பிரமபுரம் மேவிய பெம்மானுக்கு திருக்குடமுழுக்கு!

ஸ்ரீபிரம்மபுரீசுவரர் சுவாமி திருக்கோயில், மற்றும் ஸ்ரீதிருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் திருக்கோயில்களின் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் மே 24 –புதன்கிழமையன்று நடைபெறுகிறது.
பிரமபுரம் மேவிய பெம்மானுக்கு திருக்குடமுழுக்கு!
Published on
Updated on
2 min read

வேதநெறிதழைக்கவும், சைவநெறிவிளங்கவும் திருவவதாரஞ்செய்த திருஞானசம்பந்தப் பெருமான் அவதரித்து அருள்பெற்ற பெருஞ்சிறப்புடையது சீர்காழி திருத்தலம். இங்குள்ள, திருக்கயிலாயப் பரம்பரைத்தருமை ஆதீனத்திற்குச் சொந்தமான ஸ்ரீதிருநிலைநாயகி அம்பாள் உடனாகிய ஸ்ரீபிரம்மபுரீசுவரர் சுவாமி திருக்கோயில், மற்றும் ஸ்ரீதிருஞானசம்பந்த மூர்த்தி நாயனார் திருக்கோயில்களின் ஜீர்ணோத்தாரண அஷ்டபந்தன மகாகும்பாபிஷேகம் மே 24 –புதன்கிழமையன்று நடைபெறுகிறது.

தலபெயர்களின் சிறப்புபன்னிரு பெயர்களுக்குரிய மூர்த்தி தலதீர்த்தச் சிறப்புகளைக் கொண்டது இத்தலம். பிரமன் வழிபட்டதால் - பிரமபுரம்; இறைவன் மூங்கில் வடிவமாகத் தோன்றியதால் - வேணுபுரம்; சூரனுக்குப் பயந்த தேவர்களுக்குப் புகலிடமாக விளங்கியதால்- புகலி; தேவகுருவும் அசுரகுருவும் வழிபட்டு குருத்துவம் பெற்றமையால் - பெருவெங்குரு; பிரளைய காலத்தில் இறைவன் உமையோடு மாயையைத் தோணியாக கொண்டு வந்து தங்கியிருந்ததால் - தோணிபுரம்; பூமியைப் பிளந்துசென்ற இரணியனைவதம் செய்தவராக மூர்த்தி வழிபட்டதால் - பூந்தராய்; தலைக்கூறாகிய இராகு பூஜித்ததால் - சிரபுரம்; புறா வடிவில் வந்த அக்கினியால் சிபிமன்னன் நற்கதியடந்தமையால் - புறவம்; சண்பைப் புல்லால் மாய்ந்த தம்குலத்தோரால் வந்த பழிதன்னை பற்றாதிருக்ககண்ணபிரான் வழிபட்டதால் - சண்பைநகர்; தில்லைப் பெருமானுடன் வாதாடிய குற்றம்போக, காளி இங்கு வந்து வழிபட்டமையால் - ஸ்ரீகாளி (மருவி சீர்காழி ஆயிற்று); மச்சகந்தியைக்கூடிய கொச்சையாம் பழிச்சொல் நீங்கப்பராசரர் பூஜித்ததால் - கொச்சைவயம்; மலத்தொகுதி நீங்குமாறு உரோசமமுனிவர் வழிபட்டதால் - கழுமலம். இத்தலத்தின் பன்னிரு திருநாமங்களைச் சொன்னாலே தீவினைகள் தீரும் என்பது ஞானசம்பந்தரின் கூற்று.

புராணத்தில் காணப்படும் இதரபெயர்கள்சங்கநிதிபுரம், பதுமநிதிபுரம், சிவாசாரியாபுரம், பரசாரசேஷத்திரம், புனர்சென்மபுரம், கிரிபுரம், உமாபதிபுரம், சீவன்முத்தபுரம், நீலகண்டவெற்பு, குய்யாக்காசி, மூலாதாரக்ஷேத்திரம்.

தீர்த்தங்கள் சிறப்புஇத்தலத்திற்கே உரியதாகச் சிறப்பித்துக் கூறப்படும் 22 தீர்த்தங்களில் பிரம்மதீர்த்தமே பிறவற்றினும் மேலானது. இக்கரையில் தான்ஞானசம்பந்தர் ஞானபாலையுண்டார். சித்திரைப்பெருவிழாவில் ஆளுடையபிள்ளையார் செய்த அற்புதங்கள் அனைத்தும் முன்னிலைப்படுத்தப்படுகிறது. அதில் திருமுலைப்பால் உற்சவம்முக்கியமானது.

இறைவன் காட்சியருளும் சிறப்புகுரு,  லிங்க, சங்கமம் என்ற மூன்று நிலைகளையும் இத்தலத்தில் காணலாம். குருமூர்த்தமாக பெரியபிராட்டியுடன் மலைக்கோயிலுள் எழுந்தருளி அருள்வழங்குகின்றான். இலிங்கத்திருமேனி கொண்டுபிரமபுரீசுவரர் எழுந்தருளி அருள்பாலிக்கின்றர். தோணிபுரச்சிகரத்தின் விமானத்தென் புறக்கோட்டத்தில் நின்ற கோலத்தில் எழுந்தருளியுள்ள ஸ்ரீ சட்டைநாதர் சங்கம வடிவமாகத் திகழ்கிறார். புராணவரலாற்றின்படி நரசிங்கமாகிய தனது கணவர் மயக்கத்துடன் இருப்பதால் அவ்வுருவை நீக்கி பழைய உருப்பெறவேண்டி திருமகள் வழிபட, திருமாலின் நரசிங்கவடிவத்தோலை உரித்துதம்மேலே போர்த்தியுள்ளார். அதனால் இவ்வடிவம் சட்டைநாதர் என அழைக்கப்படுகிறது. ஞானசம்பந்தப் பெருமான்கோயில் இறைவன் இறைவி சன்னதிக்கு நடுவில் இருப்பதுசிறப்பு.

வழிபட்டுபேறுபெற்றவர்கள்: வேதவியாசரும், தமிழ்மொழி அகத்தியரும் வழிபட்ட ஊர் இந்திரன், சூரியன், சந்திரன், அக்னி, ஆதிசேஷன் முதலியார் வழிபட்ட சிறப்பு உடையது. சைவ சமயநன்னெறியில் சரியை, கிரியை, யோகம், ஞானம் என்ற நான்கு நெறிக்கும் உள்ளஅடியவர்கள் திருதொண்டுபுரிந்து வழிபட்டுள்ளனர்.

த்தைப்போற்றிஅருளியுள்ளோர்கள்:மூவர்தேவாரப்பாடல்பெற்றதலம். ஞானசம்பந்தர்மட்டுமே 67 திருப்பதிகங்கள்பாடியுள்ளார். மாணிக்கவாசகர் 'பிடித்தபத்து' என்ற திருவாசகத்தில் பத்துப்பாடல்களை அருளியுள்ளார். பட்டினத்து அடிகள், அருணகிரிநாதர், நம்பியாண்டார் நம்பி, பூந்துருத்திகாடநம்பி, தருமையாதீனத்துபத்தாவது குருமூர்த்தி, திருவாவடுதுறை ஆதீனத்துஎட்டாவது குருமூர்த்திசீர்காழியின் சிறப்பையும் ஞானசம்பந்தரின் பெருமையையும் போற்றிப் பாடியுள்ளனர். அருணாச்சலக் கவிராயர் இயற்றிய தலபுராணம் இத்தலத்திற்குஉண்டு.

கல்வெட்டுச்சான்றுகள் இரண்டாம் மூன்றாம் குலோத்துங்கன், வீரராசேந்திரன்,  ராசகேசரிவர்மன், கிருஷ்ணதேவராயர் ஆகியமன்னர்கள் காலத்தியகல் வெட்டுகள்காணப்படுகின்றன.

திருப்பணி: 1991 ஆம்ஆண்டு நடந்தகும்பாபிஷேகத்திற்கு பிறகு தற்போது, தருமையாதீன 27 வதுகயிலை குருமகாசன்னிதானம் திருஉளப்பாங்கின் வண்ணம் பல்வேறு திருப்பணி வேலைகள் மேற்கொள்ளப்பட்டு சீரூம், சிறப்புமாய் நிறைவுற்றுள்ளது. உள்ளூர், வெளியூர், உள்நாட்டு, அயல் நாட்டுபக்தர்கள் பலரும் இத்திருப்பணி கைங்கரியத்தில் பங்கேற்றுஉள்ளனர்.

யாகசாலைபூஜைகள்: 82 யாககுண்டங்கள் அமைக்கப்பட்டு எட்டுகாலயாகசாலை பூஜை வைபவத்தில் 120க்கும் மேற்பட்ட வேதவிற்பனர்கள் கலந்து கொள்கிறார்கள், மே 20 முதல் ஆரம்பமாகிறது. பூர்வாங்க பூஜை, ஹோமங்கள் மே 16 தொடங்கியது.

கும்பாபிஷேகநாள்மே 24 - புதன்கிழமை நேரம்: காலை 9.30 மணி. சிவநேயச் செல்வர்கள் தங்கள் வாழ்நாளில் அவசியம் பங்கேற்க வேண்டியவிழா. சீர்காழி மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ளது. இத்திருத்தலத்திற்குச் செல்ல தமிழகத்தின் அனைத்து பகுதிகளில் இருந்தும் பேருந்து, ரயில் வசதி உள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com