மேம்படுத்தப்படும் வடசென்னை: அமைச்சர் சேகர்பாபு தகவல்

வடசென்னை பகுதியை அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்திட சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது.
மேம்படுத்தப்படும் வடசென்னை: அமைச்சர் சேகர்பாபு தகவல்
Updated on
2 min read

வடசென்னை பகுதியை அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளுடன் மேம்படுத்திட வேண்டும் என்ற தமிழக முதல்வர் ஸ்டாலின் கனவினை நனவாக்கும் வகையில் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமம் பல்வேறு முனைப்பான நடவடிக்கைகளை செயல்படுத்தி வருகிறது என்று இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க. ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத்தின் 2023-24ஆம் நிதியாண்டின் அறிவிப்புகளை செயல்படுத்தும் வகையில் மாண்புமிகு இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு இன்று சென்னை, கொளத்தூர் பேப்பர் மில்ஸ் சாலைப் பகுதியில் ரூ.10 கோடி மதிப்பீட்டில் நவீன சந்தை அமைக்கப்படுவது தொடர்பாகவும், புழல், மேட்டுப்பாளையம், சீனிவாசன் தெருவில் அமைந்துள்ள கால்பந்து மைதானத்தை ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் புனரமைப்பது தொடர்பாகவும், புழல், மகாலட்சுமி நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் புதிய பள்ளி வளாகம் ரூ.4 கோடி மதிப்பீட்டில் அமைப்பது தொடர்பாகவும், எண்ணூரில் அமைந்துள்ள தினசரி காய்கறி சந்தை மற்றும் சமுதாயக்கூடம் ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்படுவது தொடர்பாகவும், திருவொற்றியூரில் ரூ.30 கோடி மதிப்பீட்டில் வடசென்னை மக்களுக்குப் பயன்படும் வகையில் சுமார் 5 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையை மேம்படுத்துவது தொடர்பாகவும் ஆகிய இடங்களுக்கு நேரடியாக சென்று களஆய்வு மேற்கொண்டார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த இந்து சமய அறநிலையத்துறை அமைச்சரும் மற்றும் சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழுமத் தலைவருமான பி.கே.சேகர்பாபு  தெரிவித்ததாவது, தமிழக முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி, தமிழ்நாடு சட்டமன்ற பேரவையில் 2023-24 நிதியாண்டிற்கான அறிவிப்புகளில் சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு 50 அறிவிப்புகள் அறிவிக்கப்பட்டது. இதில் சென்னைப் பெருநகர பகுதியிலுள்ள 26 சட்டமன்ற தொகுதிகளின் மேம்பாட்டிற்கான 34 அறிவிப்புகளை துரிதமாக செயல்படுத்தும் வகையில், சென்னைப் பெருநகர பகுதிக்குட்பட்ட பல்வேறு மாநகர பேருந்து நிலையங்களை தரம் உயர்த்தி நவீனமாக்குவது, விளையாட்டு மைதானங்கள் மற்றும் பூங்காக்கள் அமைக்கப்படுவது, மாநகராட்சி பள்ளிகளில் புதிய பள்ளி வளாகங்கள் கட்டித் தருவது, சமுதாய கூடங்களை அமைத்து தருவது, சென்னையிலுள்ள சலவைக் கூடங்களை மறுவளர்ச்சி மேற்கொள்வது போன்ற பல்வேறு பணிகளை துவக்குவதற்கான கள ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டது.

அதனைத் தொடர்ந்து இன்று (8.5.2023) ஆய்வு செய்யப்பட்ட சென்னை, கொளத்தூர் பேப்பர் மில்ஸ் சாலைப் பகுதியிலுள்ள சந்தை, ரூ.10 கோடி மதிப்பீட்டில் நவீன சந்தையாக கட்டித்தரப்படும். மாதவரம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட புழல், மேட்டுப்பாளையம், சீனிவாசன் தெருவில் அமைந்துள்ள கால்பந்து மைதானத்தை சிறந்த முறையில் ரூ.1.50 கோடி மதிப்பீட்டில் புனரமைத்து தரப்படும்.

அதேபோல, புழல், மகாலட்சுமி நகர் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியானது பேரறிஞர் அண்ணா அவர்கள் முதலமைச்சராக இருந்த காலத்தில் 26.04.1967 ஆம் ஆண்டு துவக்கப்பட்ட இப்பள்ளியானது தற்போது வரையில் ஆஸ்ப்ரோ சீட்டில் தான் இயங்கி வருகிறது. அதை கான்கிரீட் தளத்துடன் கூடிய அனைத்து அடிப்படைத் தேவைகளுடன் கூடிய நடுநிலைப் பள்ளியாக மாற்றப்படும்.

திருவொற்றியூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட எண்ணூரில் அமைந்திருக்கின்ற மீன் அங்காடி மற்றும் சாலையோர வியாபாரிகளுக்கு நிரந்தர கடைகள் அனைத்து வசதிகளுடன் கூடிய கடைகள் ரூ.5 கோடி மதிப்பீட்டில் புதுப்பிக்கப்பட்டு சிறந்த முறையில் கட்டித் தரப்படும். அதில் மீன் மற்றும் இறைச்சி கடை தனியாகவும், காய்கறி மற்றும் கடைகள் தனியாகவும் மற்றும் ஒரு திருமண மண்டபம் கட்டித் தரப்படும். அதேபோல, வடசென்னை மக்களுக்குப் பயன்படும் வகையில் பார்வதி நகரிலிருந்து காசிமேடு வரை சுமார் 5 கிலோ மீட்டர் நீளமுள்ள கடற்கரையை ரூ.30 கோடி செலவில் அழகுபடுத்தப்படும். 

சென்னை பெருநகர வளர்ச்சி குழுமத்திற்கு அறிவிக்கப்பட்ட 50 அறிவிப்புகளில், சென்னைப் பெருநகர பகுதியிலுள்ள 26 சட்டமன்ற தொகுதிகளின் மேம்பாட்டிற்கான 34 அறிவிப்புகளில் 16 இடங்களில் கள ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது. மீதமுள்ள 18 இடங்களிலும் வெகு விரைவில் கள ஆய்வு மேற்கொண்டு பணிகளைத் துவக்க இருக்கிறோம் என்று அமைச்சர் தெரிவித்தார்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com