நீடித்த வளர்ச்சி இலக்கிற்கான புத்தகங்கள் மற்றும் இலச்சினை வெளியீடு!

நீடித்த வளர்ச்சி இலக்கிற்கான புத்தகங்கள் மற்றும் இலச்சினையை வெளியிட்டு,  நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான சமூக ஊடகங்களை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.
நீடித்த வளர்ச்சி இலக்கிற்கான புத்தகங்கள் மற்றும் இலச்சினை வெளியீடு!


சென்னை: நீடித்த வளர்ச்சி இலக்கிற்கான புத்தகங்கள் மற்றும் இலச்சினையை வெளியிட்டு,  நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான சமூக ஊடகங்களை தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் அவர்கள் தொடங்கி வைத்தார்.

தமிழ்நாடு முதல்வர் மு.க. ஸ்டாலின் சனிக்கிழமை (மார்ச் 4) தலைமைச் செயலகத்தில், திட்டம் மற்றும் வளர்ச்சித் துறை சார்பில் 2030 ஆம் ஆண்டுக்குள் நீடித்த வளர்ச்சி இலக்குகளை தமிழ்நாட்டில் முழுவதுமாக அடையும் வண்ணம் அரசின் செயல்பாடுகளை வெளிப்படுத்தும் விதமாக நீடித்த வளர்ச்சி இலக்குகள் தொடர்பான புத்தகங்கள் மற்றும் இலச்சினையை வெளியிட்டு, நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான சமூக ஊடகங்களை தொடங்கி வைத்தார்.  

இதுதொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: 

நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான தமிழ்நாடு அரசின் முதலீடுகள்:
நீடித்த வளர்ச்சி இலக்குகளின் ஐந்து அடிப்படைக் கொள்கைகளான, மக்கள், வளம், புவிக்கோள், அமைதி மற்றும் கூட்டாண்மை ஆகியவற்றினை கருத்திற் கொண்டு, தமிழ்நாடு அரசால் முன்னெடுக்கப்பட்ட முயற்சிகளை விவரிக்கும் வகையிலும், அரசின் கொள்கை முடிவெடுப்பவர்களுக்கு, திட்டங்கள் மற்றும் சிறப்பு முயற்சிகளின் பயன்களை கண்காணிக்கவும், அதனை மேலும் முன்னேற்றுவதற்கு தேவையான தகவல்களை அளிக்கும் வகையிலும் இப்புத்தகம் தயாரிக்கப்பட்டுள்ளது.

தொகுப்பு மாவட்ட கூட்டங்கள் - நீடித்த வளர்ச்சி இலக்குகளை உள்ளூர் மயமாக்கல்:  
இப்புத்தகம், நீடித்த வளர்ச்சி இலக்குகளில் பங்காற்றும் துறைகளின் மாவட்ட மற்றும் வட்டார அளவிலான அலுவலர்களுக்கு இதன் முக்கியத்துவத்தையும், நீடித்த வளர்ச்சி இலக்குகளை கிராம அளவிலும் எய்துவதற்காக மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகளை விவரித்தும் நடத்தப்பட்ட தொகுப்பு மாவட்ட கூட்டத்தின் வெளிப்பாடுகளை உள்ளடக்கியது.

நீடித்த  வளர்ச்சி இலக்கு தரவு தாள்: 
இப்புத்தகமானது, நீடித்த வளர்ச்சி இலக்குகளின் கீழ் உள்ள குறிகாட்டிகளின் வழியாக மாநிலத்தின் முன்னேற்றத்தை  ஆர்வத்துடன் அறிய விரும்பும் அனைத்து  தரப்பினரும் பயன்படுத்திக் கொள்ளக்கூடிய வகையில் அமையப் பெற்ற ஒரு ஆவணமாகும். இந்த தரவுதாள், மாநிலத்தின் செயல்திறனை மேம்படுத்த தேவையான இலக்குகளின் மீது சிறப்பு கவனம் செலுத்திடும் வகையில் கொள்கைகளை வடிவமைக்கப் பயன்படும்.

நீடித்த வளர்ச்சி இலக்கினை அடைவதற்கு கருப்பொருள் சார்ந்த  அணுகுமுறை:  
நீடித்த வளர்ச்சி இலக்குகளை உள்ளுர் மயமாக்கல் என்பதன் பகுதியாக, பல்வேறு குறிகாட்டிகளில் உலகளாவிய இலக்குகளை அடைந்திட முயலும் தமிழ்நாடு அரசின் முயற்சிகளுக்கு ஏற்ப தங்களை தகவமைத்துக் கொள்வதில், தேர்ந்தெடுக்கப்பட்ட மக்கள் பிரதிநிதிகளும், அரசுத் துறைகளும், பெரு நிறுவனங்களும், அரசு சாரா அமைப்புகளும் பயன்படுத்திக் கொள்வதற்கு ஏற்ற புத்தகமாகும்.

மாத நாட்காட்டி:
சர்வதேச மற்றும் தேசிய சிறப்பு தினங்களின் கருப்பொருளையொட்டி, ஒவ்வொரு மாதத்திற்கும் ஒவ்வொரு நீடித்த வளர்ச்சி இலக்கு அனுசரிக்கப்படவுள்ளதை விளக்கும் வண்ணம், மாத நாட்காட்டி தயாரிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிக்க | ரூ.63,200 சம்பளத்தில் இந்திய அஞ்சல் துறையில் வேலை!
 
நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான சமூக ஊடகங்கள்: 
இளைஞர்கள், கூட்டாண்மை நிறுவனங்கள், அரசு சாரா நிறுவனங்கள் மற்றும் நீடித்த வளர்ச்சி இலக்குகளில் பணிபுரிய ஆர்வமுள்ள தனிநபர்களுக்கு தமிழ்நாடு அரசால் மேற்கொள்ளப்படும் நீடித்த வளர்ச்சி இலக்கு தொடர்பான செயல்பாடுகள் பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்துவதற்கும், தகவல்களை பரப்புவதற்கும் உருவாக்கப்பட்ட நீடித்த வளர்ச்சி இலக்குகளுக்கான சமூக ஊடகங்களான பேஸ்புக், இன்ஸ்டாகிராம், லிங்க்டின், ட்விட்டர் ஆகியவற்றை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.  
 
இந்நிகழ்ச்சியில், நிதி மற்றும் மனிதவள மேலாண்மைத் துறை அமைச்சர் முனைவர் பழனிவேல் தியாகராஜன், மாநில திட்டக்குழு துணைத் தலைவர் பேராசிரியர் ஜெ. ஜெயரஞ்சன், தலைமைச் செயலாளர் முனைவர் வெ. இறையன்பு, திட்டம் மற்றும் வளர்ச்சி துறை கூடுதல் தலைமைச் செயலாளர் விக்ரம் கபூர், இ.ஆ.ப., ஊரக வளர்ச்சி மற்றும் ஊராட்சித் துறை ஆணையர் டாக்டர் தாரேஸ் அகமது, திட்டம் மற்றும் வளர்ச்சி துறை சிறப்பு செயலாளர் த.சு. ராஜசேகர் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்து கொண்டனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com