ஆனைகட்டியில் யானைகள் தாக்கி ஒரே நாளில் இரண்டு பேர் பலி!

கோவை அருகே உள்ள ஆனைகட்டியில் காட்டு யானைகள் தாக்கியதில் ஒரே நாளில் இரண்டு பேர் பலியான சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ஆனைகட்டியில் யானைகள் தாக்கி ஒரே நாளில் இரண்டு பேர் பலி!

கோவை அருகே உள்ள ஆனைகட்டியில் காட்டு யானைகள் தாக்கியதில் ஒரே நாளில் இரண்டு பேர் பலியான சம்பவம் மிகுந்த சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

சின்ன தடாகத்தை அடுத்துள்ள ஆனைகட்டி வனப்பகுதியில் ஏராளமான யானைகள் வசிக்கின்றன. இவை  உணவு மற்றும் குடிநீர் தேடி இரவு நேரங்களில் அவ்வப்போது ஊருக்குள் புகுவது வழக்கம்.

இந்நிலையில் வியாழக்கிழமை அதிகாலை 2 மணி அளவில் கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட ஆனைக்கட்டி அடிவாரத்தில் மாங்கரை கிராமத்தில் உள்ள ராமச்சந்திரன் என்பவரது தோட்டத்திற்குள் ஒற்றை யானை ஒன்று புகுந்தது. இதுகுறித்து பொதுமக்கள் கோவை நகர வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறையினர் பட்டாசு வெடித்து அதனை விரட்டும் பணியில் ஈடுபட்டனர்.

அப்போது அது  மாங்கரையிலுள்ள குடியிருப்பு பகுதிக்குள் புகுந்தது. அப்போது அங்கு வசிக்கும் தனியார் பார்மசி நிறுவன ஊழியரான மகேஷ் குமாரும்(38) இந்த யானையை விரட்ட முற்பட்டார். அப்போது இருட்டில் மறைந்திருந்த யானை இவரை தாக்கியது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். வனத்துறையினர் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இந்நிலையில் இந்த பரபரப்பு அடங்குவதற்குள் அதிகாலை 5 மணி அளவில் ஆனைகட்டி மலை மேல் அடர்ந்த வனப்பகுதி ஒட்டி உள்ள துவைப்பதி கிராமத்தைச் சார்ந்த மணி என்பவருடைய மகன் கூலித் தொழிலாளியான மருதாச்சலம்(67) இங்குள்ள ஆவின் பால் கம்பெனி வளாகத்திற்கு அருகில் இயற்கை உபாதைக்காகச் சென்றுள்ளார். அப்போது எதிரில் வந்த ஒற்றை யானை இவரை தாக்கியது. இதில் அவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். 

இதுகுறித்து அப்பகுதி மக்கள் கோவை வனத்துறையினருக்கு தகவல் அளித்தனர் அதன் அடிப்படையில் அங்கு விரைந்து சென்ற வனத்துறையினர் சடலத்தை மீட்டு பிரேதப் பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். தடாகம் போலீசாரும் இதுகுறித்து விசாரிக்கின்றனர்.

ஒரே நாளில் வெவ்வேறு இடங்களில் யானை தாக்கி இருவர் உயிரிழந்த சம்பவம் அவர்களது உறவினர்கள் மற்றும் ஊர் பொதுமக்கள் இடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com