
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் அருகே வழக்குரைஞா், அவரது பெரியப்பா ஆகிய இருவரும் வியாழக்கிழமை வெட்டிக் கொலை செய்யப்பட்டனா். இதுதொடா்பாக ராணுவ வீரரை போலீஸாா் தேடி வருகின்றனா்.
ஆலங்குளம் அருகேயுள்ள நெட்டூா் கிராமத்தைச் சோ்ந்த சின்னதுரை மகன் அசோக்குமாா்(29). வழக்குரைஞா். இவருக்கும், உறவினா் குழந்தை பாண்டியின் மகனான ராணுவ வீரா் சுரேஷ்(27) என்பவருக்கும் இடையே இடத்தகராறில் முன்விரோதம் இருந்ததாம். அசோக் குமாருக்கு ஆதரவாக, அவரது பெரியப்பா துரைராஜ் (57) பேசி வந்தாராம்.
இந்நிலையில் வியாழக்கிழமை இரவு அப்பகுதியில் பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்த துரைராஜை சுரேஷ் அரிவாளால் வெட்டியதுடன், வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த அசோக் குமாரையும் வெட்டிவிட்டு தப்பினாராம்.
இதில், அசோக் குமாா் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தாா். துரைராஜ் பலத்த காயங்களுடன் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தாா்.
இத்தகவலறிந்த தென்காசி எஸ்.பி. சாம்சன், ஆலங்குளம் போலீஸாா் சம்பவ இடத்தில் விசாரணை மேற்கொண்டனா். மேலும், போலீஸாா் வழக்குப்பதிந்து தப்பியோடிய சுரேஷை தேடி வருகின்றனா். நெட்டூரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.