தமிழகத்தில் ஆளுநர், முதல்வர் பேசினால் பிரச்னைகள் தீரும்: தமிழிசை சௌந்தரராஜன்

தமிழகத்தில் ஆளுநர் மற்றும் முதல்வர் பேசினால் பிரச்னைகள் தீரும் என்று புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் ஆளுநர், முதல்வர் பேசினால் பிரச்னைகள் தீரும்: தமிழிசை சௌந்தரராஜன்

தமிழகத்தில் ஆளுநர் மற்றும் முதல்வர் பேசினால் பிரச்னைகள் தீரும் என்று புதுவை துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் தெரிவித்துள்ளார்.

புதுச்சேரி துணைநிலை ஆளுநர் மாளிகையில்  ஜம்மு,  காஷ்மீர் மற்றும் லடாக் தின விழா செவ்வாய்க்கிழமை காலை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு பின்னர் செய்தியாளர்களிடம் துணைநிலை ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியதாவது: 

புதுவை துணைநிலை ஆளுநர் மாளிகை முன்பு மூன்றடுக்கு பாதுகாப்பு இருந்தது. நான்  ஆளுநராக பதவி ஏற்றபின் அதை எடுத்துவிட்டு ஓரடுக்கு பாதுகாப்பாக குறைத்துக் கொண்டேன். எதிர்க்கட்சியினர் தங்களது கோரிக்கையை என்னை சந்தித்து எப்போது வேண்டுமானாலும் பேசி தீர்த்துக் கொள்ளலாம். ஆகவே ஆர்ப்பாட்டம் வன்முறை போன்றவற்றில் யாரும் ஈடுபட வேண்டாம். எனது பாதுகாப்பை அதிகாரிகள் பார்த்துக் கொள்வார்கள்.

புதுச்சேரி சென்டாக் கலந்தாய்வு தாமத விவகாரத்தில், அதிகாரிகள் தவறிழைத்து விட்டார்கள். அதனால் அவர்கள் மீது நிச்சயம் நடவடிக்கை இருக்கும். அதே நேரத்தில் மாணவர்கள் பாதிக்காத வகையில் நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சரிடம் சந்தித்து வலியுறுத்தியுள்ளேன். அவரது நடவடிக்கை காரணமாக மாணவர்களுக்கு எந்த வித பாதிப்பும் ஏற்படாது. 

ஆகவே கலந்தாய்வு தாமதமாக நடந்த நிலையில் கல்லூரிகளில் சேர்ந்த மருத்துவ மாணவர்கள் அச்சப்பட தேவையில்லை. புதுவை முதல்வர், அமைச்சர்கள்,  எம்எல்ஏக்கள் என்னை எப்போது வேண்டுமானாலும் சந்தித்து பேசலாம். அதிகாரிகளது செயல்பாடு தாமதத்தால் சில புதுவை முதல்வருக்கு சங்கடங்கள் நேர்ந்திருக்கலாம். அது குறித்து  முதல்வரிடம் பேசியுள்ளேன். ஆகவே பிரச்னைகள் பேசி தீர்க்கப்படும்.

தமிழக ஆளுநர் அரசு மசோதாக்களுக்கு கையெழுத்திடாமல் இருப்பது குறித்த பிரச்னையில் கருத்துக் கூற விரும்பவில்லை. தெலங்கானாவிலும் இதுபோன்ற பிரச்சனை இருந்தது. கையெழுத்திடாததற்கு சரியான காரணத்தை அரசுக்கு விளக்கி இருந்தேன். அதன் அடிப்படையில் முதல்வருடன் பேசி பிரச்சனைகள் தீர்க்கப்பட்டு விட்டது. ஆகவே அதுபோல தமிழக முதல்வரும், ஆளுநரும் அமர்ந்து பேசி பிரச்சினையை தீர்க்க வேண்டும். 

ஆளுநர், முதல்வரும் சுமூகமாக இருந்தால் மக்கள் நலத்திட்டங்கள் செயல்படுத்தப்படும். கேரளம் தேவாலயத்தில் குண்டு வெடிப்பு தொடர்பாக புதுவையில் உள்ள தேவாலங்களில் பலத்த பாதுகாப்பும் மேற்கொள்ளப்பட்டுள்ளது. மழைக்காலத்திற்கு தேவையான அனைத்து முன்னேற்பாடுகளும் எடுக்கப்பட்டுள்ளன என்றார்.

முன்னதாக நடந்த கலை நிகழ்ச்சியில்  ஜம்மு காஷ்மீர் கலைஞர்களுடன் சேர்ந்து துணைநிலை ஆளுநர் நடனம் ஆடினார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com