ரூ.12 கோடியில் சட்டைநாதர் கோயில் கும்பாபிஷேகம்: தர்மபுரம் ஆதீனம் பேட்டி

ரூ.12 கோடியில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகிறது. 85 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு சீர்காழி சட்டைநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.
ரூ.12 கோடியில் சட்டைநாதர் கோயில் கும்பாபிஷேகம்: தர்மபுரம் ஆதீனம் பேட்டி


சீர்காழி: ரூ.12 கோடியில் கும்பாபிஷேக பணிகள் நடைபெற்று வருகிறது. 85 யாக குண்டங்கள் அமைக்கப்பட்டு சீர்காழி சட்டைநாதர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது. இதில் 14 உலக நாடுகளிலிருந்து பக்தர்கள் பங்கேற்க உள்ளனர் என்று தர்மபுரம் ஆதீனம் தெரிவித்தார். 

மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி சட்டைநாதர் சுவாமி கோவில் கும்பாபிஷேகம் வரும் மே 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. கும்பாபிஷேகத்தையொட்டி, தருமபுரம் ஆதீனம் யாகசாலை அமைப்பதற்கான பந்தகால் முகூர்த்தத்தை வெள்ளிக்கிழமை தொடங்கி வைத்தார். 

பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், சைவ நெறி தழைத்தோங்கிட தேவார திருப்பதிகங்களை தந்த திருஞானசம்பந்தர் அவதரித்த சட்டைநாதர் கோயில் கும்பாபிஷேகம் மே 24 ஆம் தேதி நடைபெற உள்ளது. 

கோயிலில் உள்ள நான்கு கோபுரங்கள், விமான கலசங்கள், பிரகாரங்கள், உள்பிரகாரத்தில் உள்ள அனைத்து சுவாமிகள், அம்மன் பரிகார தெய்வங்கள் சந்நதிகள் புதுப்பிக்கப்பட்டு வர்ணங்கள் பூசும் திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. 

யாகசாலையொட்டி 85 யாக குண்டங்கள் வேதிகைகளுடன் அமைக்கப்படுகிறது. சுவாமி அம்பாள் சட்டைநாதருக்கு நவாத்திரியையும், விநாயகர் உமா மகேஸ்வரி சுவாமிக்கு பஞ்ச குண்டங்களும் மற்ற பரிவார தெய்வங்களுக்கு ஏகாத்ரி குண்டங்களும் அமைக்கப்படுகிறது. 

120 சிவாச்சாரியார்கள் கொண்டு யாகசாலை பூஜைகள், 125 பேர் வேத பாராயணம் செய்திட நடைபெறுகிறது. 12 திருப்பதிகம் முற்றோறுதலுக்கு  இதுவரை ஆயிரம் பேர் பதிவு செய்துள்ளனர்.  

ஐந்தாயிரம் நாட்டியக் கலைஞர்கள் பங்கேற்று கின்னஸ் சாதனை நாட்டிய நிகழ்ச்சியும் முதல் நாள் நடைபெறுகிறது. அதோடு பட்டிமன்றம், வழக்காடு மன்றம், சொற்பொழிவு ஆன்மீக கச்சேரி ஆகிய ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.

உலக நாடுகளில் 14 நாடுகளில் இருந்து கும்பாபிஷேகத்தை காண பத்தர்கள் பதிவு செய்து வருகின்றனர். மிகப்பெரிய அளவில் சீர்காழி கோயில் கும்பாபிஷேகம் நடைபெறுகிறது. 12 நாள்கள் தொடர்ந்து 12 திருமுறைகள் 18,000 பக்கங்கள் கொண்ட 16 நூல்கள் வெளியிடப்பட உள்ளது. 

முன்னதாக தேரடி சித்தி விநாயகர் மற்றும் பதினெண் புராணேஸ்வரர் கோவில் கும்பாபிஷேகம் ஏப்ரல் 10 ஆம் தேதி நடைபெறுகிறது. ஞானசம்பந்தர், சட்டைநாதர், விநாயகர் சுவாமி சன்னதிகள் முழுவதும் கருங்கல் திருப்பணிகளாக செய்யப்பட்டுள்ளன. 

கும்பாபிஷேகத்தில் ஹெலிகாப்டர் கொண்டு கோபுர கலசங்களில் மலர்கள் தூவிட உபயதாரரால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. ரூ.12 கோடியில் சீர்காழி சட்டைநாதர் கோயில் சுவாமி கும்பாபிஷேக திருப்பணிகள் நடைபெற்று வருகிறது என்று தர்மபுரம் ஆதீனம் கூறினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com