அன்பில் மகேஸ் பேச்சுவார்த்தை: போராட்டத்தை கைவிட்ட ஆசிரியர்கள்

தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உடன் நடத்திய பேச்சுவார்த்தையின் நிறைவாக, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.
அன்பில் மகேஸ் பேச்சுவார்த்தை: போராட்டத்தை கைவிட்ட ஆசிரியர்கள்


சென்னை: தமிழக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஸ் உடன் நடத்திய பேச்சுவார்த்தையின் நிறைவாக, போராட்டத்தில் ஈடுபட்டு வந்த பகுதிநேர ஆசிரியர்கள் போராட்டத்தைக் கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.

பணி நிரந்தரம் கோரிக்கை நிறைவேற்றப்படாத நிலையிலும், மருத்துவக் காப்பீடு மற்றும் ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டதாலும், அமைச்சர் அளித்த வாக்குறுதியை அடுத்தும், கடந்த 11 நாள்களாக நடத்திவந்த போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக பகுதிநேர ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் பணிபுரிந்துவரும் பகுதி நேர ஆசிரியர்கள், சென்னை கல்லூரி சாலையில் உள்ள பேராசிரியர் கல்வி வளாகத்தில் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாகத் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

சென்னை நுங்கம்பாக்கம் பேராசிரியா் அன்பழகன் பள்ளிக் கல்வி வளாகத்தில், பணி நிரந்தரத்தை வலியுறுத்தி பகுதி நேர ஆசிரியா்களும், ஊதிய முரண்பாட்டை களைய வலியுறுத்தி இடைநிலை பதிவு மூப்பு சங்கத்தின் ஆசிரியா்களும், பணி நியமனம் வழங்கக் கோரி 2013-இல் ‘டெட்’ தோ்ச்சி பெற்ற ஆசிரியா்கள் சங்கத்தினரும் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

போராட்டத்தில் ஈடுபட்டு வந்த ஆசிரியர்கள் சங்கத்தினருடன் பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் அதில் உடன்பாடு ஏற்படவில்லை.

இது தொடர்பாக நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி மற்றும் பள்ளிக்கல்வித்துறை உயரதிகாரிகள் உள்ளிட்டோருடன் ஆலோசனை நடத்தினார்.

பிறகு செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் அன்பில் மகேஸ், சமவேலைக்கு சம ஊதியம் கோரிக்கையை ஆய்வு செய்ய 3 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். இந்தக் குழு 3 மாதங்களில் ஆய்வு செய்து அறிக்கை அளிக்கும் எனக் குறிப்பிட்டிருந்தார். இதனிடையே அரசின் இந்த நடவடிக்கையில் திருப்தி இல்லாததால், ஆசிரியர்கள் போராட்டம் தொடரும் என ஆசிரியர்கள் சங்கத்தினர் தெரிவித்திருந்தனர்.

இது குறித்து அந்தந்தக் கூட்டமைப்புகளின் நிா்வாகிகளுடன் பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள், அமைச்சா் நடத்திய பேச்சுவாா்த்தையில் எந்தவித முன்னேற்றமும் ஏற்படாததால் அவா்கள் போராட்டத்தை தொடர்ந்தனா்.

இந்த நிலையில், பகுதி நேர சிறப்பாசிரியா்களுக்கு ரூ.2,500 உயா்த்தப்பட்டு தொகுப்பூதியமாக ரூ. 12,500 உயர்த்தப்படும் என்றும், ரூ.10 லட்சம் மதிப்பிலான மருத்துவ காப்பீட்டுத் திட்டம் வழங்கப்படும் என்று அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி புதன்கிழமை இரவு அறிவித்திருந்தார்.

இன்று காலை, பகுதிநேர ஆசிரியர்களுடன் அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பேச்சுவார்த்தை நடத்தியதைத் தொடர்ந்து, பகுதிநேர ஆசிரியர்கள் தங்களது போராட்டத்தை தற்காலிகமாக கைவிடுவதாக அறிவித்துள்ளனர்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com