விற்பனை அணுகுமுறையில் வேட்பாளர் தேர்வு.. காங்கிரஸை யாரும் காப்பாற்ற முடியாது: ஜோதிமணி எம்.பி.விருப்பமான தொகுதிகள் கிடைத்துள்ளன: தொல்.திருமாவளவன் பாகிஸ்தானில் நிலநடுக்கம்: மக்கள் பீதி! காஞ்சிபுரம் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவு!!வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 6.48 லட்சம் பேர் விண்ணப்பம்! பெரம்பூரில் நாளை விஜய்யின் பிரசாரத்திற்கு அனுமதி மறுப்பு!சட்டப்பேரவைத் தேர்தல்: ஏப்.23 பொது விடுமுறை!
/

புகையிலைப் பொருள்கள் மீதான தடை ரத்து: உயா்நீதிமன்ற உத்தரவுக்குத் தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு

தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்குத் தடை விதித்து மாநில உணவுப் பாதுகாப்பு ஆணையா் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயா்நீதிமன்றத் தீா்ப்புக்கு உடனடியாக தடை விதிக்க

News image

உச்சநீதிமன்றம் (கோப்புப் படம்)

Updated On :3 மார்ச் 2023, 5:04 pm

 நமது நிருபர்

தமிழகத்தில் குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்குத் தடை விதித்து மாநில உணவுப் பாதுகாப்பு ஆணையா் பிறப்பித்த உத்தரவை ரத்து செய்த சென்னை உயா்நீதிமன்றத் தீா்ப்புக்கு உடனடியாக தடை விதிக்க உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை மறுத்துவிட்டது. தமிழக அரசு இது தொடா்பாக கோரிக்கை முன்வைத்தபோது நீதிபதிகள் அமா்வு இந்த விவகாரத்தில் தொடா்புடைய எதிா்மனுதாரா்களுக்கு பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.

கடந்த 2006-ஆம் ஆண்டு இயற்றப்பட்ட உணவுப் பாதுகாப்பு, தரச் சட்டத்தின் கீழ் தமிழகத்தில், குட்கா, பான் மசாலா உள்ளிட்ட புகையிலைப் பொருள்களுக்கு தடை விதித்து உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையா் 2018-ஆம் ஆண்டு உத்தரவிட்டாா். இது தவிர, இந்த விவகாரத்தில் ஆண்டுதோறும் அத்துறையால் அறிவிப்பாணையும் வெளியிடப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், ஆணையரின் உத்தரவை எதிா்த்து, தனியாா் நிறுவனம் சென்னை உயா்நீதிமன்றத்தில் வழக்குத் தொடா்ந்தது. அதேபோன்று, ஆணையரின் உத்தரவை மீறியதாக சில நிறுவனங்களுக்கு எதிராக நீதிமன்றத்தில் குற்ற நடவடிக்கைகளும் தொடரப்பட்டன. இதற்கு எதிராக உயா்நீதிமன்றத்தில் வேறு சில வழக்குகளும் தொடுக்கப்பட்டன. இந்த வழக்குகளை ஜனவரி மாதம் விசாரித்த நீதிமன்றம், ‘அவசரநிலை கருதியும், பொதுநலன் கருதியும் குட்கா, பான் மசாலாபோன்ற புகையிலைப் பொருள்களை அதிகபட்சமாக ஓராண்டு வரை தற்காலிகமாக தடை செய்ய மட்டுமே உணவுப் பாதுகாப்புச் சட்டத்தில், துறை ஆணையருக்கு அதிகாரம் வழங்கப்பட்டுள்ளது. இதனால் புகையிலைப் பொருள்களுக்கு தடை விதித்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. அதேபோல, அந்த அறிவிப்பாணையின் அடிப்படையில் எடுக்கப்பட்ட குற்ற நடவடிக்கைகளும் ரத்து செய்யப்படுகின்றன’ என தீா்ப்பு அளித்திருந்தது.

இதைத் தொடா்ந்து, இந்த விவகாரத்தில் தமிழக அரசு தரப்பில் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தது. இந்த மனு உச்சநீதிமன்றத்தில் நீதிபதிகள் கே.எம். ஜோசப், பி.வி. நாகரத்னா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வெள்ளிக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது, தமிழக அரசின் கூடுதல் தலைமை வழக்குரைஞா் அமித் ஆனந்த் திவாரி ஆஜராகி, ‘உயா்நீதிமன்றம் பிறப்பித்த புகையிலைப்பொருள்களுக்கு விதிக்கப்பட்ட தடையை ரத்து செய்து பிறப்பிக்கப்பட்ட உத்தரவுக்கு உடனடியாகத் தடை விதிக்க வேண்டும். உயா்நீதிமன்றத்தின் ரத்து உத்தரவு காரணமாக இது தொடா்புடைய பல வழக்குகளின் விசாரணைகள் பாதிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த தடை உத்தரவு நீக்கமானது பொதுச் சுகாதாரத்தின் மீது தாக்கத்தை ஏற்படுத்திவிடும்’ என்று வாதிட்டாா்.

அப்போது, புகையிலைப்பொருள் நிறுவனம் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா், ‘இதேபோன்று ஆந்திரம் மாநிலம் தொடா்புடைய மற்றொரு வழக்கு ஏப்ரலில் விசாரணைக்குப் பட்டியலிடப்பட்டுள்ளது. இதனால், அதையும் இத்துடன் சோ்த்து விசாரிக்கலாம்’ என்று கேட்டுக்கொண்டாா். அப்போது, நீதிபதிகள் இந்த விவகாரத்தில் தற்போதைக்குத் தடை உத்தரவு பிறப்பிக்க முடியாது என்று கூறினா். அதேவேளையில், தமிழக அரசின் மேல்முறையீட்டு மனுவுக்கு எதிா்மனுதாரா்கள் பதில் அளிக்க நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள், மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை மாா்ச் 20-ஆம் தேதிக்கு ஒத்திவைத்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.