உழவர்கரை சிவசக்தி நகர் 2 ஆவது குறுக்கு தெருவைச் சேர்ந்த வள்ளி (55). கதிர்காமம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சுகாதார ஊழியராக பணி செய்து வருகிறார். கடந்த 14 ஆம் தேதி பணியை முடித்து வழுதாவூர் மெயின்ரோட்டில் நடந்து சென்றபோது மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர்கள் அவர் அணிந்திருந்த 5 பவுன் தாலி சங்கிலியை பறித்து சென்றனர்.
இதேபோல் முதலியார்பேட்டை ஜெயமூர்த்தி நகரைச் சேர்ந்த ஸ்ரீவேணி (48). அவர் நூறடி சாலையில் நடைபயிற்சி மேற்கொண்டபோது தங்க சங்கிலியை பறித்து சென்றனர். அதேபோல் அண்ணா சாலை மற்றும் மறைமலை அடிகள் சாலையில் நடந்து சென்ற 2 பெண்களிடமும் நகையை பறித்து சென்றனர். தொடர்ந்து பெண்களிடம் நகை பறிப்பு சம்பவம் புதுச்சேரியில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இந்த நிலையில் நகை பறிப்பில் ஈடுபட்ட நபர்களை பிடிக்க ரெட்டியார்பாளையம் காவல் ஆய்வாளர் ஜெய்சங்கர், துணை காவல் ஆய்வாளர் முருகன் ஆகியோர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார், நகை பறிப்பு தொடர்பாக பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை பார்வையிட்டு குற்றவாளிகளை அடையாளம் காணும் முயற்சியில் ஈடுபட்டனர்.
அப்போது, நகை பறிப்பில் ஈடுபட்டவர்கள் திருபுவனையில் இருந்து ஒரு மோட்டார் சைக்கிளை திருடிச் சென்று கைவரிசையில் ஈடுபட்டது தெரியவந்தது. மேலும் விசாரணையில் மராட்டியத்தை சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்கள் முகமது ஜாபர் குருஷி (29), வாரிஷ் கான் (30), விழுப்புரத்தில் உள்ள அவர்களது உறவினர் ஒருவரது வீட்டில் கடந்த சில நாள்களாக தங்கியிருந்து புதுச்சேரி மற்றும் தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நகை பறிப்பில் ஈடுபட்டது தெரியவந்தது.
இந்தநிலையில் பெரம்பை சாலையில் தனிப்படை போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டபோது, அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை மடக்கி சோதனையிட்டனர். அப்போது அவர் முன்னுக்கு பின் முரணாக பதிலளித்தார். இதனால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் வலுத்தது.
இதையடுத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் புதுச்சேரியில் பல்வேறு இடங்களில் நகை பறிப்பில் ஈடுபட்ட முகமது ஜாபர் குருஷி என்பது தெரியவந்தது. உடனே அவரை போலீசார் கைது தீவிர விசாரணை செய்தனர்.
விசாரணையில் அவரின் கூட்டாளியான வாரிஷ் கான் உத்தரப்பிரதேசம் தப்பிச்சென்றது தெரியவந்தது. மேலும் நகைகளை விழுப்புரத்தில் உள்ள உறவினர் மூலமாக வேறொருவரிடம் விற்பனை செய்தது தெரியவந்தது. அவரிடம் இருந்து 8 பவுன் நகைகளை போலீசார் மீட்டனர். இந்த வழக்கில் தப்பியோடிய வாரிஷ் கானை பிடிக்க தனிப்படை போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.