காவிரி நீர் வழக்கை விசாரிக்க புதிய அமர்வு அமைக்கப்படும் என்று உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி டி.எய்.சந்திரசூட் திங்கள்கிழமை தெரிவித்துள்ளார்.
காவிரி நடுவர் மன்ற இறுதி தீர்ப்பின் படி, தமிழகத்துக்கு வழங்க வேண்டிய காவிரி நீரை கர்நாடகம் முறையாக வழங்காத காரணத்தால் அண்மையில் நடைபெற்ற காவிரி மேலாண்மை வாரிய கூட்டத்திலிருந்து தமிழக பிரதிநிதிகள் வெளிநடப்பு செய்தனர்.
இதனைத் தொடர்ந்து தமிழகத்துக்கு காவிரி நதியில் இருந்து உரிய நீரைத் திறந்துவிட வலியுறுத்தி உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு சார்பில் கடந்த வாரம் மனு தாக்கல் செய்தது.
இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி அமர்வு முன்பு இன்று விசாரணைக்கு வந்த நிலையில், காவிரி விவகாரம் தொடர்பான வழக்கை விசாரிக்க இன்றே புதிய அமர்வு நியமிக்கப்படும் என்றும், அந்த அமர்வில் தங்கள் வாதங்களை முன் வைக்கவும் தலைமை நீதிபதி அறிவுறுத்தியுள்ளார்.
முன்னதாக, தமிழக அரசு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்த நிலையில், பற்றாக்குறை நீரின் அளவு 37.97 டி.எம்.சி.யில் இருந்து தமிழகத்துக்கு 10 டி.எம்.சி. வரை தண்ணீர் வழங்கப்படும் என்று கர்நாடக துணை முதல்வர் டி.கே.சிவகுமார் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.