

அரசியல் மாண்புகளையோ மாநில உரிமைகளையோ மதிக்காத ஒன்றிய ஆட்சியாளர்களால் இந்திய அரசியலமைப்புச் சட்டமே ஆபத்துக்குள்ளாகியிருப்பதாக முதல்வர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
திமுக இளைஞரணியின் இருசக்கர வாகனப் பேரணியை முன்னிட்டு கட்சியின் தொண்டர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் எழுதியுள்ள கடிதத்தில், முக்கடல் தாலாட்டும் கன்னியாகுமரியில் முத்தமிழறிஞர் கலைஞர் நிறுவிய வானுயர அய்யன் திருவள்ளுவர் சிலை வாழ்த்துவது போல, அண்ணல் காந்தியடிகள் மண்டபத்தின் அருகிலிருந்து உரிமைப் போர் முழக்கத்துடன் கட்சியின் இரு சக்கர வாகனப் பேரணியை நவம்பர் 15 அன்று தொடங்கி வைத்திருக்கிறார் இளைஞரணியின் செயலாளரும் இளைஞர்நலன் – விளையாட்டுத்துறை - சிறப்பு திட்டங்கள் செயலாக்கத்துறை அமைச்சருமான உதயநிதி.
எத்தனையெத்தனை நினைவுகளோ நெஞ்சத்தில் சுழல்கின்றன. தான் வளர்த்த பிள்ளை, தன் தோளுக்கு மேல் வளர்ந்து, தானே தன் கடமைகளை முனைப்புடனும் சிறப்புடனும் நிறைவேற்றும் ஆற்றலைப் பார்த்து மகிழும் தாயின் மனநிலையுடன், உதயநிதியையும், அவர் தலைமையிலான இளைஞரணியில் உள்ள ஒவ்வொருவரின் செயலாற்றலையும் கண்டு மகிழ்கிறேன். மாநாடு சிறக்க தாயுள்ளத்துடன் வாழ்த்துவதுடன், தாய்ப் பாசத்துடன் சில அறிவுரைகளை மாநாடு நடைபெறும்வரை அவ்வப்போது இத்தகைய மடல் வாயிலாக வழங்குவேன்.
அரசியல் மாண்புகளையோ மாநில உரிமைகளையோ மதிக்காத ஒன்றிய ஆட்சியாளர்களால் இந்திய அரசியலமைப்புச் சட்டமே ஆபத்துக்குள்ளாகியிருக்கிறது. உச்சநீதிமன்றத் தீர்ப்புகளையும் கூட மதிக்காத நியமனப் பதவிக்காரர்களின் அடாவடிகள் கூட்டாட்சித் தத்துவத்தைச் சிதைக்கின்றன.
மதவாத – மொழி ஆதிக்க - மானுட விரோத அரசியல் ஒவ்வொரு மாநில மக்களையும் நடுங்கச் செய்கிறது. இவை எல்லாவற்றுக்கும் எதிரான நல்ல தீர்ப்பை 2024-ஆம் ஆண்டில் மக்கள் எழுதப் போகிறார்கள். அதற்கான விழிப்புணர்வுப் பரப்புரைதான் இளைஞரணி மேற்கொண்டிருக்கும் இரு சக்கர வாகனப் பேரணி.
கருப்பு-சிவப்பு இளைஞர் படை மக்களிடம் செல்லட்டும். மாநில உரிமைகள் பறிக்கப்படுவதால் நீட் தேர்வு போன்ற கொடூரங்கள் எத்தனை உயிர்களைப் பறித்துள்ளன என்பதை எடுத்துச் சொல்லட்டும். நீட் விலக்கிற்கான அரைக் கோடி கையெழுத்துகளைப் பெறட்டும். ஜனநாயகப் போர்க்களத்தில் வெல்லட்டும்! இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.