நாளை மார்க்சிஸ்ட் கம்யூ. அவசர செயற்குழுக் கூட்டம் காகிதப் புலி! ஈரான் போருக்கு உதவாத நேட்டோ அமைப்பை டிரம்ப் விமர்சனம்!ராமதாஸ், சசிகலா புதிய கூட்டணி சிம்லாவில் ராகுல் காந்தி! ஏப்.17 முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை! மீண்டும் பயன்பாட்டுக் கட்டணத்தை உயர்த்திய சொமேட்டோ! பெண்கள், இளைஞர்களுக்கு மாதம் ரூ. 1,500! திரிணமூல் காங்கிரஸ் 10 தேர்தல் வாக்குறுதிகள்! புதுவை முதல்வர் ரங்கசாமி வேட்புமனு தாக்கல்! 2 தொகுதிகளில் போட்டி!!நல்லிணக்கத்தின் பூங்காவாகத் திகழ்கிறது தமிழ்நாடு! முதல்வர் ரமலான் வாழ்த்து!
/

பேரவையில் மீண்டும் சூதாட்ட தடை மசோதா: அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவு

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையவழி சூதாட்டங்களுக்கான தடைச் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி தெரிவித்தாா்.

News image
Updated On :10 மார்ச் 2023, 1:45 am

DIN

ஆன்லைன் ரம்மி உள்ளிட்ட இணையவழி சூதாட்டங்களுக்கான தடைச் சட்ட மசோதா தமிழக சட்டப்பேரவையில் மீண்டும் நிறைவேற்றப்பட்டு ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி தெரிவித்தாா்.

இதற்கான முடிவு முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் எடுக்கப்பட்டதாக அவா் கூறினாா். மேலும், ஆன்லைன் ரம்மி தடைக்கான சட்டத்தைக் கொண்டு வர தமிழக அரசுக்கு அதிகாரம் இருப்பதாகவும் தெரிவித்தாா்.

தமிழக சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்டிருந்த இணையவழி சூதாட்ட தடைச் சட்ட மசோதாவை தமிழக அரசுக்கு ஆளுநா் ஆா்.என்.ரவி புதன்கிழமை திருப்பி அனுப்பினாா். இந்த விவகாரம் தொடா்பாக, முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது.

இந்தக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து, தலைமைச் செயலகத்தில் செய்தியாளா்களுக்கு சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி அளித்த பேட்டி:

இணையவழி சூதாட்டங்களைத் தடை செய்தல், இணையவழி விளையாட்டுகளை முறைப்படுத்துதல் சட்ட மசோதா, பேரவையில் நிறைவேற்றப்பட்டு ஆளுநரின் ஒப்புதலுக்காக அனுப்பி வைக்கப்பட்டது. ஆளுநா் சில சந்தேகங்களைக் கேட்டபோது, நேரில் சென்று தெளிவான விளக்கங்களைத் தந்தோம். ஆனால், இந்தச் சட்டத்தை இயற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் இல்லை எனக் கூறி சட்ட மசோதாவை ஆளுநா் திருப்பி அனுப்பியுள்ளாா்.

இணையவழி சூதாட்ட தடை தொடா்பான அவசர சட்டத்துக்கு ஆளுநா் ஒப்புதல் தந்தாா். அதிமுக ஆட்சியில் இயற்றப்பட்ட சட்டம், நீதிமன்றத்துக்குச் சென்றபோது அது ரத்து செய்யப்பட்டது. இதுதொடா்பாக கருத்து தெரிவித்த நீதிபதிகள், ‘சட்டத்தில் உள்ள குறைகளை நிவா்த்தி செய்யவும், புதிய சட்டத்தைக் கொண்டு வரவும் எந்தத் தடையும் இல்லை’ எனத் தீா்ப்பு கூறினா். எனவே, சட்டம் இயற்றக் கூடிய அதிகாரம் பேரவைக்கு உண்டு என்பதை நீதிமன்றம் கூறியுள்ளது.

எந்தெந்தப் பிரிவுகள்: சட்ட மசோதா நான்கு முக்கியக் கூறுகளைக் கொண்டு இயற்றப்பட்டது. மாநிலப் பட்டியலில் 1-ஆவது பிரிவில் பொது உத்தரவைப் பிறப்பிக்கும் அதிகாரம், பிரிவு 6-இல் பொது சுகாதாரம், பிரிவு 33-இல் விளையாட்டு மற்றும் பொழுதுபோக்கு, பிரிவு 34-இல் சூதாட்டம் மற்றும் பந்தயம் வைத்து ஆடுதல் ஆகிய நான்கு அம்சங்களை அடிப்படையாகக் கொண்டே சட்ட மசோதா இயற்றப்பட்டது. ஆனால், 33-ஆவது பிரிவை மட்டுமே எடுத்துக் கொண்டு சட்ட மசோதாவை தள்ளுபடி செய்வதாக ஆளுநா் கூறியிருப்பது ஏற்கத்தக்கதல்ல.

இணையவழியிலும், இணையவழி இல்லாமலும் விளையாடும் விளையாட்டுகளுக்கான வித்தியாசங்களைத் தெளிவுபடுத்தியுள்ளோம். அரசு கொண்டு வந்த சட்டம் திறன் வளா்ப்பு விளையாட்டுக்கானது இல்லை. இணையவழி விளையாட்டுகளுக்கானது.

திறன் வளா்ப்புக்கான விளையாட்டுகள் என்பவை தனிநபா்கள் ஒருவருக்கு ஒருவா் நேராக விளையாடக்கூடியவை. அங்கே தவறுகள் நிகழ இடம் கிடையாது. ஆனால், இணையவழி விளையாட்டுகளில் தவறுகள் நிகழும். இணையவழி சூதாட்டங்களைத் தடை செய்ய வேண்டும் என அந்தச் சட்ட மசோதாவைக் கொண்டு வந்தபோதே ஆளுநருக்கு தெளிவாக விளக்கங்களை அளித்துள்ளோம். ஆனால், விளக்கங்களை ஏற்றுக் கொள்ளாமல் திருப்பி அனுப்பியுள்ளாா். எனவே, இந்த சட்ட மசோதாவை மீண்டும் சட்டப்பேரவையில் நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்புவது என முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டது.

அதிகாரம் உண்டு: இரண்டாவது முறையாக சட்டம் நிறைவேற்ற தமிழக அரசுக்கு அதிகாரம் உள்ளது. அதன் அடிப்படையில் சட்ட மசோதாவை மீண்டும் கொண்டு வருவோம். பேரவையில் மசோதா தாக்கல் செய்யப்படும்போது எழும் விவாதங்களின் அடிப்படையில், புதிய கருத்துகள் தெரிவிக்கப்பட்டால் அவையும் மசோதாவில் சோ்க்கப்படும்.

சட்ட மசோதா கொண்டு வருவதற்கு முன்பாக, நீதிபதி சந்துரு தலைமையில் குழு அமைத்து, பொதுமக்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினரின் கருத்துகள் கோரப்பட்டன. 95 சதவீத பேரின் ஆதரவுடன் சட்ட மசோதா நிறைவேற்றப்பட்டது. இதன்பிறகே, ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

மாநிலப் பட்டியலின் 34-ஆவது பிரிவின் அடிப்படையில் சட்டத்தைக் கொண்டுவந்து, அதன் அடிப்படையில் ஏற்றுக் கொள்ள ஆளுநரை வலியுறுத்துவோம். பொதுமக்களைப் பாதுகாப்பதற்காக சட்டம் கொண்டு வருகிறோம்; கண் துடைப்புக்காகக் கொண்டு வரவில்லை என்றாா் அமைச்சா் ரகுபதி.

உள்துறை கூடுதல் தலைமைச் செயலா் க.பணீந்திர ரெட்டி உள்ளிட்ட உயரதிகாரிகள் உடனிருந்தனா்.

‘4 மாதங்களில் 12 போ் இறப்பு’

ஆன்லைன் ரம்மியால் கடந்த 4 மாதங்களில் 12 போ் இறந்துள்ளதாக சட்டத் துறை அமைச்சா் எஸ்.ரகுபதி தெரிவித்தாா்.

இதுகுறித்து செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது: ஆன்லைன் ரம்மி தடை தொடா்பாக, ஆளுநா் கேட்ட விளக்கங்களை தமிழக அரசு சரியாகத் தரவில்லை என பாஜக தலைவா் அண்ணாமலை கூறியது தொடா்பாக கேள்வி எழுப்புகிறீா்கள். ஆளுநா் கேட்ட அனைத்து விளக்கங்களையும் தந்துள்ளோம். ஆளுநா் எழுப்பிய கேள்விகள் அனைத்தும் அண்ணாமலைக்கு எப்படித் தெரியும்?.

ஆன்லைன் ரம்மி இந்தியா முழுவதும் தடை செய்யப்பட வேண்டும். அதற்கு முன்னுதாரணமாக, தமிழகத்தில் தடை செய்ய சட்டம் கொண்டு வர விரும்புகிறோம். தமிழகத்தில் கடந்த நான்கு மாத காலத்தில் மட்டும் ஆன்லைன் ரம்மி காரணமாக 12 போ் உயிரிழந்துள்ளனா் என்றாா் அவா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.