நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க அரசியல் கட்சிகளுக்கு  உரிமை உள்ளது: உயர்நீதிமன்றம்

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க அரசியல் கட்சிகளுக்கு  உரிமை உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்

நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க அரசியல் கட்சிகளுக்கு  உரிமை உள்ளதாக சென்னை உயர்நீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது. 

தமிழகத்திற்கு நீட் தேர்வில்  இருந்து விலக்கு அளிக்க வேண்டும் என்று மாநில  அரசு தொடர்ந்து மத்திய அரசை வலியுறுத்தி வருகிறது. இது தொடர்பாக சட்டப்பேரவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு குடியரசுத்தலைவரின் ஒப்புதலுக்காக காத்திருக்கிறது. 

இந்நிலையில், திமுக இளைஞரணி  - மாணவரணி மற்றும் மருத்துவரணி சார்பில் 'நீட் விலக்கு - நம் இலக்கு' என்ற தலைப்பில் கையெழுத்து இயக்கம் சமீபத்தில் தொடங்கப்பட்டது. இதன்படி நீட் தேர்வை ரத்து செய்ய மத்திய அரசை வலியுறுத்தி 50 நாள்களில் 50 லட்சம் கையெழுத்துக்கள் பெறப்படுகிறது. 

திமுக நடத்தும் இந்த கையெழுத்து இயக்கம் போன்ற அரசியல் நடவடிக்கைகளை பள்ளிகளில் மேற்கொள்ளக்கூடாது என்று தேசிய மக்கள் சக்தி கட்சித் தலைவர் வழக்கறிஞர் எம்.எல்.ரவி சென்னை உயர்நீதிமன்றத்தில் பொது நல வழக்குத் தொடர்ந்தார். 

நீட் தேர்வு குறித்து உச்சநீதிமன்றம் உறுதி செய்துள்ள நிலையில் சட்டத்திற்கு எதிராக முதல்வர், அமைச்சரே இந்த கையெழுத்து இயக்கத்தை முன்னெடுத்துள்ளதாகவும் பள்ளிகளில் நடத்தப்படும் இந்த கையெழுத்து இயக்கத்துக்கு மாணவர்கள் நிர்பந்திக்கப்படுவதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார். 

இந்த வழக்கு தலைமை நீதிபதி கங்காபூர்வாலா, நீதிபதி பரத சக்கரவர்த்தி அமர்வு முன்பாக இன்று(வியாழக்கிழமை) விசாரணைக்கு வந்தது. 

அப்போது நீதிபதிகள், நீட் தேர்வுக்கு எதிர்ப்பு தெரிவிக்க அரசியல் கட்சிகளுக்கு  உரிமை உள்ளது. மத்திய அரசின் ஒரு முடிவு மாநில நலனுக்கு எதிராக அமைந்தால் வழக்கு தொடரலாம். இதில் மனுதாரர் எப்படி பாதிக்கப்படுகிறார்? 

மேலும் பொதுநல வழக்குகளை தாக்கல் ஒரு வரம்பு உள்ளது. இந்த வழக்கின் உண்மைத்தன்மையை நிரூபிக்க ஒரு லட்சம் ரூபாய் டெபாசிட் செய்ய நீதிபதிகள் கூறியதால், வழக்கை வாபஸ் பெறுவதாக மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இதனால் வழக்கை வாபஸ் பெற அனுமதித்து நீதிபதிகள் வழக்கை  முடித்துவைத்தனர். 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com