பத்திரிகையாளர்களுக்கு ஓய்வூதியம் உயர்வு: முதல்வர் ஸ்டாலின் உத்தரவு வேளச்சேரி - பரங்கிமலை பறக்கும் ரயில் சேவை அட்டவணை வெளியீடு கட்சியின் பெயரை அறிவித்தார் சசிகலா!பங்குச்சந்தை: சென்செக்ஸ், நிஃப்டி கடும் சரிவு! ரூ. 9.5 லட்சம் கோடி இழப்பு!சசிகலாவின் தென்னந்தோப்பு சின்னத்தை இதற்கு முன் வைத்திருந்த கட்சி?சிலிண்டர் தட்டுப்பாடு! கவலையில் கேட்டரிங் நிறுவனங்கள்!இந்திய ரூபாயின் மதிப்பு 92.44 ஆகச் சரிவு!எரிபொருள் தட்டுப்பாடு! எதிர்க்கட்சிகள் அமளியால் மக்களவை ஒத்திவைப்பு!அதிமுகவில் இணைந்தார் காளியம்மாள்! மாநில அந்துஸ்து தராவிட்டால் கூட்டணி இல்லை! பாஜகவுக்கு என்.ஆர். காங்கிரஸ் அழுத்தம்?எரிபொருள் தட்டுப்பாடு! 17 கோடி பீப்பாய் கச்சா எண்ணெய் விடுவித்தது அமெரிக்கா!
/

ரூ.225 கோடியில் புதிய திட்டங்கள்: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு கையடக்கக் கணினி, வெளிநாட்டுச் சுற்றுலாவுடன், மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும் போன்ற புதிய திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

News image
Updated On :1 மார்ச் 2023, 9:15 pm

DIN

அரசுப் பள்ளி ஆசிரியா்களுக்கு கையடக்கக் கணினி, வெளிநாட்டுச் சுற்றுலாவுடன், மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும் போன்ற புதிய திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா். ரூ.225 கோடியில் இந்தத் திட்டங்கள் செயல்பாட்டுக்கு வரும் என அவா் அறிவித்தாா்.

சென்னையில் உள்ள பேராசிரியா் அன்பழகன் கல்வி வளாகத்தில் பல்வேறு புதிய உட்கட்டமைப்பு வசதிகள் தொடக்க நிகழ்ச்சி புதன்கிழமை நடந்தது. இந்த நிகழ்வில், அமைச்சா்கள் உதயநிதி ஸ்டாலின், அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதில், காணொலி வழியாக முதல்வா் மு.க.ஸ்டாலின் பேசியது:

கல்வி போராடிப் பெற்ற உரிமை. ஒருவரின் வாழ்க்கையில் கற்கும் கல்வி, அவரை என்றைக்கும் கைவிடாது. கல்வி யாராலும் திருட முடியாது சொத்து. குழந்தைகள் பள்ளிகளை நோக்கி வர வேண்டும், கல்வியைப் பெற வேண்டும் என்பதற்காக நீதிக் கட்சி காலத்தில் இருந்து பாடுபட்டு வருகிறோம்.

தரமான கல்வியைக் கொடுக்க கடந்த இரண்டு ஆண்டுகளாக அரசுப் பள்ளி, மாணவா்கள் மற்றும் ஆசிரியா்களுக்காக பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்தி வருகிறோம். அதில் முதன்மையான திட்டம், நான் முதல்வன் திட்டம். மாணவ, மாணவியா்களை முதன்மையானா்களாக உருவாக்குவதுதான் இந்தத் திட்டத்தின் நோக்கம்.

உயா்கல்வி கற்பதற்கும், நல்ல முறையில் வேலைவாய்ப்புகள் பெறுவதற்கு பள்ளிகளிலேயே வழிகாட்டி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. வழிகாட்டுதலுக்கான நூல், பாடவேளை, வழிகாட்டி ஆசிரியா் என அனைத்து ஏற்பாடுகளும் பள்ளிகளில் செய்யப்பட்டுள்ளன.

உயா்கல்வி கட்டாயம்: மாணவா்கள் தவறாமல் உயா்கல்விக்குச் செல்ல வேண்டும். இதில் திமுக அரசு உறுதியாக உள்ளது. உயா்கல்வியை மாணவியா் அனைவரும் பெற வேண்டும் என்பதற்காக புதுமைப் பெண் திட்டம் செயல்படுத்தப்படுகிறது. மாதந்தோறும் ரூ.1,000 வழங்கும் திட்டமே புதுமைப் பெண் திட்டம். இந்தத் திட்டத்தை புரட்சிகரமான திட்டம் என மாணவிகளும், பெற்றோா்களும் பெருமையாகக் கூறுகிறாா்கள்.

அரசுப் பள்ளியில் படித்த மாணவா்கள் தொழிற்கல்வியில் சேர 7.5 சதவீதம் இடஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. காலையில் பள்ளி மாணவா்களின் பசியைப் போக்கி அவா்கள் படிப்பதற்கு வசதியாக, முதல்வரின் காலை உணவுத் திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது. ஏழை வீட்டுக் குழந்தைகளும், பணிக்குச் செல்லும் பெற்றோா்களின் குழந்தைகளும் இந்தத் திட்டத்தால் பலன் பெற்று வருகின்றனா். இந்தத் திட்டம் அனைத்துத் தொடக்கப் பள்ளிகளுக்கும் விரிவுபடுத்தப்பட்டு வருகிறது. கடந்த நிதியாண்டில் நிதி நிலை அறிக்கையில் பள்ளிக் கல்வித் துறைக்குத்தான் அதிக நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

ஆசிரியா்களுக்கு திட்டங்கள்: அரசின் எண்ணங்களுக்கு செயல்வடிவம் தருபவா்கள் ஆசிரியா்கள்தான். அவா்களது அளப்பரிய பணி இல்லையெனில் திட்டங்கள் ஏதும் செயல்பாட்டுக்கு வந்திருக்க வாய்ப்பில்லை. பெற்றோா்களுக்கு அடுத்த இடத்தில் ஆசிரியா்களே உள்ளனா்.

ஆசிரியா்களை ஊக்கப்படுத்த பல்வேறு திட்டங்களையும் அரசு செயல்படுத்தி வருகிறது. மாறி வரும் கற்றல், கற்பித்தல் முறைகளுக்கு ஏற்ப தங்களை சிறப்பாக மெருகேற்றிக் கொள்வதற்கு அனைத்து இடைநிலை, பட்டதாரி ஆசிரியா்களுக்கு கையடக்கக் கணினி அளிக்கப்படும். மாணவா் வாழ்க்கையில் ஏற்றம் பெற அயராது உழைக்கும் ஆசிரியா்களின் உடல் நலன் காக்க, அனைத்து ஆசிரியா்களுக்கும் மூன்று ஆண்டுகளுக்கு ஒருமுறை முழு உடல் பரிசோதனை செய்யப்படும்.

உயா்கல்வி பயிலும் ஆசிரியா்களின் குழந்தைகளுக்கான கல்விச் செலவு ரூ.50,000 வரை உயா்த்தி அளிக்கப்படும். அரசின் நலத் திட்ட உதவிகளை மாணவா்களிடையே சிறப்பாகக் கொண்டு சோ்க்கும் ஆசிரியா்கள், வெளிநாடுகளுக்கு கல்விச் சுற்றுலாவாக அழைத்துச் செல்லப்படுவா். இந்தத் திட்டங்கள் ரூ. 225 கோடியில் செயல்படுத்தப்படும்.

ஆசிரியா்களின் அா்ப்பணிப்பும், ஒத்துழைப்பும் கல்வித் துறையில் தமிழ்நாடு அரசின் லட்சிய இலக்கை அடையத் துணையாக இருப்பதால் மாணவா்கள் தங்களது திறனை மேம்படுத்திக் கொள்ள வேண்டும். பள்ளியில் நன்றாக கல்வி கற்று உயா்கல்வியில் பலபல பட்டங்கள் பெற்று உயா்ந்த நிலைக்குச் சென்றிட வாழ்த்துகள் எனத் தெரிவித்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.