12 மணி நேர வேலை மசோதா திரும்பப் பெறப்பட்டது: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு

12 மணி நேரம் வேலை செய்ய வழிவகை செய்யும் தொழிற்சாலை சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெறுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
12 மணி நேர வேலை மசோதா திரும்பப் பெறப்பட்டது: முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு


சென்னை: பல்வேறு அரசியல் கட்சி உறுப்பினர்களின் எதிர்ப்புகளுக்கிடையே தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டட தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய வழிவகை செய்யும் தொழிற்சாலை சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெறுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

ஏப்ரல் 21 ஆம் தேதி தமிழ்நாடு சட்டப்பேரவையில் தொழிலாளர் நலத்துறை அமைச்சர் கணேசன் தொழிற்சாலை சட்டத்திருத்த மசோதாவை தாக்கல் செய்தார்.

கூட்டணி கட்சியினர், எதிர்க்கட்சியினரின் எதிர்ப்புகளுக்கு இடையே தொழிலாளர்கள் ஒரு நாளில் அதிகபட்சமாக 12 மணி நேரம் வேலை செய்ய அனுமதி அளிக்கும் சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டது.

இந்த 12 மணி நேர வேலை மசோதாவை திமுக கூட்டணி கட்சிகளான காங்கிரஸ், மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட், விடுதஸை சிறுத்தைகள் கட்சிகள் கடுமையாக எதிர்த்தது.

12 மணி நேர வேலை மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்த தொழிற்சங்கள் தமிழ்நாடு முழுவதும் போராட்டங்களில் ஈடுபட்டு வந்தன.

இந்நிலையில், தமிழ்நாடு சட்டப்பேரவையில் நிறைவேற்றப்பட்டட தொழிலாளர்கள் 12 மணி நேரம் வேலை செய்ய வழிவகை செய்யும் தொழிற்சாலை சட்ட திருத்த மசோதாவை திரும்பப் பெறுவதாக முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.

இன்று நாடு முழுவதும் தொழிலாளர் நாள் கொண்டாடப்படுவதையொட்டி, சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் உள்ள மே நாள் பூங்காவில் மே நாள் நினைவு சின்னத்திற்கு சிவப்பு சட்ட அணிந்து சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். முதல்வருடன் திமுக தொழிலாளர் சங்கத்தை சார்ந்த நிர்வாகிகள், அமைச்சர்கள் மரியாதை செலுத்தினர்.

அதனைத்தொடர்ந்து மே நாள் உறுதிமொழி எடுத்துக்கொண்ட முதல்வர் தொழிலாள தோழர்களுக்கு தனது மே நாள் வாழ்த்துகளை தெரிவித்தார்.

பின்னர் அவர் பேசுகையில், தொழிலாளர்களை வாழ்த்தக் கூடிய அரசாக மட்டுமல்லாது, அவர்களை வாழ வைக்கக்கூடிய அரசாகவும் திமுக அரசு செயல்பட்டு வருகிறது. 

சமீபத்தில் அரசு கொண்டு வந்த 12 மணி நேர வேலை சட்டத்தை திமுக தொழிற்சங்கமே எதிர்த்ததை பாராட்டுகிறேன். திமுக ஜனநாயக இயக்கம் என்பதற்கு இதுவும் ஒரு எடுத்துக்காட்டு. 

விட்டுக் கொடுப்பதை அவமானமாக நினைக்கவில்லை, பெருமையாகவே கருதுகிறேன். 

ஒரு சட்டத்தை கொண்டு வருவது துணிச்சல் என்றால் அதனை உடனடியாக திரும்பப் பெறுவதும் துணிச்சல்தான். 

மேலும், 12 மணி நேர வேலை மசோதாவை திரும்பப் பெறுவதாக கூறிய பின்னரும் அவதூறு பரப்புகின்றனர். மசோதா திரும்பப் பெறப்பட்டது குறித்து பேரவை உறுப்பினர்களுக்கு செய்தி குறிப்பு வாயிலாக தெரிவிக்கப்படும் என்று முதல்வர் ஸ்டாலின் கூறினார்.

தொழிற்சங்கங்களின் கோரிக்கையை ஏற்று கடந்த 24 ஆம் தேதி சட்ட திருத்த மசோதா நிறுத்தி வைக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com