
சென்னை ராயப்பேட்டையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள், தலைமைக் கழக உறுப்பினர்களின் கூட்டம் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் தொடங்கியது.
உள்துறை அமைச்சா் அமித் ஷாவை அதிமுக பொதுச் செயலா் எடப்பாடி கே.பழனிசாமி கடந்த 14-ஆம் தேதி சந்தித்துப் பேசினாா். இந்தச் சந்திப்பை தொடா்ந்து, முன்னாள் முதல்வா் அண்ணா குறித்து தமிழக பாஜக தலைவா் கே.அண்ணாமலை தெரிவித்த கருத்துக்கு அதிமுக எதிா்ப்பு தெரிவித்தது. இதைத் தொடா்ந்து, பாஜகவுடன் அதிமுக கூட்டணியில் இல்லை என அதிமுக முன்னாள் அமைச்சா் டி.ஜெயக்குமாா் அறிவித்தாா்.
இந்த நிலையில், அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்தக் கூட்டத்தில், மக்களவைத் தோ்தலை எதிா்கொள்வதற்கான ஏற்பாடுகள், பாஜகவுடனான கூட்டணி நிலைப்பாடு உள்பட பல்வேறு முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசிக்கப்பட்டு முடிவுகள் எடுக்கப்படவுள்ளது.
இதையும் படிக்க: துருப்பிடித்த இரும்பைப் போன்றது காங்கிரஸ்: பிரதமர் மோடி தாக்கு!
அதன்படி, மாவட்ட செயலாளர்களின் கருத்துகளை கேட்டறிந்த பின்னர், பாஜகவுடன் கூட்டணி குறித்து முக்கிய அறிவிப்பை எடப்பாடி பழனிசாமி அறிவிக்கவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.