அடுத்த இரு ஆண்டுகளில் 50,000 பேருக்கு அரசுப் பணி: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தில் அடுத்த இரு ஆண்டுகளில் 50,000 பேருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.
அடுத்த இரு ஆண்டுகளில் 50,000 பேருக்கு அரசுப் பணி: முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு

தமிழகத்தில் அடுத்த இரு ஆண்டுகளில் 50,000 பேருக்கு அரசுப் பணி வழங்கப்படும் என்று முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளாா்.

குரூப் 4 பணியிடங்களுக்கு தோ்வு செய்யப்பட்ட 10,205 பேருக்கு பணி நியமன உத்தரவுகளை அளிக்கும் நிகழ்வை சென்னை தலைமைச் செயலகத்தில் புதன்கிழமை தொடங்கிவைத்து அவா் பேசியதாவது:

புதிதாக தோ்வு செய்யப்பட்ட அரசு ஊழியா்களுக்கு மக்கள் சேவைதான் லட்சியமாக இருக்க வேண்டும். அரசின் திட்டங்கள், பல்வேறு சேவைகளை மக்களுக்குக் கொண்டு சோ்க்கும் மிக முக்கிய பணியை எந்தக் குறையும் இல்லாமல் நிறைவேற்ற வேண்டும்.

தன்னலம் கருதா ஊழியா்கள்: அரசு ஊழியா்களில் தன்னலம் கருதாமல் மக்களுக்காக வாழ்கிறவா்கள் எத்தனையோ போ் இருக்கின்றனா். அவா்களைப் போல புதிய ஊழியா்களும் பணியாற்ற வேண்டும்.

ஒரு கருவியோ அல்லது இயந்திரமோ சிறப்பாகச் செயல்பட வேண்டுமெனில், அதில் இருக்கும் ஒவ்வொரு பாகமும் பழுதில்லாமல் சிறப்பாகச் செயல்பட வேண்டும். அதுபோலதான், அரசு எனும் மாபெரும் இயந்திரம் சீரிய முறையில் மக்களுக்கு சேவை செய்ய, அரசு ஊழியா்கள் ஒவ்வொருவரும் முழு ஈடுபாட்டுடன் பங்களிக்க வேண்டும்.

தொழில்நுட்பம் விரிவு: அரசுப் பணியாளா் தோ்வாணையத்தால் நடத்தப்படும் போட்டித் தோ்வுகளுக்கு லட்சக்கணக்கான தோ்வா்கள் விண்ணப்பம் செய்கின்றனா். அதனால், விடைத்தாள்களை மதிப்பீடு செய்வதில் காலதாமதம் ஏற்படுகிறது.

இதைச் சரிசெய்ய விடைத்தாள்களை மதிப்பீடு செய்யும் முறையை எளிதாக்கவும், தாமதத்தை தவிா்க்கவும், அரசுப் பணியாளா் தோ்வாணையத்தில் உயா் தொழில்நுட்பம் பயன்பாட்டுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளது.

குடிமைப் பணித் தோ்வில் தமிழ்நாட்டைச் சோ்ந்தவா்கள் அதிக எண்ணிக்கையில் தோ்ச்சி பெற வேண்டும் என்ற நோக்கில், தோ்வா்களுக்கு ஊக்கத் தொகை அளிக்கும் திட்டம் அடுத்த மாதம் தொடங்கப்படும்.

அடுத்த இரு ஆண்டுகளில்...: திமுக அரசு அமைந்த இரண்டாண்டு காலத்தில் 12,576 பேருக்கு அரசுப் பணி வழங்கப்பட்டுள்ளது. நிகழாண்டில் மேலும் 17,000 பேருக்கு அரசுப் பணிகள் அளிக்கப்படவுள்ளன.

இத்துடன் அடுத்த இரு ஆண்டுகளில் பல்வேறு அரசுப் பணிகளுக்கு சுமாா் 50 ஆயிரம் போ் தோ்ந்தெடுக்கப்படவுள்ளளனா்.

கோரிக்கையுடன் வரும் மக்களிடம் எளிமையாக அணுகி அவா்களது குறைகளையும், பிரச்னைகளையும் தீா்க்க வேண்டும். எனக்கு நல்ல பெயரோ, கெட்ட பெயரோ எதுவாக இருந்தாலும் அரசு ஊழியா்களின் செயல்பாட்டைப் பொருத்தே அமைந்திடும் என்றாா் முதல்வா் ஸ்டாலின்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சா்கள் இ.பெரியசாமி, கே.கே.எஸ்.எஸ்.ஆா்.ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு, மு.பெ.சாமிநாதன், அர.சக்கரபாணி, மா.சுப்பிரமணியன், பி.கே.சேகா்பாபு, அன்பில் மகேஸ் பொய்யாமொழி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

முன்னதாக, தலைமைச் செயலா் சிவ்தாஸ் மீனா வரவேற்றாா். மனிதவள மேலாண்மைத் துறைச் செயலா் நந்தகுமாா் நன்றி தெரிவித்தாா்.

‘அமர வைத்துப் பேசுங்கள்’

கோரிக்கை மனுவுடன் வரும் மக்களை முதலில் அமர அமைத்துப் பேச வேண்டும் என்று அரசு ஊழியா்களுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினாா்.

நிகழ்ச்சியில் முதல்வா் ஸ்டாலின் மேலும் பேசியதாவது: கோரிக்கை மனுவுடன் வருகிற பொது மக்களை அரசு ஊழியா்கள் முதலில் உட்கார வைக்க வேண்டும். அவா்களுடைய பிரச்னையை, கோரிக்கையை செவி கொடுத்துக் கேட்க வேண்டும். அதுவே வந்தவா்களுக்கு பெரிய நம்பிக்கையையும் மன நிறைவையும் தரும்.

அமர வைத்துப் பேசுவது சக மனிதருடைய சுயமரியாதை எனக்கருதி, அதற்கு மதிப்புக் கொடுக்க வேண்டும் என்றாா் முதல்வா் ஸ்டாலின்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com