
அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தங்களை கூட்டணி அழைத்ததாகவும், ஆனால் அவரின் அழைப்பை ஏற்க மறுத்ததாகவும் நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார்.
சேலத்தில் இன்று (அக்டோபர் 19) செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த சீமான் கூறியதாவது: “மாநில அரசு பிரமாதமாக கடிதம் எழுதுகிறது. ஆனால் கடிதம் எழுதுவதற்காகவா மக்கள் ஆட்சியில் அமர்த்தினார்கள். தமிழ்நாட்டிற்கு தண்ணீர் தர மறுக்கும் காங்கிரஸ் கட்சியுடன் திமுக கூட்டணியை முறித்துக் கொள்ளுமா” என கேள்வி எழுப்பினார்.
மேலும் பேசிய அவர், “வரும் நாடாளுமன்ற தேர்தலில் நாம் தமிழர் கட்சி நிச்சயமாக தனித்து போட்டியிட உள்ளது. அதிமுக கூட்டணிக்கு வருமாறு எடப்பாடி பழனிசாமி அழைப்பு விடுத்தார். ஆனால் நான் அவரின் அழைப்பை ஏற்றுக் கொள்ள முடியாது என்று கூறிவிட்டேன். பிரதமர் மோடி தமிழகத்தில் போட்டியிட்டால் அவரை எதிர்த்து நான் போட்டியிடுவேன்” எனவும் கூறினார்.
இதையும் படிக்க: இஸ்ரேலுக்கு சர்வதேச நாடுகள் கண்டனம்!
2021 தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி அமைத்திருந்த அதிமுக கடந்த செப்டம்பரில் பாஜகவுடனான கூட்டணி முறிந்ததாக அறிவித்தது. அதைத் தொடர்ந்து மற்ற கட்சிகளுடன் அதிமுக கூட்டணி அமைத்து தேர்தலை எதிர்கொள்ளும் என்று கூறப்பட்ட நிலையில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியின் அழைப்பை சீமான் நேரடியாக மறுத்துள்ளதும், அதை பொதுவெளியில் தெரிவித்ததும் அதிமுகவுக்கு பின்னடைவாக பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.