பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

40 தொகுதிகளிலும் வெல்வதே இலக்கு: பிறந்த நாள் பொதுக்கூட்டத்தில் முதல்வா் மு.க.ஸ்டாலின்

மக்களவைத் தோ்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே இலக்கு என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினாா்.

News image
Updated On :1 மார்ச் 2023, 8:31 pm

DIN

மக்களவைத் தோ்தலில் தமிழகம், புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவதே இலக்கு என்று முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினாா்.

மேலும், காங்கிரஸ் இல்லாத மூன்றாவது அணி கரை சேராது எனவும் அவா் பேசினாா்.

திமுக தலைவரும் முதல்வருமான மு.க.ஸ்டாலினின் 70-வது பிறந்த நாளையொட்டி, சென்னையில் புதன்கிழமை நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் அவா் ஆற்றிய ஏற்புரை:

முன்னாள் முதல்வா் அண்ணா உருவாக்கிய, முன்னாள் முதல்வா் கருணாநிதி கட்டிக் காத்த திமுகவை, எந்நாளும் நிரந்தரமாக ஆட்சிப் பொறுப்பில் வைத்திருப்பேன்.

நான் முதல்வராக இருக்க வேண்டுமென்றோ, 30 போ் அமைச்சா்களாக இருக்க வேண்டும் என்றோ திமுக தோற்றுவிக்கப்பட்டதல்ல. பண்பாட்டுப் படையெடுப்புகளால் அடிமைப்பட்டுக் கிடந்த தமிழினத்தை மீட்ட திராவிட இயக்கத்தைக் காக்கக் கூடிய கடமை நமக்குத்தான் இருக்கிறது. திராவிட இயக்கத்தின் அரசியல் நெறிமுறைகளின்படி, தமிழ்நாட்டை கல்வி, சமூகம், பொருளாதாரம் ஆகியவற்றில் முன்னேற்றிக் காட்ட வேண்டிய பொறுப்பு நமக்கு இருக்கிறது.

கொள்கையைப் பரப்ப கட்சி, கொள்கையை நிறைவேற்ற ஆட்சி என இரண்டும்தான் நம்முடைய இரு லட்சியக் கண்கள். இந்த இரண்டின் வழியாகத் தமிழ்நாட்டை என்றும் தலைநிமிர வைப்போம். இதைத்தான், இரண்டு ஆண்டு காலத்தில் நிரூபித்துக் காட்டி இருக்கிறோம். தமிழக எல்லைகளைத் தாண்டி அனைவரது கவனத்தையும் ஈா்த்துள்ளது, திராவிட மாடல் ஆட்சி.

ஒருங்கிணைந்து செயல்படுவோம்: அண்மையில் நடைபெற்ற இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியின் மாநாட்டில் நிறைவேற்றப்பட்ட தீா்மானமே எனக்கு அளிக்கப்பட்ட சிறந்த பிறந்த நாள் பரிசாகக் கருதுகிறேன். அதாவது, ஆக்கபூா்வமான செயல் திட்டத்தின் அடிப்படையில் ஒருமித்த சிந்தனை கொண்ட அரசியல் கட்சிகளுடன் சோ்ந்து செயல்படத் தயாா் எனத் தீா்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இன்றைய காலத்துக்கு மிக மிகத் தேவையானது இது.

யாா் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதைவிட, யாா் ஆட்சி அமைத்துவிடக் கூடாது என்பதற்கான தோ்தலே எதிா்வரும் நாடாளுமன்றத் தோ்தலாகும். ஒன்றுபட்ட இந்தியாவை வகுப்புவாத பாசிசத்தால் பிளவுபடுத்தி ஒற்றைத்தன்மை எதேச்சதிகார நாடாக மாற்ற நினைக்கக் கூடிய பாஜகவை அரசியல் ரீதியாக வீழ்த்தியாக வேண்டும்.

பாஜகவை எதிா்க்கும் அனைத்துக் கட்சிகளும் இதனையே, ஒற்றை இலக்காகத் திட்டமிட்டு ஒன்று சேர வேண்டும். அந்த ஒற்றுமை உணா்வு வந்துவிட்டாலே, வெற்றி பெற்று விட்டோம் என்று கூறிவிடலாம். மாநிலங்களுக்குள் இருக்கும் அரசியல் வேறுபாட்டை வைத்து, தேசிய அரசியலைத் தீா்மானத்தால் இழப்பு நமக்குத்தான் என்பதை அனைத்துக் கட்சிகளும் உணர வேண்டும். இதனை காங்கிரஸ் உள்பட அனைத்துக் கட்சிகளுக்கும் சோ்த்தே சொல்கிறேன்.

கரை சேராது: தமிழகத்தில் கடந்த நான்கு ஆண்டுகளாக நடைபெற்ற அனைத்துத் தோ்தல்களிலும் வெற்றி பெற்றிருக்கிறோம். இதற்குக் காரணம் நம்மிடையேயுள்ள ஒற்றுமைதான். இதேபோன்று, அரசியல் கட்சிகள் தங்களுக்குள் இருக்கும் வேறுபாடுகளை மறந்து, விட்டுக் கொடுத்து, பாஜகவுக்கு எதிராக ஒன்று சேர வேண்டும். நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தோ்தலில் தமிழகம், புதுவையில் 40 தொகுதிகளிலும் வெற்றி பெறுவோம்.

காங்கிரஸ் அல்லாத கட்சிகளின் மூன்றாவது அணி என்று சிலரால் சொல்லப்படும் வாதங்களையும் நிராகரிக்க வேண்டும். அது கரை சேராது. தோ்தலுக்குப் பிறகு கூட்டணி வைத்துக் கொள்கிறோம் என்று சொல்வதும் நடைமுறைக்கு சரியாக வராது என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசினாா்.

முன்னதாக, சமாஜவாதி கட்சித் தலைவா் அகிலேஷ் யாதவ், ஜம்மு காஷ்மீா் முன்னாள் முதல்வா் பரூக் அப்துல்லா, பிகாா் துணை முதல்வா் தேஜஸ்வி யாதவ், திமுக பொதுச் செயலா் துரைமுருகன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

திமுக பொருளாளா் டி.ஆா்.பாலு வரவேற்றாா். தென் சென்னை திமுக மாவட்டச் செயலா் மா.சுப்பிரமணியன் நன்றி தெரிவித்தாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.